BRO Review: `பவன் காரு உன்னாரு; கானி இதி ஆக்‌ஷன் மூவி காது'- சமுத்திரக்கனியின் ப்ரோ எப்படி இருக்கு?

சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும் தம்பி ராமையாவும் நடித்து ஜீ 5 தளத்தில் வெளியான படம், 'விநோதய சித்தம்'. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி, நன்கு பேசப்பட்டது.
ப்ரோ

இந்தக் கதையை 'ப்ரோ' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்திருக்கிறார், சமுத்திரகனி. பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் என பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளியாகி இருக்கும் 'ப்ரோ' எப்படி இருக்கிறது ? தமிழில் இருந்த தன்மை தெலுங்கு வெர்ஷனில் மாறாமல் இருக்கிறதா ?

ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார், மார்க்கண்டேயலு (சாய் தரம் தேஜ்). வேலை, வேலை என குடும்பத்தைக் கூட கவனிக்காமல் பரபரவென பிஸியாக இயங்கும் இளைஞன். அவரைப் பொறுத்தவரை ஒரு நாளுக்கு 24 மணி நேரம் போதவில்லை. வீட்டில் அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. இவர்களின் படிப்பு, வேலை, திருமணம் என எவ்வளவு கடமைகள் இருக்கிறது. அந்தக் கடமைகளுக்கெல்லாம் சொந்தக்காரன் தான் மட்டும்தான். தனக்கு எல்லாம் தெரியும்.

'நான் பார்த்துக்கொள்கிறேன்' 'சொல்றதை மட்டும் கேளுங்கள்' என்ற மனநிலைதான் இவருக்கு. அதே போலத்தான் அலுவலகத்திலும் தனக்கு ஏகப்பட்ட கடமைகள் இருக்கின்றன, தான் இல்லையென்றால் அலுவலக வேலைகளும் நிறுவனத்தின் முன்னேற்றமும் என்னாவது என கடமைகளை கக்கத்தில் வைத்துக்கொண்டே இயங்கும் கடமைச்செல்வனான மார்க்கண்டேயலு, ஒரு சாலை விபத்தில் மாட்டிக்கொள்கிறார். அவரது ஆன்மா உடலைவிட்டு போய்க்கொண்டிருக்கும் வழியில், மனித உருவில் இருக்கும் நேரத்தைச் சந்திக்கிறது.

பவன் கல்யாண் - சாம் தரம் தேஜ்

அந்த நேரம்தான் (பவன் கல்யாண்). நேரத்திடம் கெஞ்சிக் கேட்டு, தன் கடமைகளை முடிக்க மீண்டும் பூலோகம் வருகிறார். ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசமோ 90 நாள்கள். அதற்குள் தான் முடிக்க நினைத்த கடமைகளை முடித்தாரா இல்லையா, காலம் அவருக்கு சொன்ன பாடம் என்ன என்பதை ஃபேன்டஸியாக சொல்லியிருக்கிறார் சமுத்திரக்கனி.  அப்பா தம்பி ராமையாவுக்கு பதில் அண்ணன் சாய் தரம் தேஜ். இப்படியான ஒருசில மாற்றங்களைத் தவிர, மற்றபடி எல்லாம் தமிழில் இருந்த அதே விஷயங்கள்தாம். மார்க்கண்டேயலுவாக சாய் தரம் தேஜ் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். இருந்தும், சில எமோஷன் காட்சிகளில் நடிப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். சில நபர்களுக்கு தம்பி ராமையாவின் நடிப்பு அந்தப் படத்தில் கொஞ்சம் மிகையாக இருக்கிறது என்ற எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால், இதில் சாய் தரம் தேஜின் நடிப்பைப் பார்த்தால் தம்பி ராமையாவின் அனுபவம் புரிந்திருக்கும்.

பவன் கல்யாணின் மற்ற படங்களைக் காட்டிலும் இது வித்தியாசமானது. பவன் கல்யாண் என்றால் மாஸ், டான்ஸ், ஃபைட். அதுதான் அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது. அது இதில் இருக்காது. இப்படி தனக்கான விஷயங்கள் எதுவும் இல்லாத இப்படியொரு கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவே பவன் கல்யாணை பாராட்டலாம். இது அவர் ஜோன் இல்லையென்றாலும் அவரின் 'பத்ரி', 'ஜல்சா', 'பீம்லா நாயக்' என இவரின் பழைய பட பாடல்களைப் போட்டு ரசிகர்களிடம் கனெக்ட் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அவருக்கே உரிய மேனரிஸம், டயலாக் டெலிவரி என பவன் கல்யாண் ரிலாக்ஸாக 'சில் ப்ரோ' மோடில் நடித்திருக்கிறார்.

பவன் கல்யாண் - சாம் தரம் தேஜ்

ரோகிணி, ப்ரியா பிரகாஷ் வாரியர், யுவலக்‌ஷ்மி, தனிகெலா பரணி என பலர் இருந்தாலும் கதை என்னவோ பவன் கல்யாண் - சாய் தரம் தேஜுக்குத்தான். இளைஞனாக காட்டியதால் ஒரு காதல் இருக்கவேண்டுமல்லவா... அதனால் சாய் தரம் தேஜின் காதலியாக கீத்திகா ஷர்மா வருகிறார் அவ்வளவுதான். திரைக்கதையையும் வசனத்தையும் இயக்குநர் த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் எழுதியிருக்கிறார். 1 மணி நேரம் 40 நிமிடங்கள் இருந்த தமிழ் வெர்ஷனை 2 மணி நேரம் 15 நிமிடங்களாக மாற்றியிருக்கிறார்கள். தமிழில் இருந்த அதே திரைக்கதைதான். மேலே சொன்னது போல, பெரிய மாற்றங்கள் இல்லை. உணர்வுகள் இன்னும் நன்றாக கடத்தப்பட்டிருக்கலாம். 

பவன் கல்யாண் இன்ட்ரோ, க்ளைமேக்ஸ் ஆகியவற்றிற்கு ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் லைட்டிங்கில் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. இன்டோர் போர்ஷனில் எப்போதும் போல வழக்கமான டெம்ப்ளேட் ஒளிப்பதிவுதான். தமன் இசையில் அறிமுக பாடலும் தீம் மியூசிக்கும் மட்டும் ஈர்க்கிறது. மற்ற பாடல்கள் படத்தோடு ஒட்டவேயில்லை. படத்திற்கு தேவையும் இல்லை. அவையெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் கதையைவிட்டு விலகாமல் கச்சிதமாக இருந்திருக்கும். 'பவன் கல்யாண் காரு உன்னாரு. ஆக்‌ஷன் சீக்வென்ஸ் காவாலி' என எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது ஆறுதல்.  

பவன் கல்யாண் - சாம் தரம் தேஜ்

திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல் இலக்கை நோக்கி, வெற்றியை நோக்கி, கடமைகளை நோக்கி என எல்லோரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், 'மொதல்ல நில்லு. அப்புறம் சொல்லு' என சமந்தாவின் வசனம் போல, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள், இவ்வளவு அவசரம் தேவையில்லை, இருக்கும் வாழ்க்கையை நிம்மதியாக வாழ், யாருக்காகவும் எதுவும் இங்கு நிறுத்தி வைக்கப்படவில்லை. நாம் இல்லையென்றால் இதை யார் செய்வார் போன்ற கவலை கூடாது போன்ற விஷயங்களை ஃபேன்டஸி வாயிலாக சொல்கிறார் இந்த 'ப்ரோ'. 

தமிழில் பார்த்தவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்காது. பவன் கல்யாண் ரசிகர்களாக இருந்தால், நிச்சயம் தியேட்டருக்கு விசிட் அடிக்கலாம்.



from விகடன்

Comments