தவர மகன: சதயப பரம பசம படம சதகக எதரன கரல? படததன சககலகளம நயயஙகளம!

தேவர் மகனைப் போலச் சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒருசேர அதிகம் சம்பாதித்த இன்னொரு தமிழ்த் திரைப்படம் இருக்குமா என்று தெரியவில்லை. ‘தமிழ் சினிமாவில் மிக மிக நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதைகளுள் முக்கியமானது தேவர் மகன்’ என்று அடிக்கடி பாராட்டுபவர் இயக்குநர் மிஷ்கின். பல இளம் இயக்குநர்களுக்குக் கூட இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு முக்கியமான பாடமாக இருக்கிறது. இதன் மறுபுறத்தில் இதன் மீதான விமர்சனங்களும் கடுமையாக இருக்கின்றன. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் நிகழ்ந்ததற்கு ‘தேவர் மகன்’ ஒரு முக்கிய காரணியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. சாதியப் பெருமிதத்தைப் பேசிய படம், தமிழ் சினிமாவில் அரிவாள் கலாசாரத்தைத் துவக்கி வைத்த படம் என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

‘நீங்க நல்லவரா... இல்ல, கெட்டவரா?’ என்று தேவர் மகனை நோக்கிக் கேட்டால் என்ன சொல்வார்? இந்தப் படத்தைப் பற்றிய நல்ல விஷயங்களையும் சில எதிர்மறையான கோணங்களையும் சமநிலையில் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அதற்கு முன் 'தேவர் மகன்' படத்தின் கதையைப் பற்றி சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.
தேவர் மகன்

பங்காளிச் சண்டையை மையமாகக் கொண்ட திரைப்படம்

தூவலூர் என்கிற கிராமம். அங்குள்ள இரண்டு பங்காளிக் குடும்பங்களுக்கு இடையே நீண்ட கால பரம்பரை விரோதம். மூத்தவரான பெரிய தேவர் சாதிப் பெருமிதம் கொண்டிருந்தாலும் ஊர் நலனைப் பிரதானமாக எண்ணுபவர். சாதிப் பாரபட்சமில்லாமல் மக்களை அணுகுகிறவர். ஆனால் இளையவரான சின்னச்சாமி தேவர் இதற்கு நேரெதிர். அண்ணன் மீதுள்ள பகைதான் இவருக்கு முக்கியம். இவரது மகனான மாயன், தந்தையை விடவும் சாதிய வெறி அதிகம் கொண்டவன். சாதியப் பெருமிதத்திற்காகவும் பங்காளிப் பகைக்காகவும் எந்த அழிவையும் செய்யத் துணிபவன்.

பெரிய தேவரின் மகன் சக்திவேல். லண்டனில் படித்து விட்டு தற்காலிகமாகத் தங்கும் நோக்கில் கிராமத்திற்கு வருகிறான். தனது காதலியைத் தந்தையிடம் அறிமுகப்படுத்தி திருமணத்திற்குச் சம்மதம் வாங்கி விட்டு அங்கிருந்து உடனே கிளம்பி விடுவதுதான் அவனது திட்டம். பெருநகரத்தில் தொடர் உணவகம் அமைக்கும் கனவுடன் இருக்கிறான். கிராமத்தில் நிகழும் சாதிய வன்முறைகளைக் கட்டோடு வெறுக்கிறான்.

‘தன்னுடைய காலத்திற்குப் பிறகு ஊர் நலனை சக்திவேல் பார்த்துக் கொள்வான்’ என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கிற பெரிய தேவருக்கு, மகனின் காதல் விஷயம் ஏமாற்றத்தை அளிக்கிறது. “இந்த ஊருக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுய்யா’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார். சக்திவேல் கிளம்பும் சமயத்தில் சாதியைப் பின்னணியாகக் கொண்ட வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. எளிய மக்கள் உயிரையும் வீட்டையும் இழந்து தவிக்கிறார்கள். இது சக்திவேலை மிகவும் பாதிக்கிறது. இதே சமயத்தில், ஒரு பஞ்சாயத்தில் நிகழும் அவமதிப்பு காரணமாகப் பெரிய தேவரின் மரணமும் நிகழ்கிறது. வேறு வழியின்றி அந்த இடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்கிறான் சக்திவேல். தந்தையின் கனவுப்படி ஊருக்கு நல்லது செய்ய முனைகிறான். இதனால் மாயனின் கோபம் அதிகமாகிறது. அழிவு வேலைகளை உக்கிரமாகச் செய்ய ஆரம்பிக்கிறான்.

சக்திவேலுக்கும் மாயனுக்கும் இடையில் நிகழ்கிற மோதல் உச்சக்கட்டத்தை எட்டுகிறது. வன்முறையை அறவே விரும்பாத சக்திவேல், மாயனை வெட்டி வீழ்த்தும்படியான சூழல் ஏற்படுகிறது. "பழியை நாங்க ஏத்துக்கறம்யா” என்று வரும் ஊர் மக்களிடம் “ஏத்துக்கிட்டதெல்லாம் போதும்யா... போயி பிள்ளைக் குட்டிகளைப் படிக்க வைங்கய்யா" என்கிற உபதேசத்தோடு சிறைக்குச் செல்கிறான் சக்திவேல். படம் நிறைகிறது.
தேவர் மகன்

அற்புதமான திரைக்கதையை உருவாக்கியிருந்த கமல்ஹாசன்

மாஃபியா எனப்படும் நிழல் உலகத்தைக் கச்சிதமாகவும் வன்முறையின் அழகியலுடனும் திரையில் பிரதிபலித்த முன்னோடி திரைப்படங்களுள் முக்கியமானது காட்ஃபாதர். உலகமெங்கிலும் உள்ள திரைப்படைப்பாளிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய படம் இது. ‘தேவர் மகனின்’ திரைக்கதையில் காட்ஃபாதரின் அழுத்தமான சாயல் உண்டு. காடு எனப்படும் கன்னடத் திரைப்படத்தின் பாதிப்பும் இருந்தது என்று ஒரு நேர்காணலில் சொல்லும் கமல், தேவர் மகன் திரைக்கதையை ‘மூவி மேஜிக்’ என்னும் மென்பொருள் உதவியுடன் ஏழே நாட்களில் எழுதி முடித்தார்.

படப்பிடிப்பிற்குள் நுழைந்த பிறகு சில குழப்பங்களும் தடுமாற்றங்களும் நேர்ந்தன. கலைமணி சொன்ன யோசனையை எடுத்துக் கொண்டதன் விளைவாகக் கோயில் கதவிற்கு இரண்டு பூட்டுக்கள் இருந்த சர்ச்சை இணைக்கப்பட்டது. ரேவதியின் பாத்திரத்தில் முதலில் மீனா நடித்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் முடிந்தது. ஆனால் மீனாவின் தேதிகள் பிறகு ஒத்து வராததால் இந்தப் படத்திற்குள் ரேவதி வந்தார். ‘பஞ்சவர்ணமாக’ ஒரு கிராமத்து அறியாப் பெண்ணின் சித்திரத்தை ரேவதி திறம்படக் கையாண்டார்.

சில பல இயக்குநர்கள் அயல் திரைப்படங்களிலிருந்து கதையை, காட்சிகளை உருவி தமிழிற்குக் கொண்டு வரும் போது இரண்டும் கெட்டானாகச் சொதப்பி விடுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் கமலின் நேர்த்தியை எப்போதுமே வியக்கத் தோன்றும். காட்ஃபாதர் திரைக்கதையின் சாயல் தேவர் மகனிலிருந்தாலும் தமிழ் மண்ணுக்கேற்றபடி அதை மாற்றியதில் கமலின் மேதைமையைப் படம் முழுவதும் உணர முடியும். ‘விதை நான் போட்டது’ என்று பெரிய தேவர் பேசும் காட்சி முதற்கொண்டு பல காட்சிகளும் வசனங்களும் ‘நச்’ என்று இருக்கும். மாயனுக்கும் சக்திவேலுக்கும் நீளும் விரோதம் ஒரு டிராக் என்றால் சக்திவேலுக்கும் அவனது காதலியான பானுவிற்கும் நிகழும் காதல், அதன் பிரிவு என்று இன்னொரு டிராக் பயணிக்கிறதே.. அதை அதியற்புதம் எனலாம். இருவருக்குமான பிரிவு தொடர்பான காட்சிகள் காவியத்தன்மையுடன் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

தேவர் மகன்

சாதிய வன்முறை – காதல் பிரிவு – இரண்டு டிராக்கில் பயணிக்கும் திரைக்கதை

வேறு வழியில்லாத ஒரு நெருக்கடியில் தன் காதலைப் பலி கொடுத்து விட்டு ரேவதியைத் திருமணம் செய்து கொள்வார் கமல். ஊருக்கு வரும் கௌதமி, இதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கதறி அழும் போது தன்னிச்சையாக அவரது தாய்மொழி வந்து விடும். ‘ஏன்யா என்னை மோசம் செஞ்சே?’ என்று தெலுங்கில் கதறுவார். இவ்வாறான சின்ன சின்ன நுணுக்கங்களும் நகாசு வேலைகளும் படத்தின் பல இடங்களில் பொங்கி வழிந்தபடியே இருக்கும்.

கௌதமியின் துயரத்தைப் புரிந்து கொண்டு கையாலாகாத தன்மையுடன் நிற்கும் கமலிடம் “நான் விரும்பிய சக்தியை என் மனசுல இருந்து எடுக்க முடியாது” என்பார் கௌதமி. தன்னுடைய கணவனின் காதலிதான் கௌதமி என்பதை அறிந்திருக்கும் ரேவதி, மனைவிக்கான அந்தஸ்தை இறைஞ்சும் போது "சக்திக்குள்ள இப்படியொரு கிராமத்தான் இருக்கான்னு எனக்குத் தெரியாது. நான் காதலிச்ச சக்தி வேற. He has gone” என்று கௌதமி சொல்வதும், ரயிலில் விடைபெறும்போது தன்னிச்சையான அன்பில் கமலுக்கு முத்தம் தருவதும், காரில் ஏறிய பிறகு கமலின் கன்னத்தில் இருக்கும் லிப்ஸ்டிக் கறையை ரேவதி துடைக்க முயல்வதும் கவிதைத்தனமான காட்சிகள். இந்த லவ் டிராக் எபிஸோடில் கமல், கௌதமி, ரேவதி ஆகிய மூவருமே போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.

சக்திவேல், பெரிய தேவராக உருமாறுவது எப்போது?

தூவலூர் கிராமத்தின் ‘காட்டுமிராண்டித்தனத்தை’ சகித்துக் கொள்ள முடியாமல் எப்போது வெளியேறலாம் என்கிற தவிப்பில் இருக்கும் சக்திவேல், எப்போது பெரிய தேவரின் இடத்தில் சென்று அமர்கிறார் என்று பார்த்தால் வேட்டி, சட்டை அணிந்து வேறு கெட்டப்பில் கமல் வரும் இண்டர்வெல் காட்சியைத்தான் பலரும் சொல்லக்கூடும். ஆனால் அதற்கு முன்பே கமலின் அகமாற்றம் நிகழ்ந்து விட்டதைக் குறிப்பால் உணர்த்தும் காட்சி ஒன்று இருக்கிறது. கண்மாய் உடைக்கப்பட்ட சதிவேலை காரணமாக எளிய மக்களில் பலர் உயிரையும் உடைமையையும் இழந்து போயிருப்பதை இடிந்து போன மனதுடன் பார்த்துக் கொண்டிருக்கும் கமல், ஒரு குழந்தையின் சடலம் மரக்கிளையில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தன் செருப்பைக் கழற்றி விட்டு அந்தச் சகதியில் கால் வைத்து பதறியடித்துக் கொண்டு ஓடுவார். சக்திவேலுக்கும் அந்த மண்ணுக்குமான பிணைப்பு மறுபடியும் உருவாகி விட்டதைக் காலின் க்ளோசப் காட்சி மூலம் நம்மால் உணர முடியும்.

தேவர் மகன்

சிவாஜி கணேசனின் நடிப்பைத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்ட படங்களுள் ஒன்று ‘தேவர் மகன்’. அந்தப் பஞ்சாயத்துக் காட்சி ஒன்று மட்டுமே போதும். சிவாஜியின் உடல்மொழியும் வசனங்களும் அத்தனை இயல்பாக இருக்கும். “இந்தக் காட்டுமிராண்டிக பயக கூட்டத்துல உங்கொப்பனும் ஒருத்தன்றதை மறந்துடாத..." என்பது தொடங்கி, "செத்துப் போ... யாரு தடுக்க முடியும்... அதுக்கு முன்னாடி ஊருக்கு ஏதாச்சும் நல்லது பண்ணு" என்று பாசமும் ஆவேசமும் கலந்து கமலின் சட்டையைப் பிடிக்கும் காட்சியின் சூடும் சுவையும் ரோலர் கோஸ்டர் அனுபவம் என்றால், மழைநீரில் கால் வழுக்கும் மகனைப் பார்த்து "யய்யா... பார்த்து..." என்று சிவாஜி பதறுவதும் பின்பு மெல்ல இருவருமே ஒருவரையொருவர் ரகசியமாகப் பார்த்துக் கொள்வதுமான காட்சியின் நிறைவு இன்னொரு அற்புத சுவாரஸ்யம்.

காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராஜன் என்று நாடகக் காலத்திலிருந்து நடித்துக் கொண்டிருக்கும் பழைய நடிகர்களை இந்தப் படத்தில் இணைத்துப் பெருமைப்படுத்திய கமல்ஹாசன், இசக்கி என்னும் மறக்க முடியாத பாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைத்தார். கை வெட்டுப்பட்ட நிலையில் "வெட்டினது நம்ம பயதேன். துரத்திட்டுப் போனேன். கண்ணு சுத்திட்டு வந்துருச்சு" என்று வசனம் பேசும் காட்சியில் வடிவேலுவின் நடிப்பு அருமையாக அமைந்திருந்தது. "வாடா... தேவர் மகனே..." என்று முகத்தில் கொலைவெறி பொங்க சண்டைக்கு அழைக்கும் காட்சி முதற்கொண்டு பல காட்சிகளில் அசத்தி ‘மாயனாகவே’ உருமாறியிருந்தார் நாசர். எங்கெல்லாம் அதிகார சக்தி இருக்கிறதோ, அங்கெல்லாம் அண்டி வாழும் தன்மையை, தன்னுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் மதன் பாப்.

ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும் அறையில் கமலுக்கும் நாசருக்கும் இடையில் நடக்கும் உக்கிரமான சண்டைக் காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அற்புதமான லைட்டிங், ஸ்ரீராமின் அசாதாரணமான ஒளிப்பதிவு திறமைக்குச் சான்று. கண்மாய் உடைந்து சிதறும் நீர் பெருகியோடும் காட்சியும் திருவிழா காட்சிகளும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

போற்றிப் பாடடி பொண்ணே... அற்புதமான இசைதான். ஆனால்?

இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்குக் கூடுதல் பலமாக அமைந்தன. மாயாமாளவகௌளை ராகத்தில் இசைக்கப்பட்ட ‘மாசறு பொன்னே வருக’ பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனதைப் பிசையும் உணர்வு ஏற்படும். புது மணமகள் வீட்டுக்கு வருவதை மகிழ்ச்சியான தொனியில் இசைப்பதுதான் மரபு. ஆனால் ‘மணமகளே’ பாடலை சோகத்தின் சாயலோடு இசையமைத்திருப்பார் ராஜா. தன் காதலைத் தியாகம் செய்த கமலின் துயரம் அந்தப் பாடலில் அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருக்கும். கிராமத்துப் பாணியின் இழுவையின் அழகியலை ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலில் அற்புதமாகக் கொண்டு வந்திருப்பார் எஸ்.ஜானகி. ‘சாந்துப் பொட்டு’ பாடலை எஸ்.பி.பியும் கமல்ஹாசனும் இணைந்து அற்புதமாகப் பாடியிருப்பார்கள். பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் வாலி.

தேவர் மகன்
மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநராக இருந்த பரதன், தமிழில் இயக்கிய நான்கு திரைப்படங்களில் தேவர் மகனை முதன்மையானதாகச் சொல்ல முடியும். கமலை வைத்து இயக்கிய திறமையான இயக்குநர்களுக்கு நியாயமாகச் சென்று சேர வேண்டிய கிரெடிட் பெரும்பான்மையும் கமலுக்கே சேர்ந்து விடுவதை ஒருவகையான நடைமுறை அவலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

'தேவர் மகன்' திரைப்படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் உட்படப் பல அங்கீகாரங்கள் கிடைத்தன. ஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட படமாகவும் தேர்வு பெற்றது. சிறந்த துணை நடிகருக்கான விருதிற்காக சிவாஜி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கமலின் ஆலோசனை காரணமாக அந்த விருதைப் பெற மறுத்துவிட்டார். சிவாஜி என்கிற மகத்தான நடிகர், துணை நடிகருக்கான விருதைப் பெறுவதை கமல் ரசிக்கவில்லை. பிறகு 1997-ல் இந்தியச் சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருதை சிவாஜி பெற்றார்.

சாதிய வன்முறைக்கு 'தேவர் மகன்' திரைப்படம் காரணமாக இருந்ததா?

ஒரு படைப்பில் அதன் சித்திரிப்புகள் பல்வேறு விதங்களிலிருந்தாலும் அதன் ஒட்டுமொத்த மையம் எதை நோக்கிப் பயணிக்கிறது, எதை அழுத்தமாக வலியுறுத்துகிறது என்பதைத்தான் ஒரு பார்வையாளன் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அந்த வகையில் ‘தேவர் மகன்’ திரைப்படத்தின் மையம் சாதியத்திற்கு எதிரானதாகவே தொடர்ந்து பயணிப்பதைக் கவனிக்க முடியும்.

பெரிய தேவர், சாதி குறித்த பெருமிதம் கொண்டிருப்பவர் என்றாலும் ஊர் மக்களின் நலனைப் பிரதானமாகக் கொண்டிருப்பவர். மாயனோ சாதியப் பெருமிதமும் பங்காளிப் பகையுணர்ச்சியும் கொண்டு சாதிய வன்முறைகளை உருவாக்குபவனாக இருக்கிறான். ஊர் அழிவது பற்றி அவனுக்குக் கவலையில்லை. சக்திவேலுக்கு இந்த காட்டுமிராண்டித்தனங்களோடு முற்றிலும் உடன்பாடில்லை. அவன் தனக்குள் இருக்கும் மிருகத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதோடு சாதிய வன்முறைகளை வெறுக்கிறான். அவற்றை முற்றிலும் தவிர்க்க முயல்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் வன்முறையின் சூழல் அவனையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் பரிதாபம் நிகழ்கிறது. இந்த மூவருக்கும் இடையில் நிகழும் போராட்டம்தான், படத்தின் மையம்.

தேவர் மகன்

சக்திவேல்தான் இந்தப் படத்தின் நாயகன் என்னும் போது அதன் குரல் சாதியத்திற்கும் வன்முறைக்கும் எதிராகவே தொடர்ந்து ஒலிப்பதைக் கவனிக்கலாம். முன்முடிவுகள் இன்றி சமநிலையோடு படத்தைப் பார்க்கும் எவரின் மனதிலும் இந்தச் செய்திதான் சென்று சேரும். இசக்கியின் கை வெட்டுப்படும் போது, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் "போலீஸ்ல புகார் சொல்லியாச்சா?" என்றுதான் கேட்கிறான் சக்திவேல். ஆனால் இசக்கியோ, கிராமத்து வழக்கத்தில் "அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்கய்யா. வேல்கம்பு... இல்லைன்னா பஞ்சாயத்து. அதுதான் ரைட்டு" என்கிறான்.

கண்மாயை உடைத்து உயிர்ச் சேதம் ஏற்படுத்திய ஆசாமியைத் துரத்திப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார் சக்திவேல். பொதுப்பாதைக்கு நடுவில் வேலி கட்டி ஊர் மக்களுக்கு மாயன் இடையூறு செய்யும் போது அதைச் சமாதானமாக முடித்து வைக்க முயல்கிறான் சக்திவேல். அதில் ஏற்படும் நெருக்கடியால் தன் காதலையே அவன் இழக்க வேண்டியிருக்கிறது. திருவிழா ஊர்வலத்தில் வெடிகுண்டு வைத்துப் பல உயிர்களைச் சாகடிக்கும் மாயனை அடித்து வீழ்த்தி "போலீஸ் ஸ்டேஷன்ல சரண்டர் ஆகு” என்று எச்சரிக்கிறான். ஆனால் மாயனின் தொடர் வன்முறை காரணமாக, தற்காப்பிற்காக அவனும் சண்டையிட வேண்டியிருக்கிறது. இந்தச் சண்டைக்காட்சியையும் மாயனின் தலை வெட்டுப்படும் காட்சியையும் கவனித்தாலே சக்திவேல் என்னும் பாத்திரத்திற்கு வன்முறையும் சாதிய உணர்வும் உகந்ததாக இல்லை என்று எளிதாகச் சொல்லி விட முடியும்.

வன்முறையை அறவே ஒதுக்கும் சக்திவேல்

படத்தின் இறுதியிலும் ‘வன்முறையைக் கைவிட்டு இளம் தலைமுறைக்குக் கல்வியைக் கற்றுத் தாருங்கள்’ என்கிற நீதிதான் சக்திவேல் பாத்திரத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. 'அதுவரை வன்முறைக் காட்சிகளைக் காட்டிவிட்டு இறுதியில் மட்டும் நீதி சொன்னால் ஆயிற்றா?’ என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. புராணக் கதையாடல்கள் முதற்கொண்டு கதை சொல்லும் பாணியே இதுதான். ஒரு கெட்டவனுக்கும் நல்லவனுக்கும் இடையில் நிகழும் அறப்போராட்டத்தில் கெட்டவனின் தீமைகள் தொடர்ந்து நிகழும். அவற்றோடு போராடும் நல்லவன் இறுதியில் வெல்வான். எம்.ஜி.ஆர் படங்கள் முதற்கொண்டு இதுதான் கதையாடல் மரபு. ஒரு கதையின் நீதியைத்தான் நம் மனது பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது கதையின் பிரச்னை அல்ல. தவறாக உள்வாங்கிக் கொள்பவர்களின் பிரச்னை.

தேவர் மகன்

‘தேவர் மகன்' எதனால் சாதிய ஆதரவுப் படமாக விமர்சிக்கப்படுகிறது?

படத்தில் வந்த ‘போற்றிப் பாடடி பொண்ணே, தேவர் காலடி மண்ணே’ என்கிற பாடலை, சம்பந்தப்பட்ட சமூகத்தில் சிலர் சாதியப் பெருமிதத்தோடும் பிற சமூகங்களை வம்பிழுத்து மலினப்படுத்தும் நோக்கத்திலும் பொதுவெளியில் ஒலிபரப்பியதால் சர்ச்சைகளும் வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. ஒரு கதாபாத்திரத்தின் தன்மையைத் திரைக்கதையில் அமைக்கும் போது யதார்த்தமான மற்றும் நம்பகத்தன்மையான விஷயங்களை இணைப்பது திறமையான உருவாக்கத்திற்குச் சான்று. இந்தப் பாடல் எந்தச் சூழலில் பாடப்படுகிறது? தன் சமூகம் குறித்த பெருமிதம் பெரிய தேவருக்கு உண்டு. எனவே அதை வாழ்த்தி கூத்துக்காரர்கள் பாடுவது போன்று பாடல் காட்சி வருகிறது.

படம் முழுக்க சாதியத்திற்கு எதிராக ஒலிக்கிற சக்திவேலின் குரல், இறுதியில் சொல்லப்படுகிற நீதி ஆகிய அனைத்தையும் சௌகரியமாக உதறி எறிந்து விட்டு, தங்களின் சாதியத் திமிருக்கு வாகாக அமைந்த பாடல் வரிகளை மட்டும் உருவியெடுத்து சிலர் பயன்படுத்திக் கொண்டது அவர்களின் குற்றமா, சினிமாவின் குற்றமா? நோயைக் குணப்படுத்தும் கசப்பு மருந்தைத் தவிர்த்து விட்டு அதன் மீதுள்ள இனிப்பை மட்டும் சுவைக்கும் சிறுபிள்ளைத்தனம் இது. நமக்கு இன்னமும் கூட சினிமாவை அணுகத் தெரியவில்லை என்பதற்கான உதாரணம். ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை விளக்கும் பாடல் வரிகளை, சாதியத் திமிர் கொண்ட சிலர் பயன்படுத்தி அதனால் விளைந்த கலவரத்தின் காரணமாக, சாதியத்திற்கு எதிரான தொனியைக் கொண்டிருக்கிற ஒரு திரைப்படத்தையும் பிரபலமான ஹீரோ என்பதற்காக கமல்ஹாசனையும் குறைகூறுவது அறிவுடைமை ஆகாது.

எனில் கமல் மீது பிழையே இல்லையா? உண்டு. ஒரு திரைப்படத்தில் வெளிவந்த பாடல் வரிகளும் வசனங்களும் சமூகத்தின் வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்து விட்டன. சினிமாவின் மீது பிழையில்லை என்றாலும் அது ஒரு தூண்டுதலாக அமைந்து விட்டது என்பதற்கான தார்மீக பொறுப்பை கமல் உடனே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ என்று தலைப்பிட்டு விட்டு, அதை ஒரு சமூகத்தின் தலைவர் எதிர்த்த போது விதண்டாவாதம் செய்திருக்கத் தேவையில்லை. கலைஞர்களுக்கு இது சார்ந்த சுயகட்டுப்பாடுகளும் பொறுப்புகளும் வேண்டும்.

"'தேவர் மகன்' படத்தில் வந்த பாடலுக்காகவும் படத்தின் தலைப்பிற்காகவும் நானும் இளையராஜாவும் (வாலியும்) இணைந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்தப் படத்தை உருவாக்கிய போது இப்படியெல்லாம் எதிர்விளைவுகள் நிகழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதற்கான எவ்வித நோக்கமும் எங்களிடமும் இல்லை. ஒரு நல்ல சினிமாவை உருவாக்குவது மட்டுமே எங்களின் மனதிலிருந்தது" என்பது போல் பல வருடங்கள் கழித்து விகடனின் ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் கமல். இந்தப் பொறுப்புணர்ச்சியை அவர் முன்பே வெளிப்படுத்தியிருக்கலாம். படைப்புச் சுதந்திரத்தில், எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் இடையூறு நிகழும் போது கலைஞர்களுக்கு ஆட்சேபமும் கோபமும் வருவது நியாயம்தான். ஆனால் ஒரு படைப்பு, சமூகத்தில் தற்செயலான எதிர்மறைகளை நிகழ்த்தும் போது அதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

தேவர் மகன்
இடைநிலைச் சாதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிகழும் பங்காளிச் சண்டைதான் படத்தின் மையம். ஆனால், அதுவரையான தமிழ் சினிமாவில் சித்திரிக்கப்பட்டது போலவே, இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்கள், முற்பட்ட சாதியினரைச் சார்ந்திருப்பது தேவர் மகனிலும் தொடர்கிறது. கை வெட்டப்பட்டாலும் முதலாளி மீது விஸ்வாசமாக இருக்கும் இசக்கிகள் ஓரமாகவே வந்து போகிறார்கள். மாறாக ‘இசக்கி’ பாத்திரத்தைக் கமல் ஏற்றிருந்தால் அது சமூகநீதியை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு போராட்ட நாயகனை ஹீரோவாக கமல் அமைத்திருந்தால் அது இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இது போன்ற சில விமர்சனங்களை 'தேவர் மகன்' திரைப்படம் மீது வைக்கலாம் என்றாலும் படத்தின் மையத்தையே தலைகீழாக மாற்றி ‘சாதிய ஆதரவுப் படைப்பு, வன்முறைக்குக் காரணமாக இருந்த சினிமா’ என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வைப்பது முறையானதல்ல.

“அவன் மெல்லமாத்தான் வருவான்" என்பது இந்தப் படத்தில் வரும் ஒரு வசனம். இது சினிமாவை இன்னமும் கூட முறையாக அணுகத் தெரியாத பார்வையாளர்களுக்கும் கூட பொருத்தமான வசனம்தான். சாதியத்திற்கு எதிரான குரலைத் தனது மையமாகக் கொண்டிருக்கும் ‘தேவர் மகன்’ சாதிய வன்முறைக்குக் காரணமாக அமைந்ததாகச் சொல்லப்படுவதை ஒருவகையான அவல நகைச்சுவை என்றே சொல்ல வேண்டும். சாதியப் பெருமிதங்களை வெளிப்படையாகச் சித்திரிக்கும் 'எஜமான்', 'சின்னக்கவுண்டர்' போன்ற படங்களுக்குக் கூட இங்குப் பெரிதாக எவ்வித எதிர்ப்புமில்லை என்பதைக் கவனித்தால் இந்த அவல நகைச்சுவையின் சதவிகிதம் கூடும். சமூகத்தில் உள்ள சாதிய வெறியை மாற்றுவதுதான் முக்கியமே ஒழிய, சாதியை எதிர்க்கும் திரைப்படங்களைக் குறை சொல்வது தவறு மட்டுமல்ல, தப்பித்தல் மனோபாவமும் ஆகும்.

தேவர் மகன்
சுருக்கமாகச் சொன்னால் ‘தேவர் மகன்’, 'தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சரியான படம்' என்றுதான் சொல்ல வேண்டும்.


from விகடன்

Comments