தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞர் கவுண்டமணி. இவரது நகைச்சுவைக் காட்சிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
'வாய்மை' படத்திற்குப் பின், நடிக்காமல் ஒதுங்கி இருந்த கவுண்டமணி. இப்போது மீண்டும் அடுத்தடுத்து ஹீரோவாகக் களம் இறங்குறார். 'பழனிச்சாமி வாத்தியார்' பட அறிவிப்பைத் தொடர்ந்து இப்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. கவுண்டமணியின் பல படங்களுக்கு காமெடி டிராக் எழுதிய சாய் ராஜகோபால் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவரிடம் பேசினேன்.
''கவுண்டமணி- செந்தில் காம்பினேஷன்ல 70 படங்களுக்கு காமெடி டிராக் எழுதியிருப்பேன். இயக்குநர்கள் மணிவாசகம், டி.பி.கஜேந்திரன், அர்ஜுன் இவங்ககிட்ட உதவி இயக்குநரா இருந்திருக்கேன். பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் `சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கியிருக்கேன். கவுண்டமணி சார் நடிப்பில் ஒரு படம் பண்ணனும்னு அவருக்கேத்த கதைகள் ரெடி பண்னிட்டு இருந்தேன்.
இந்தக் கதை கொரோனா காலகட்டத்துல தான் எழுதினேன். ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கிறாங்க. படத்துக்கு பெயர் 'ஒத்த ஓட்டு முத்தையா'. குடும்பக் கதையுடன், அரசியல் காமெடிகளும் படத்துல இருக்கு. படத்துல யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் நிறைய பேர் இருக்காங்க.
மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி இவங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கறாங்க. கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறாங்க. சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவைக் கையாள்கிறார். செப்டம்பர்ல படப்பிடிப்பிற்கு கிளம்புறோம்'' என்கிறார் சாய் ராஜகோபால்.
from விகடன்
Comments