Amy Jackson: "இந்திய ஆண்களின் ட்ரோல்களால் வருத்தம்!" - போட்டோஷூட் குறித்து எமி ஜாக்சன்

`மதராசப்பட்டினம்' படத்தில் துரையம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு `ஐ', `2.0', `தெறி', `கெத்து', `தங்க மகன்' எனப் பல படங்களில் நடித்தார்.

தற்போது ஹாலிவுட்டில் நடித்து வரும் இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன், வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் தனது புதிய படத்தின் லுக்கைப் பகிர்ந்திருந்தார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் எமியின் இந்த புது லுக் பார்ப்பதற்கு 'ஓப்பன்ஹெய்மர்' படத்தின் நடிகர் சிலியன் மர்பி லுக்குடன் ஒத்துப்போவாதாக ட்ரோல் செய்து சமூகவலைதளங்களில் வைரலாக்கினர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் வைரலான தன்னைப் பற்றி பரவும் ட்ரோல்கள் குறித்து வருத்தத்துடன் பேசியுள்ள நடிகை எமி ஜாக்சன், "நான் ஒரு நடிகை, என் வேலையை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்து வருகிறேன். கடந்த மாதம், இங்கிலாந்தில் நான் நடிக்கும் என் புதிய படத்திற்காக எனது உடல் எடையைக் குறைத்து முழு அர்ப்பணிப்புடன் அதற்கான வேலைகளைச் செய்து வருகிறேன்.

அதுதொடர்பாக நான் பகிர்ந்திருந்தப் புகைப்படங்களைப் பார்த்து இந்தியாவிலிருந்து வரும் ஆன்லைன் ட்ரோல்கள் என்னை வருத்தமடையச் செய்கிறது. அதிலும் குறிப்பாக ஆண்களின் கூக்குரல்கள் மிகவும் வருத்தமடையச் செய்கின்றன.

எமி ஜாக்சன்

ஒரு படத்திற்காகத் தங்கள் தோற்றத்தைக் கடுமையாக மாற்றும் ஆண் நடிகர்களை பலரும் பாராட்டுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு பெண், தன் படத்திற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைலையும், மேக்கப்பையும் போட்டு கடுமையாக உழைத்து கெட்டப்பை மாற்றும்போது அவர்கள் அழகாகயில்லை என்றால் ட்ரோல் செய்கிறார்கள். அவர்களைக் கிண்டல் செய்ய தமக்கு முழு உரிமை இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.



from விகடன்

Comments