பிக் பாஸ் நடிகையும், மாடலுமான உர்ஃபி ஜாவேத் தான் அணியும் வித்தியாசமான ஆடைகளின் வித்தியாசமான வடிவமைப்புகளால் பிரபலமானவர். அவர் அணியும் உடைகளுக்காக பல நேரங்களில் விமர்சிக்கப்படுவதும் உண்டு.
உர்ஃபி ஜாவேத் அணியும் ஆடைகள் ஆபாசமாக இருப்பதாகக் கூறி மும்பை பா.ஜ.க. தரப்பில் போலீஸில் புகாரும் செய்யப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு உர்ஃபி ஜாவேத் விமானத்தில் சென்றபோது அவருடன் அதே விமானத்தில் பயணம் செய்த சிலர் உர்ஃபி ஜாவேத் குறித்து கிண்டல் செய்து மோசமாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
தனக்கு விமானத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து உர்ஃபி ஜாவேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஒரு பொதுவான நபர். ஆனால் யாரது பொது சொத்தும் கிடையாது. எனது பெயரைச் சொல்லி விமர்சனம் செய்தனர். நான் நிர்வாணமாக ஆடக்கூடியவள் என்றும், ஆடை அணியக்கூடியவர் கிடையாது என்றும் சொன்னார்கள். ஆனாலும் விமானத்தில் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காக நான் அமைதியாக இருந்தேன்.
அவர்களில் இருந்த ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதோடு என்னுடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அவரிடம் எனது பெயரைச் சொல்லி எப்படி கிண்டல் செய்யலாம் என்று கூறி வாக்குவாதம் செய்தேன். இதுபோன்ற சம்பவங்களால் நான் பாதிக்கப்பட்டேன் என்று சொல்வதைவிட இந்த சமுதாயம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். பெண்களைக் கேலி செய்வது, அவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.
அவர்கள் குடிபோதையில் இருந்ததாகக் காரணம் சொல்கிறார்கள். அவர்கள் குடித்தால் அதன் பின்விளைவுகளை நான் எதிர்கொண்டதாக இருக்கக்கூடாது. மது அருந்தி இருப்பவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கக்கூடாது. எனக்கு திரைப்படத்துறையில் காட்பாதர் யாரும் கிடையாது. பாலிவுட்டோடு தொடர்பும் கிடையாது. இது தான் உண்மை. அதனால் நான் எளிதில் தாக்குதலுக்கு இலக்காகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் கோவா சென்றபோது விமான நிலையத்தில் ஒருவர் உர்ஃபி ஜாவேத்தைப் பார்த்து, "இது போன்று ஆடை அணியும் பெண்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.
from விகடன்
Comments