"என் அறக்கட்டளைக்கு இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்!" - ராகவா லாரன்ஸ் எடுத்த திடீர் முடிவு!

நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளுக்கும், மாணவர்களின் கல்விக்கும், ஆதவற்றவர்களுக்கும் உதவி வருகிறார்.

இதற்காக பிரபல நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், நெருங்கிய நண்பர்கள் எனப் பலரிடம் மனம் திறந்து உதவிகள் கேட்டு அதன் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வந்தார். பலரும் அவரது அறக்கட்டளைக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தனர். சமீபத்தில் நடந்த 'சந்திரமுகி-2' இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் லாரன்ஸ் அறக்கட்டளைக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார்.

இந்நிலையில், 'சந்திரமுகி-2' வில் படப்பிடிப்பு பாதியிலேயே, அதாவது கடந்த ஆண்டு 'இனி யாரும் தன் அறக்கட்டளைக்குப் பணம் அனுப்ப வேண்டாம்' என்று கூறியிருந்தார்.

ராகவா லாரன்ஸ்

தற்போது இதற்கானக் காரணம் குறித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். "கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'என் அறக்கட்டளைக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம்' என்று ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தேன். அதற்க்குக் காரணம்; நான் டான்ஸ் மாஸ்ட்ராக இருக்கும்போதே 60 குழந்தைகளை வளர்ப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பது, இதய அறுவை சிகிச்சைப் பண்ணுவது எனப் பல உதவிகள் செய்து வந்தேன். அப்போது அவ்வளவு உதவிகள் செய்வதற்கு என்னிடம் பணமில்லை. அதனால் என் அறக்கட்டளைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன். பலரும் எனக்கு உதவினார்கள்.

இப்போது ஹீரோ ஆகிவிட்டேன். இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் பண்ணிய நான், இப்போது ஒரே ஆண்டில் மூன்று படங்கள் பண்ணுகிறேன். நல்ல பணம் வருகிறது. 'உனக்கு நல்லாதான பணம் வருது, ஏன் மத்தவங்ககிட்ட வாங்கி உதவி பண்ணனும். நீயே பண்ணலாமே' என்று எனக்குள்ளேயே ஒரு கேள்வியெழுந்தது. அதனால், நானே அவர்களுக்கு உதவிகள் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

ஆணவத்தால் நான் இதைச் சொல்லவில்லை. உங்களைச் சுற்றி நிறைய கஷ்டப்படுகிற அறக்கட்டளையும், மக்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் எவ்வளவு சொன்னாலும் என்னுடன் சேர்ந்து உதவிகள் செய்ய வேண்டுமென்று பலர் ஆசைப்படுகிறீர்கள். கஷ்டப்படுபவர்கள் யார் என்று உங்களுக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். நீங்களே அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அதில் உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.



from விகடன்

Comments