Vijay: "ஓடடகக ர.1000 அபப அவஙக எவள சமபதசசரபபஙக?!"- கலவ வரதகள மடயல வஜய

2023-ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றுச் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்திருக்கிறார். மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் மேடையில் அவர்களைப் பாராட்டிக் கௌரவித்த விஜய், இந்நிகழ்வில் பல விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். அரசியல், கல்வி எனப் பல தளங்களைத் தொட்டுச் சென்ற அவரின் வைரல் பேச்சின் ஹைலைட்ஸ் இங்கே...

தன்னை மிகவும் பாதித்த சமீபத்திய சினிமா வசனம் என்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' பட வசனத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். "நம்மக்கிட்ட காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது."

Vijay Education Awards | விஜய் கல்வி விருதுகள்

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேசியவர், "நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். நீங்க தெளிவா இருக்கணும். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கதான் தேர்ந்தெடுக்கணும். நம்ம கைய வெச்சே நம்மள குத்திக்கக்கூடாது. ஆனா நாம அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம். காசு வாங்கிட்டு ஓட்டு போடுறோம். ஒருத்தருக்கு 1000 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்குறாங்கன்னா, அவங்க அதுக்கு முன்னாடி எவ்வளவு சம்பாதிச்சிருப்பாங்க? மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய பெற்றோரிடம் காசு வாங்கிவிட்டு வாக்கு செலுத்தக்கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டும்" என்று மாணவர்களிடம் வேண்டுகோள் வைத்தார்.

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் குறித்துப் பேசியவர், "தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுடன் நிறைய நேரத்தை செலவழியுங்கள். அவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள். மாணவர்கள் எப்போதும் எக்காரணம் கொண்டு தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது" என்று அறிவுறுத்தினார்.

Vijay Education Awards | விஜய் கல்வி விருதுகள்

"'உன்னில் என்னைக் காண்கிறேன்' - உங்களைப் பார்க்கும் போது என்னுடைய பள்ளிக் கல்வி நாள்கள் ஞாபகம் வருகின்றன" என்று நெகிழ்ந்தவர், "நீங்கள் நினைப்பதைத் தைரியமாகச் செய்யுங்கள். உங்களால் முடியாது என நெகட்டிவ்வாக சொல்பவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள். உங்களுக்குள்ள ஒருத்தன் இருப்பான். அவன் என்ன சொல்றானோ அதை மட்டும் செய்யுங்க" என்று ஊக்கப்படுத்தினார்.

மேலும் உயர்கல்வி குறித்தும் சுதந்திரம் குறித்தும் பேசியவர், "நீங்கள் முதல் முறையாகப் பெற்றோரின் கண்காணிப்பிலிருந்து வெளியே சென்று கல்வி கற்கப் போகிறீர்கள். வெளியே செல்லும்போது நிறையச் சுதந்திரம் கிடைக்கும். அதை முறையாகக் கையாள வேண்டும். ஜாலியாக அனுபவித்து வாழுங்கள். ஆனால், உங்களின் சுய அடையாளத்தை இழந்துவிடாதீர்கள்" என்றார்.

மாணவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது குறித்தும் முக்கியமான அரசியல் தலைவர்கள் குறித்தும் பேசியவர், "சமூகவலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், அங்கேதான் அதிகமான பொய்ச் செய்திகள் உலாவிக்கொண்டிருக்கின்றன. அதிலெல்லாம் ஏமாறாமல் இருக்கப் பாடப்புத்தகத்தைத் தாண்டி நிறையப் படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்" என்று சொல்ல, பலத்த கரகோஷம் எழுந்தது.

Vijay Education Awards | விஜய் கல்வி விருதுகள்
இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக அளிக்கப்பட்டது. கல்விக்காக நடைபெற்ற விழாவில் விஜய் அரசியல் மேற்கோள்களுடன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


from விகடன்

Comments