அடம் பிடிக்கும் குமரன், சுஜிதா... சீசன் 2 சிக்கல்; இது பாண்டியன் ஸ்டோர்ஸ் பாலிடிக்ஸ்!

விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வரும் தொடர் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் தம்பி ஒற்றுமையைக் கதையாகக் கொண்ட இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாகவே இந்த சீரியல் முடிவடையப் போவதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. அதேநேரம் நல்ல டி.ஆர்.பி.ரேட்டிங் கிடைத்து வருவதால் ’இரண்டாவது சீசனாக எடுத்து சீரியலைத் தொடரலாம்’ என்ற ஒரு யோசனையும் சேனல் தரப்பில் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

தொடர் முடிவடைகிறதா அல்லது பார்ட் 2 வரப் போகிறதா என அறிய சீரியல் தொடர்பான சிலரிடம் பேசினால், தொடரின் ஆஃப் த ஸ்கிரீனில் நடந்து கொண்டிருக்கும் அலப்பறைகள் ஒவ்வொன்றாகத் தெரிய வருகின்றன.

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள்,

‘’இப்ப போயிட்டிருக்கிற கதையை முடிச்சுட்டு, ’ஐந்தாண்டுகளுக்குப் பிறகு’ன்னு போட்டு ‘பார்ட் 2’ எடுக்கறதாத்தான் முதல்ல முடிவு செய்திருந்தாங்க. யூனிட்டே அடுத்த பார்ட்டுக்குத் தயாராகிடுச்சு. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்துல இருந்து அந்த சீசன் தொடங்கலாம்னு எதிர்பார்த்தோம்.

சீரியலின் டைட்டிலை மட்டும் வேணும்னா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’க்குப் பதிலா ‘பாண்டியன் இல்லம்’னு மாத்திக்கலாமானு கூட யோசிச்சிட்டிருந்தாங்க.

எல்லாம் பக்காவா போயிட்டிருந்த சூழல்லதான் நடிகை சுஜிதா, குமரன் ரெண்டு பேரும் ‘நாங்க இரண்டாவது சீசன்ல நடிக்கலை’னு சொன்னதா தகவல் வந்தது.

விசாரிச்சப்ப அது உண்மைதானும் தெரிஞ்சது. சுஜிதா பெர்சனல் கமிட்மெண்ட்னாலயும் குமரன் சினிமா பண்ணப் போறதாலயும் நடிக்க மறுக்கிறதாச் சொன்னாங்க.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த சீரியலைப் பொறுத்த வரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துல இருக்கிற எல்லா ஆர்ட்டிஸ்டுகளுமே ரசிகர்களுக்குப் பிடிச்சவங்களா ஆகிட்டாங்க. அதனால அதே ஆர்ட்டிஸ்டுகள் நடிச்சாதான் முதல் சீசனுக்கு கிடைச்ச வரவேற்பு இரண்டாவது சீசனுக்கும் கிடைக்கும்கிறதால சேனல் மற்றும் தயாரிப்புத் தரப்புல இந்த ரெண்டு பேர்கிட்டயும் பேசினாங்க.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுல ரெண்டு பேரும் தங்கள் முடிவைக் கைவிட்டுட்டு ரெண்டாவது சீசன்ல நடிக்கச் சம்மதிச்சிட்டதாத்தான் சொன்னாங்க. இது நடந்து ரெண்டு வாரம் இருக்கும்.

ஆனா இப்ப லேட்டஸ்டா என்ன தகவல்னா, வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா மறுபடியும் இவங்க நடிக்க மறுக்கறதாத் தெரிய வருது.

எங்களுக்குத் தெரிய இவங்க ரெண்டு பேருக்கும் வேறு எந்த கமிட்மெண்டும் இருக்கற மாதிரி தெரியலை. என்ன காரணத்துக்காக இவங்க இப்படி நடந்துக்கறாங்கன்னும் யாருக்கும் தெரியலை’’ என்றார்கள்.

வேறு சிலரோ, ‘இந்த சீரியலின் ஆஃப் த ஸ்கிரீனில் பெரிய பாலிடிக்ஸ்ங்க. குமரனும் சுஜிதாவும் ஒரு அணி. மத்தவங்க ஒரு அணி. தினசரி ஒளிபரப்பாகிற எபிசோடுகள்லயோ ஒருத்தருக்கு சீன் இல்லாட்டி இன்னொருத்தர் மறுநாளே யூனிட்ல சண்டைக்குப் போயிடுவாங்க. இவங்க சண்டையைச் சரி செய்ய தயாரிப்புத் தரப்புல படாத பாடு படுவாங்க.  

பொதுவாகவே ஒரு சீரியல் ஹிட் ஆகுதுன்னா, எந்தவொரு தனிப்பட்ட நடிகர் நடிகையும் அதுக்கான கிரெடிட்டை எடுத்துக்க முடியாது. கதை மற்றும் சம்பந்தப்பட்ட கேரக்டருக்குத்தான் மக்கள் அந்த வரவேற்பைத் தர்றாங்க. ஆனா சிலர் தங்களால் தான் சீரியல் ஹிட் ஆகுதுன்னு நினைக்கிறாங்க. இந்த நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குது’’ என்கிறார்கள்.

சுஜிதா

கடைசி கட்டத் தகவல்படி, குமரன், சுஜிதா இருவரிடம் மீண்டும் பேசி, அவர்களை நடிக்க வைப்பது அல்லது அவர்கள் இருவருடைய கேரக்டர்களுக்குப் பதில் வேறு ஆர்ட்டிஸ்டுகளைக் கமிட் செய்து இரண்டாவது சீசனைத் தொடர்வது என்கிற இரண்டு முடிவோடு மூன்றாவதாக ஒரு முடிவையும் கைவசம் வைத்திருக்கிறார்களாம்.

இந்த இரு வழியும் ஒர்க் அவுட் ஆகாதபட்சத்தில் முதல் பார்ட்டுடன் சீரியலை முடித்து விடலாமென இருக்கிறார்களாம்.



from விகடன்

Comments