"பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் ஃபேக் ஐடிக்கள் மூலம் என்னிடம் சேட் செய்கிறார்கள்!"- கங்கனா ரணாவத் அதிரடி
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத், தற்போது இந்திரா காந்தியின் பயோபிக்கான `Emergency' மற்றும் தமிழில் `சந்திரமுகி-2' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கும் இவர், அதில் அரசியல், பாலிவுட் குறித்தும் பிரபல நட்சத்திரங்கள் குறித்தும் சர்ச்சையான பதிவுகளையும் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர், பெயர்களைக் குறிப்பிடாமல் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் இருவர் மீது குற்றம் சாட்டி அவர்களுடனான டேட்டிங் ரகசியங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
இதுபற்றி சமீபத்தில் பேசியுள்ள அவர், "திரைப்பட மாஃபியாக்கள் எப்போதும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வண்ணமிருக்கின்றன. நான் டேட்டிங் செய்த பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவர் எப்போதும் போலியான சமூகவலைதளக் கணக்குகள் மூலம் என்னிடம் சேட் செய்பவர். ஒருமுறை அவர் என்னுடைய சமூக வலைதளக் கணக்கையே முடக்கி என்னை மிரட்டினார். அவருக்கு இப்போது விவாகரத்தாகப் போகிறது என்று கேள்விப்பட்டேன்.
பெண் ரசிகர்கள் அதிகம் கொண்ட மற்றொரு சூப்பர் ஸ்டார், என் வீட்டிற்கு வந்து என்னுடன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று கெஞ்சினார். என்னைப் பின்தொடர்வதற்காக ரகசியமாகப் பல வழிகளைக் கையாண்டார். அவர் என்னை ஏமாற்றப் பார்த்தார். அதனால், நான் மறுத்துவிட்டேன். பின், அவர் வெவ்வேறு போலியான கணக்குகள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் தனது திருமணத்தைக் கூட போலியானது, குழந்தைகூட தன் படத்தை விளம்பரப்படுத்துவதற்கான யுக்தி என்று என்னிடம் சொன்னார். நான் திகைத்துப் போனேன். அடிப்படையிலேயே ஒழுக்கமில்லாத இவர்களைப் போன்றவர்கள் மனிதர்கள் அல்ல பேய்கள். அதனால்தான் நான் அவர்களை அழிப்பதில் உறுதியாக உள்ளேன். அதர்மத்தை அழிப்பதே தர்மத்தின் முக்கிய நோக்கம். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதும் இதைத்தான்" என்று கூறியுள்ளார்.
மேலும், "இவர்களுக்கு எல்லாம் அவர்கள் மனைவி மீது காதல் இல்லை. இதுபோன்ற சில திரைப்பட மாஃபியாக்கள் சூப்பர் ஸ்டார்கள் என எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். அவர்கள் படங்கள் ஓடவில்லையென்றாலும் மொத்தமாக டிக்கெட்களை வாங்கி வசூலாகாத படங்களையும் ஹிட்டான படங்களைப் போலப் போலியாகக் காட்டிக் கொள்கிறார்கள். இவர்களெல்லாம் திறமையற்ற முட்டாள்கள் மட்டுமல்ல, கிரிமினல் கும்பல்கள். இவர்கள் மீதெல்லாம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
கங்கனா எந்த இருவரைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்பது இப்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
from விகடன்
Comments