பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கும் பிராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது.
தெலுங்கு, இந்தி உட்படப் பல மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை நடிக்க வைக்க, பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதிலும் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கக் கணிசமான தொகை கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வது குறித்து கமல்ஹாசன் தீவிரமாகப் பரிசீலித்து வந்தார். இது குறித்து தயாரிப்பாளர் அஸ்வனி தத், கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மட்டும் தெரிவித்து இருந்தார். "ரூ.150 கோடி சம்பளம் கொடுப்பதாகக் கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை. பேச்சுவார்த்தையில் இன்னும் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை" என்று அவர் அப்போது குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது இப்படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்து முறைப்படி கமல்ஹாசனே அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராக இருந்த போது உதவி இயக்குநர் அஸ்வனி தத்தை படத்தயாரிப்பு இடங்களில் பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறோம். நமது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு இயக்குநர் தலைமை வகிக்கிறார். சக நடிகர்கள் பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோரும் அதே தலைமுறைதான். அமிதாப் பச்சனுடன் இதற்கு முன்பு பணியாற்றி இருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறையும் தன்னை புதுப்பித்துக்கொள்வார். அவருடன் நடிக்கும் ஒவ்வொரு முறையும் அவருடன் முதல் முறை நடிப்பது போல் உணர்கிறேன். பிராஜெக்ட் கே-யை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
பார்வையாளர்கள் என்னை எந்த இடத்தில் வைத்திருந்தாலும், என்னுடைய முதன்மையான குணம் நான் ஒரு திரைப்பட ஆர்வலர். இந்தக் குணம் எனது துறையில் எந்த ஒரு புதிய முயற்சியையும் பாராட்டிக்கொண்டே இருக்கும். இயக்குநர் நாக் அஸ்வினின் தொலைநோக்கு பார்வையால் நம் நாட்டிலும், உலக அரங்கிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் அஸ்வனி தத் இது குறித்துக் கூறுகையில், "கமல்ஹாசனுடன் பணியாற்றவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. பிராஜெக்ட் கே மூலம் அக்கனவு நனவாகி இருக்கிறது.
கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இரு நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறந்த தருணம். எனது திரைப்பட வாழ்க்கையின் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், இது உண்மையிலேயே எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்" என்று குறிப்பிட்டார்.
இயக்குநர் நாக் அஸ்வினும் நடிகர் கமல்ஹாசன் 'புராஜெக்ட் கே'-யில் இணைவதை உறுதி செய்து இருக்கிறார். "பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் போன்ற நடிகருக்குப் புதிதாக ஏதாவது செய்ய முயல்வது மிகப்பெரிய கௌரவம். கமல்ஹாசன் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்" என்று தெரிவித்தார்.
பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படம் ரூ.500 கோடி செலவில் எடுக்கப்படுகிறது. விஷ்ணுவின் நவீன அவதாரத்தை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர். இப்படத்தில் நடித்த போதுதான் அமிதாப் பச்சன் ஐதராபாத்தில் காயம் அடைந்தார். அதோடு தீபிகா படுகோன் முதல் முறையாகத் தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகளை இயக்குவதற்காக வெளிநாட்டிலிருந்து நான்கு சண்டை பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதால் படம் வெளியாவதில் சில மாதங்கள் தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது.
from விகடன்
Comments