கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சினிமா நடிகர் பிரித்விராஜ், தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் 'விலாயத் புத்தா' என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய விலாயத் புத்தா என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு இந்த சினிமா எடுக்கப்பட்டு வருகிறது. மறைந்த இயக்குநர் சச்சி இந்த சினிமாவை இயக்குவதாக முன்பு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இயக்குநர் சச்சி மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரிடம் இணை இயக்குநராக இருந்த ஜெயன் நம்பியார் சினிமாவை இயக்கிவருகிறார். இந்த சினிமா மூலம் ஜெயன் நம்பியார் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார். த்ரில்லர் சினிமாவான விலாயத் புத்தா-வில் டபிள் மோகனன் என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துவருகிறார்.
இடுக்கி மாவட்டம் மறையூரில் உள்ள சந்தனக் காடுகளின் பின்னணியில் இந்த சினிமா உருவாகி வருகிறது. காந்தாரா சினிமாவின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கஸ்யப் இந்தத் திரைப்படத்துக்கும் ஒளிபதிவாளராக உள்ளார். இந்த சினிமாவின் சண்டைக்காட்சிகள் இடுக்கி மாவட்டம் மறையூரில் நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் நடிகர் பிரித்விராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பிரித்விராஜிக்கு நேற்று காலில் கீஹோல் ஆப்பரேஷன் நடைபெற்றது. ஆப்பரேஷனுக்கு பிறகு அவர் நலமுடன் உள்ளதாகவும், இரண்டு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சினிமா படப்பிடிப்புக்காக ஜூலை 3-ம் தேதி அமெரிக்கா செல்வதாக பிரித்விராஜ் திட்டமிட்டிருந்தார். மேலும், குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட சில சினிமாக்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் படபிடிப்பு பணிகள் அனைத்து தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
from விகடன்
Comments