Jailer ரஜினிக்கு சிரஞ்சீவி; Leo விஜய்க்கு பாலையா!- மோதலில் வெல்லப்போவது யார்?

இந்த வருடத்தின் முதல் பாதி முடிந்து, இரண்டாம் பாதி ஆரம்பித்துவிட்டது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் 'அயோத்தி', 'டாடா', 'குட் நைட்', 'போர்தொழில்' நிறைய அறிமுக இயக்குநர்களின் படங்கள் கவனத்தை ஈர்த்தன.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் வெளியான 'மாவீரன்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இனி முழுக்க முழுக்க பெரிய படங்களின் வருகைதான். ஆகஸ்ட் மாதம் ரஜினியின் 'ஜெயிலர்', செப்டம்பர் மாதம் அட்லியின் 'ஜவான்', பிரபாஸ் - பிரஷாந்த் நீல் கூட்டணியில் 'சலார்', அக்டோபர் மாதம் விஜய்யின் 'லியோ', டிசம்பர் மாதம் தனுஷின் 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயனின் 'அயலான்', கார்த்தியின் 'ஜப்பான்' எனத் திரையரங்குகளை திருவிழாவாக்க படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றன. 

சமீபமாக, எல்லா நடிகர்களுடைய படங்களும் எல்லா மொழிகளிலும் வரவேற்கப்பட்டு ரசிக்கப்படுகிறது. அதனால், அந்தந்த ஹீரோக்களின் மார்க்கெட்டும் விரிவடைகிறது. இதில் இருக்கும் ஒரே சிக்கல் என்னவென்றால், ஒரு பெரிய ஹீரோவின் படத்தை வெளியிட திட்டமிட்டால், அந்த மொழி மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் மற்ற பெரிய ஹீரோக்களின் படம் வெளியாகாமல் இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு, ரிலீஸ் தேதியை முடிவு செய்யவேண்டும். உதாரணத்திற்கு 'சலார்' படம் வெளியாகிறது என்றால், இந்தியா முழுக்க மற்ற பெரிய ஹீரோக்களின் படத்தை வெளியிடமாட்டார்கள். இப்படியான சூழலில் கடந்த ஆண்டு, 'பீஸ்ட்' படமும் 'கே.ஜி.எஃப் 2' படமும் அடுத்தடுத்த நாளில் வெளியானதால் அது பேசுபொருளானது. 

ரஜினியின் 'ஜெயிலர்' - 'சிரஞ்சீவியின் 'போலா ஷங்கர்'

இந்த வருடத்தின் தொடக்கத்தில் விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு மொழிகளும் செம க்ளாஷ்! அதில் வென்றது யார் என்பது தனிக்கதை. அதே போல, இப்போதும் நடக்கவிருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் 'ஜெயிலர்' ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இன்னொரு பக்கம் டோலிவுட்டில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி 'போலா ஷங்கர்' என சோலோவாகக் களமிறங்குகிறார். இரண்டிலும் தமன்னாதான் நாயகி. இந்தப் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. 

அப்படியே அக்டோபர் 19ம் தேதிக்கு வந்தால், விஜய்யின் 'லியோ'. 'விக்ரம்' எனும் பிரமாண்ட ப்ளாக்பஸ்டரை கொடுத்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம்.

மீண்டும் விஜய் - லோகேஷ் காம்பினேஷன் என்பதால் எதிர்பார்ப்புக்கு மேல் எதிர்பார்ப்பு.  Why Kattappa Killed Bahubali ? என்பதைத் தெரிந்துகொள்ள எல்லா சினிமா ரசிகர்களுக்கும் எந்தளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதே மாதிரியான ஆர்வம் 'லியோ' LCU (Lokesh Cinematic Universe)வில் இருக்கிறதா, இல்லையா என்பதில் இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் படம், 'லியோ'. இந்தப் படத்திற்கு இப்படியாக பில்டப் ஏற, அதே நாளில் டோலிவுட் சார்பாகக் களத்தில் குதித்து ரத்தக்களரி ஆடவிருக்கிறார், பாலையா.

லியோ - பாலகிருஷ்ணா - ரவிதேஜா

அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஶ்ரீலீலா நடித்திருக்கும் 'பகவந்த் கேசரி' படமும் அதே நாள்தான் வெளியாக இருக்கிறது. இதற்கு மறுநாள், அக்டோபர் 20ம் தேதி ரவி தேஜாவின் 'டைகர் நாகேஸ்வர ராவ்' வெளியாக இருக்கிறது. ஆந்திராவில் ஸ்டூவர்ட்புரம் என்றொரு கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வர ராவ் எனும் ராபின்ஹூடை பத்தின பயோபிக் இது. செம ஜாலியான நடிப்பு, அசால்டான ஃபைட், டைமிங் கவுன்ட்டர்கள், கொஞ்சம் மாஸ் என பக்காவான கமர்ஷியல் ஹீரோவான ரவிதேஜாவின் வித்தியாசமான முயற்சி என்பதாலும் அந்த மாநிலத்தில் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நபரின் பயோபிக் என்பதாலும் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

யார் படமாக இருந்தாலும் யார் இயக்கியிருந்தாலும் கன்டன்ட் அழுத்தமாக இருந்தால் சினிமா ரசிகர்களும் மக்களும் அப்படத்தை கொண்டாட தவறமாட்டார்கள். அப்படி வெளியாகும் எல்லா படங்களும் நன்றாக இருக்கும் பட்சத்தில் அது திரையுலகிற்கும் நல்லது ; பார்க்கும் நமக்கும் நல்லது. 



from விகடன்

Comments