அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசியது, தலைவர்கள் சிலைகளுக்கு மாலை, பனையூர் அரசியல் கூட்டங்கள் போன்ற செயல்பாடுகளால் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக் குறித்த பேச்சுகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
பல்வேறு நடிகர்களும், அரசியல் தலைவர்களும் இதுகுறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் 'லியோ' படத்தின் வெளியீடு, விஜய் மகன் ஜேசன் சஞ்சய், 'லைகா' தயாரிப்பில் இயக்குநராவது என விஜய் தொடர்ந்து டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகைக் குறித்தும் விஜய் மகன் சஞ்சய் இயக்குநராவது குறித்தும் விஷால் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றிப் பேசிய அவர், "மக்களுக்குச் சேவை செய்பவர்கள் எல்லோரும் அரசியல்வாதிதான். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர் ஏதும் பேசவில்லை. அவர் அரசியலுக்கு வருவதை அறிவித்தவுடன் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்கலாமா என்பது பற்றி முடிவெடுக்கலாம். அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நடிகராக ஆரம்பக்காலத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தவர் விஜய். அதற்காக நான் அவருக்கு என்றைக்கும் ரசிகன்.
விஜய் மகன் சஞ்சய் இயக்குநராக அடியெடுத்து வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் ரொம்ப நாளாகப் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். அந்த வகையில் சஞ்சய் இயக்குநராவது எனக்கு ஓர் ஊக்கத்தையளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
from விகடன்
Comments