இது ‘அணுகுண்டின் தந்தை’ என்றழைக்கப்பட்ட ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் இறுதிச் சடங்கின்போது குற்றவுணர்வின் வெளிப்பாட்டில் அன்றைய அமெரிக்க செனட்டர் ஒருவர் கூறியது. அன்று வாய்மொழியாக அவர் கூறியதை, இன்று ஒப்பற்ற கலைப்படைப்பாக உலகம் முழுக்க வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “ஓப்பன்ஹெய்மர்” திரைப்படம் உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது 2005-ம் வெளியான 'American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer' என்ற சுயசரிதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இந்த சுயசரிதையை ‘கை பேர்ட் (Kai Bird)’ மற்றும் மார்ட்டின் ஷெர்வின் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியுள்ளனர்.
இலக்கியத்தில் சிறந்த விருதாகக் கருதப்படுகிற புலிட்சர் விருதினை 2006-ம் ஆண்டு இந்நூல் பெற்றுள்ளது. இந்த நூல் உருவான விதம் குறித்தும், அதை உருவாக்கியவர்கள் குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…
இந்நூலின் உருவாக்கத்துக்குப் பல நூறு நபர்களின் பேட்டி, 50 ஆயிரம் பக்க ஆவணங்கள், 80,000 பக்கங்கள் கொண்ட FBI-ன் முதல் தகவல் அறிக்கைகள் என ஏறக்குறைய வாழ்நாளின் 20 ஆண்டுகளை இவற்றைச் சேகரிக்கவே ஒப்படைத்திருக்கிறார் எழுத்தாளர் மார்ட்டின் ஷெர்வின். அப்படியும் இதைக் கோர்வையான ஒரு நூலாக மாற்ற முடியவில்லை.
அந்நிலையில் உதவிக்காகச் சரியான நபரைத் தேடிக்கொண்டிருந்த அவருக்கு, இரண்டாம் உலகப் போரில், அமெரிக்க ஆயுதக் கிடங்கின் பாதுகாப்பாளர் ஒருவரின் வாழ்க்கையைச் சுயசரிதையாகச் சிறப்பாக எழுதி முடித்த எழுத்தாளர் கை பேர்ட் கண்ணில் படுகிறார்.
2000-ம் ஆண்டில் மார்ட்டின் ஷெர்வின் ‘கை பேர்ட்’ஐ இந்த திட்டத்தில் சேர வற்புறுத்துகிறார். அப்போது “நான் என் வாழ்வில் இத்தனை ஆண்டுகளை இதற்காகச் செலவழித்துள்ளேன். இது பேரழிவு ஆயுதங்களைக் கண்டுபிடித்த ஒரு இயற்பியலாளரின் கதையைப் பற்றியது மட்டுமல்ல. எது ஒரு மனிதனின் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதோ அதுவே அவனை வீழ்ச்சிக்கும் கொண்டு சென்று அவமானப்படுத்தியது என்னும் உண்மையை உலகறிய செய்யப் போகும் ஆவணமாகும்” என்று கூறி அவரை திட்டத்தில் இணைத்தார்.
ஆரம்பத்தில் இப்புத்தகத்துக்கு “ஓப்பி” என ஓப்பன்ஹெய்மரின் செல்லப் பெயரையே வைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். பிறகு கிரேக்கக் கடவுளான புரோமிதியஸ் பெயரை பேர்ட்டின் மனைவி பரிந்துரைக்க, பின் அந்தப் பெயரே வைக்கப்பட்டது. புரோமிதியஸ் எனும் கிரேக்கக் கடவுள் தீயினைக் குறிப்பதாகும்.
“கருணையின் உருவில் ஒருவன் வீழ்ந்தான்” என தங்கள் 721 பக்கச் சுயசரிதையை ஒரு வரியில் சுருக்கி சொல்லும் கை பேர்ட், 1951 இல் ஓரிகானில் உள்ள யூஜினில் பிறந்தவர். அவரது தந்தை அமெரிக்க வெளியுறவு சேவை அதிகாரி. ஆகவே தனது குழந்தைப் பருவத்தை ஜெருசலேம், பெய்ரூட், தஹ்ரான், கெய்ரோ மற்றும் மும்பை எனப் பல நகரங்களில் கழித்தார். இவரது தந்தை சீனாவிலிருந்த அகதியான கை-யு ஹ்சுவின் நினைவாக கை பேர்ட் என இவருக்குப் பெயரிட்டார் . இதில் கை (Kai) என்றால் சீன மொழியில் "கடுகு" என்று பொருள்.
இதில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கை பேர்ட் தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் சர்வதேசப் பள்ளியில்தான் தனது உயர்நிலைப் படிப்பை முடித்துள்ளார். இவர் சர்வதேச அளவில் நடக்கும் போர், அதன் மையத்தில் இருக்கும் நபர்களின் வாழ்க்கையை எழுதுவது ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். இவரது அடுத்த படைப்பும் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு பிரபல வழக்கறிஞர் குறித்த சுயசரிதையே.
“Damn it, I happen to love this country.” என்று ஓப்பன்ஹெய்மரை அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கும் புத்தகம் அவரது கையறுநிலையை முதல் வரியிலே பிரதிபலிக்கிறது. மேலும் அவரது வாழ்வின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராய்கிறது. குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது மன்ஹாட்டன் திட்டத்தில் தனது பணிக்காக அணுகுண்டின் "தந்தை" என்று அவர் பாராட்டப்பட்டதையும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு அணுகுண்டுகளை வீசியதிலிருந்த தனது பங்கிற்காக, “தனது கைகளில் ரத்தம் இருப்பதாக” அவர் குற்றவுணர்ச்சியில் சுற்றியது குறித்தும் பேசுகிறது.
மேலும் அணு ஆயுதங்களின் ஆபத்தான வளர்ச்சி குறித்து கவலைகளை எழுப்பியதையும், அதனால் அவர் ஒரு சோவியத் கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று எழுந்த குற்றச்சாட்டினையும், பின்பு பறிக்கப்பட்ட பாதுகாப்பு அனுமதியையும் விரிவாக அலசுகிறது. இவ்வாறு தீவிர ஆராய்ச்சி செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட புத்தகமே ஓப்பன்ஹெய்மர் படத்தினை எடுக்க நம்பிக்கை தந்ததாகவும், அதுவே தனது திரைக்கதையின் அடிப்படை என்கிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
இப்படத்தினை பார்த்த கை பேர்ட், “இது ஒரு அற்புதமான கலை சாதனையாகப் பார்க்கிறேன். இந்த அணுயுகத்தில் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது என்பதைப் பற்றி ஓப்பன்ஹெய்மர் பேச ஆசைப்பட்டார். அந்த பிரச்னைகளைக் குறித்து தேசிய, உலகளாவிய உரையாடலை இப்படம் தூண்டும் என நம்புகிறேன். ஒரு தேசபக்தராக இருப்பதன் அர்த்தம் என்ன, தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் வளர்ந்த சமூகத்தில் ஒரு விஞ்ஞானி பொது பிரச்னைகளைப் பேசுவதில் என்ன பங்கு வகிக்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்” என்று தனது எழுத்துக்குக் காட்சி தந்த நோலனைப் பாராட்டியுள்ளார்.
மேலும் 1954-ல் அமெரிக்க அரசாங்கத்தால் ஓப்பன்ஹெய்மர் அவமானப்படுத்தப்பட்ட போது அன்றைய பிரதமர் நேரு அவருக்கு இந்தியக் குடியுரிமை தர முற்பட்டதாகவும், அதை ஓப்பன்ஹெய்மர் ஏற்கவில்லை என்றும் பேர்ட் தனது பேட்டியில் கூறியுள்ளார். ஓப்பன்ஹெய்மர் தனது நாட்டின் மீது மிகுந்த மரியாதையே கொண்டிருந்தார். அவரது கண்டுபிடிப்பினைத் தவறாகப் பயன்படுத்தியதால்தான் அதன் பயன்பாட்டை நிறுத்தும்படி அமெரிக்க அரசாங்கத்தினைக் கேட்டுக்கொண்டார். அதுவே அவர் மீதும் அவரது தேசபக்தி மீதும் சந்தேகம் வரக் காரணமாக அமைந்தது.
பல ஆண்டு விவாதத்துக்குப் பிறகு, ஓப்பன்ஹெய்மர் மீதான குற்றம் தவறென உணர்ந்தது அமெரிக்க அரசாங்கம். 2022 டிசம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 1954-ம் ஆண்டில் விதிக்கப்பட்ட பாதுகாப்பு அனுமதி ரத்து என்ற முடிவினை ரத்து செய்தார். இவ்வாறு 70 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றினை சுமந்துள்ள ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் எனும் பெயர், உலகில் எங்குப் போர் தொடங்கினாலும், அது நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இன்றும் பேசுபொருளாகிறது.
இதனை கை பேர்ட் தனது புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில் “There’s Only One Robert” என்கிறார். ஆம், அந்த ஒரே ஒரு 'ராபர்ட்'தான் மிகப்பெரிய ஆயுதத்தைத் தயாரித்தார். தன் கைகளில் ரத்தம் படிந்துள்ளது என்ற குற்ற உணர்வினைச் சுமந்தார். உலகப் போரினையும் முடித்து வைத்தார்.
from விகடன்
Comments