சந்திரமுகி 2: அதே டெய்லர்... அதே வாடகை; `லகலக' சந்திரமுகி வென்றதா, கொன்றதா?!

பணக்கார ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில் அடுத்தடுத்து விபத்துகள் நடக்கின்றன. குடும்பமாக குலதெய்வ கோயிலை புனரமைத்து, யாகம் நடத்தி வழிபடச் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். இந்த வேலைகள் முடியும் வரை வேட்டையபுர அரண்மணையில் தங்கலாம் என முடிவு செய்கின்றனர்.

பல வருடங்களாகப் பூட்டியிருந்த அரண்மனையில் ஆட்கள் நுழைந்த பிறகு, அரண்மனையில் இருந்த சந்திரமுகி ஆவியும் கூடுதல் போனஸாக வேட்டையன் ஆவியும் வெளியே வருகின்றன. அப்பறம் என்ன ஆவிக்கும் ஆவிக்கும் சண்டை, அதை ஊருக்குக் கிளம்பாமல் அங்கேயே தங்கி மொத்த குடும்பமே வேடிக்கை பார்ப்பதுதான் மீதிக்கதை.

சந்திரமுகி 2

பாண்டியன், வேட்டையன் (ஒரு ட்விஸ்டோட!) என இதில் லாரன்ஸுக்கு இரண்டு கேரக்டர்கள். வேட்டையன் கேரக்டருக்கான கெட்டப் லாரன்ஸுக்கு செட்டாகி இருக்குறது. ஆனால், வேட்டையனாக வரும் காட்சிகளுக்காவது வழக்கமான 'ரஜினி' மேனரிஸத்தை பின்பற்றாமல் கொஞ்சம் வெரைட்டி காட்டியிருக்கலாம் மாஸ்டரே! குறிப்பாக, ரஜினி நடித்த படத்தின் இரண்டாம் பாகம் என்பதாலோ என்னவோ ரஜினியின் மேனரிஸம் படம் முழுக்க எட்டிப் பார்க்கிறது. லாரன்ஸிடம் ரஜினி மாடுலேசன் வந்தால் பரவாயில்லை. ஒய்.ஜி. மகேந்திராவிடமும் ரஜினி மேனரிசமா?

நடிகைகள் லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா எனப் பலர் இருந்தாலும் லட்சுமி மேனனின் கதாபாத்திரத்திற்கு மட்டுமே சற்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். மற்றவர்கள் படம் முழுக்கக் குடும்பத்தோடு குடும்பமாக அந்த பேய் பங்களாவுக்குள் இருக்கிறார்கள், அவ்வளவே! ராதிகா, சுரேஷ் சந்திர மேனன், ரவி மரியா, விக்னேஷ், அவர்களின் மனைவிகள், குடும்பங்கள், குழந்தைகள், வீட்டு வேலையாட்கள், சித்தர், சாமியார், பாம்பு எனக் காட்சிக்கு காட்சி அலுப்பு தட்டும் ஒரு லோடுக்கும் மேலான கதாபாத்திரங்கள் வேலையில்லாமலே வந்துபோகிறார்கள்.

சந்திரமுகி 2

பழைய சந்திரமுகி முருகேசனாக வரும் வடிவேலு ரகளையான மாடுலேஷன்கள் செய்தாலும், படமே மாடுலேஷன் மிஸ்ஸாகித் தவிப்பதால் கனெக்ட் ஆகவில்லை. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வந்த `கோவாலு!' கேரக்டர், பேய் குறித்து லாரன்ஸ் - வடிவேலு பேசும் காட்சிகள் மட்டுமே ஆறுதல். சந்திரமுகி பட போஸ்டர், டிரெய்லர், டீசர், ட்விட்டர் என எங்கெங்கிலும் இருந்தார் கங்கனா ரணாவத். முதல் பாதி முழுக்கவே 'கங்கனா எங்கண்ணா?' என்று கேட்க வைத்து இரண்டாம் பாதியில் என்ட்ரி கொடுக்கும் அவருமே படத்தைக் காப்பாற்றவில்லை என்பதுதான் சோகம். சந்திரமுகியின் லுக்கிலிருந்து நடனம், நளினம், நடிப்பு என பல விஷயங்கள் கங்கனாவிற்கு ஒட்டவேயில்லை.

சந்திரமுகி 2

அதிலும் அவர் பயம் காட்டக் கொடுக்கும் சில முகபாவனைகளுக்கு தியேட்டரில் சிரிப்பு சத்தம்தான் கேட்கிறது. அதிலும் வேட்டையனையா, வேட்டை நாய்களையா யாரைப் பழிவாங்குவது என க்ளைமாக்ஸில் குழம்பிவிடுகிறார். பின்னணி இசை, `ஆஸ்கர் வாங்கிய கீரவாணியா இசையமைப்பாளர்?' எனக் கேட்க வைக்கிறது. பாடல்களில் கிளாசிக் டச்சில் வரும் 'ஸ்வாகதாஞ்சலி'யும், 'ரா... ரா...' பாடலின் ரீகிரியேஷனும் ரசிக்க வைக்கின்றன. படத்தின் ஓப்பனிங்கில் வரும் சண்டைக்காட்சியில் இருந்து ஆரம்பித்து க்ளைமேக்ஸில் நடக்கும் பூஜை வரைக்கும் பல சிஜி காட்சிகள் படத்திலிருந்தாலும், அவை அனைத்துமே படு சுமார் ரகம்! படத்தின் ஒரே ஆறுதலாக இருப்பது தோட்டா தரணியின் கலை இயக்கம்தான்.

சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை பேய் படமாக இல்லாமல் மனநல பிரச்னையாக கையாண்டு வரலாற்று வெற்றி கண்ட இயக்குநர் பி.வாசு, இதில் நிறையவே சறுக்கியிருக்கிறார். காமெடியும் இல்லாமல் பயமும் காட்டாமல் முதல் பாதி நகர, குழப்பமான திரைக்கதையால் இரண்டாம் பாதியும் அடி வாங்குகிறது. அதேபோல், முதல் பாகத்தில் சொல்லப்பட்ட வேட்டையன் கதைக்கும் இந்தப் பாகத்தில் சொல்லப்படும் வேட்டையன் கதைக்குமே அத்தனை முரண்.

சந்திரமுகி 2

சந்திரமுகி பார்ட் 1 படத்தில் ரஜினிக்குப் பதிலாக லாரன்ஸ், ஜோதிகாவுக்குப் பதிலாக கங்கனா, நயன்தாராவுக்குப் பதிலாக மஹிமா நம்பியார், தோட்டக்காரனுக்குப் பதிலாக பால்காரர் இப்படி பல கட் & பேஸ்ட். கதாபாத்திரங்கள் கூட பரவாயில்லை. படத்தில் பாடல்களும் 'தேவுடா' பாட்டுக்கு பதில் அதே போல் ஒரு பாடல், 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்' பாட்டுக்குப் பதில் அதே போல் ஒரு பாடல் என இருப்பது பேரதிர்ச்சி. ஆனால், படத்தின் அதிர்ச்சிகளில் இவை அடையாளப்படாமலும் போகலாம்.

சந்திரமுகி 2

ஊருக்கு வெளியே ஒரு அரண்மனை, அந்த அரண்மனைக்குள் `யாருமே இந்தப் பக்கமாக இருக்கற ரூமுக்கு போகாதீங்க' என்கிற ஒரு அறை, வௌவால், நாய் ஊளை, ஆந்தை அலறல், பழிவாங்கத் துடிக்கும் ஆத்மா இப்படித் தமிழ் சினிமாவில் ஓவர் டூட்டி பார்த்து ஏற்கெனவே ஓய்ந்து போன பேய் கான்சப்ட்டை இன்ஸ்டால்மென்ட்டில் எடுத்து வந்திருக்கிறார்கள். வேட்டையன் சந்திரமுகியைப் பழிவாங்குகிறார், சந்திரமுகி வேட்டையனைப் பழிவாங்குகிறார். இறுதியில் இருவரும் சேர்ந்து நம்மை...



from விகடன்

Comments