மககள என பககம: சதயரஜன வலலனஸ நடபப; அபபத க.ஜ.எஃப பணயல தடதடதத மஷன கன!

1987-ல் வெளிவந்த ‘மக்கள் என் பக்கம்’, ஒரு மலையாளப் படத்தின் ரீமேக். ‘ராஜாவின்டே மகன்’ என்கிற அந்த மலையாளப் படம்தான் மோகன்லாலை சூப்பர் ஸ்டாராக்கியது. தமிழில் சத்யராஜ் நடித்தார். ஒரு கடத்தல்காரனுக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் இந்தப் படத்தின் மையம். சிட்னி ஷெல்டன் எழுதிய ‘Rage of Angels’ என்கிற நாவலையொட்டி அமைந்த இந்தக் கதையில், இருவருக்கும் இடையில் நடக்கும் மோதலில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கிற பெண் வழக்கறிஞராக அம்பிகா நடித்திருந்தார். மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படம், தமிழில் கவனத்துக்குரிய முயற்சியாக மட்டுமே மாறியது. ஜனரஞ்சக அம்சங்கள் நிறைந்த இந்தப் படத்தின் சுவாரஸ்யத்திற்கு சத்யராஜின் நக்கலான நடிப்பு உறுதுணையாக இருந்தது.
மக்கள் என் பக்கம்

வில்லத்தனம் செய்தாலும் அதில் நக்கலையும் நையாண்டியையும் ரசிக்கத்தக்க விதத்தில் கலந்த நடிகராக எம்.ஆர்.ராதாவை மட்டுமே முதன்மையாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில் ஒரு குறிப்பிடத்தக்கத் தொடர்ச்சியான பங்களிப்பை சத்யராஜ் அளித்தார். வில்லன் பாத்திரங்களிலிருந்து விலகி ஹீரோவாக அவர் முன்னேறிக் கொண்டிருந்த சமயத்தில் ஆன்ட்டி ஹீரோவாக அவர் நடித்த படங்களில் முக்கியமானது ‘மக்கள் என் பக்கம்’. சாம்ராஜ் என்கிற கடத்தல்காரனாக நையாண்டியாக வசனம் பேசியதோடு ஆக்ஷன் காட்சிகளிலும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தார். ரகுவரனும் ‘நிழல்கள்’ ரவியும் சத்யராஜிற்கு விஸ்வாசமான ஆசாமிகளாக நடித்திருந்தார்கள். அரசியல்வாதி பாத்திரத்தில் ராஜேஷ் நடித்தார்.

‘மக்கள் என் பக்கம்’ என்பது, எம்.ஜி.ஆர் செயலாக நடித்துக் கொண்டிருந்த எழுபதுகளின் காலகட்டத்தில் அவருக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்த படங்களின் தலைப்புகளுள் ஒன்றாக இருந்தது. அவர் முதலமைச்சராகி சினிமாவில் இருந்து விலகியதால் அது சாத்தியமாகவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரை விடவும் வேறு எவருக்கும் இந்தத் தலைப்பு பொருத்தமாக இருந்திருக்காது என்றே சொல்ல வேண்டும். மோகன்லால் நடித்த மலையாளப்படம் வெற்றியடைந்ததால், அதைத் தமிழிற்குக் கொண்டு வர விரும்பிய கே.பாலாஜி, சத்யராஜை ஹீரோவாக வைத்து இந்தத் தலைப்பைப் பயன்படுத்திக் கொண்டார். சத்யராஜின் நடிப்புப் பயணத்தில் ‘மக்கள் என் பக்கம்’ குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தது.

சாம்ராஜ் பாத்திரத்தில் கலக்கிய சத்யராஜ்

சத்யராஜூம் ராஜேஷூம் இளம் வயது நண்பர்கள். ராஜேஷ் தந்திர புத்தி கொண்டவர் என்பதால் வளர்ந்து ஊழல் அரசியல்வாதியாக ஆகிறார். ஒரு கடத்தல்காரனிடம் வளரும் சத்யராஜ், பெரிய கடத்தல்காரனாக ஆகிறார். இளம் வயதில் ஏற்பட்ட பகை காரணமாக இருவரும் ஒருவரையொருவர் அழிக்கக் கொலைவெறியோடு இருக்கிறார்கள். சத்யராஜ் கடத்தல் தொழில் செய்பவர் என்றாலும் அடிப்படையான மனிதாபிமானம் கொண்டவர். ராஜேஷூக்கு அது சுத்தமாக இல்லை. தன் அரசியல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பயணிப்பவர். இவர்களுக்கு இடையில் நடக்கும் போரில் இளம் பெண் வழக்கறிஞரான அம்பிகா மாட்டிக் கொள்கிறார்.

மக்கள் என் பக்கம்

கடத்தல் தொழில் செய்யும் சத்யராஜை அம்பிகா வெறுத்தாலும் ஒரு கட்டத்தில் அவரின் நல்ல மனதைப் புரிந்து கொள்கிறார். ஒரு குழந்தைக்குத் தாயாக இருந்தாலும் அவரிடம் காதல் கொள்கிறார் சத்யராஜ். அதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமையில் இருக்கிறார் அம்பிகா. அரசியல்வாதிக்கும் கடத்தல்காரனுக்குமான மோதல் உச்சக்கட்டத்தை எட்டுகிறது. கெட்ட அரசியல்வாதியான ராஜேஷால் மக்களுக்குத் தீமை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு இறுதி முடிவை எடுக்கிறார் சத்யராஜ்.

அந்தக் காலத்திலேயே கே.ஜி.எஃப் டிரைய்லரை பார்ப்பது போல, மிஷின் கன் படபடக்கும் க்ளைமாக்ஸூடன் படம் நிறைகிறது. அம்பிகா எடுக்கும் ஒரு முடிவு, அந்தக் க்ளைமாக்ஸை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.
மக்கள் என் பக்கம்

ராஜேஷின் அமைதியான வில்லத்தனம்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிரிமினலான சாம்ராஜ் என்கிற பெயரைக் கொண்ட பாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருந்தார் சத்யராஜ். தன்னைப் புகைப்படம் எடுக்கும் பத்திரிகை நிருபரைப் பார்வையினாலேயே மிரட்டி கேமரா ரோலை வெளியில் எடுக்க வைக்கும் ‘என்ட்ரி’ காட்சியே சூப்பர். தன் எதிரியான ராஜேஷூடன் இவர் பேசும் காட்சிகளில் எல்லாம் நக்கலும் அரசியல் நையாண்டியும் பெருகியோடின. ‘பதவியை வெச்சிக்கிட்டு ஏதாச்சும் வித்தை காட்டலாம்ன்னு நெனச்சே... வெட்டிடுவேன்’ என்று இவர் சொல்வதே ஆக்ரோஷமாக அல்லாமல் குழந்தைக்குச் சோறு ஊட்டுவது மாதிரி அத்தனை கூலாக இருக்கும். ராஜேஷின் அட்ராசிட்டி எல்லை மீறும் போதெல்லாம் சத்யராஜிற்குக் கோபம் பெருக்கெடுக்கும்.

ஆனால் அம்பிகாவிடம் காதலை இரஞ்சும் போது, ‘கடலோரக் கவிதைகள்’ சின்னப்பதாஸ் வந்து முகத்தில் அமர்ந்து கொள்வார். சத்யராஜை அப்போது பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ‘அடேங்கப்பா... உலக நடிப்புடா சாமி’ என்று கவுண்டரின் வசனம் நம் மைண்ட் வாய்ஸில் வரும். தன்னை நம்பி இருக்கும் ஆட்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று சத்யராஜ் துடிக்கும் காட்சிகள் எல்லாம் சாம்ராஜ் என்கிற பாத்திரத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்தன.

மக்கள் என் பக்கம்

ராஜேஷ் ஓர் இயல்பான நடிகர். இவரது உடல்மொழி பாத்திரத்திற்கு வெளியே நீட்டிக் கொள்ளாமல் ஒழுங்குணர்ச்சியுடன் இருக்கும். அரசியல் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு இவர் செய்யும் அமைதியான வில்லத்தனங்கள் நம்பகத்தன்மையுடன் அமைந்தன. தன் பிரதான எதிரியான சத்யராஜை ஒழித்துக் கட்டுவதற்காகப் படம் முழுவதும் முயன்று கொண்டேயிருப்பார். இவரது அரசியல் கைத்தடிகளாகக் கல்லாப்பெட்டி சிங்காரம், எம்.ஆர்.கே., வாத்து சிவராமன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

ராஜேஷிற்கு ஆதரவாக நிற்கும் சமூக சேவகியாக நடித்திருந்த மனோரமா, ‘மகளிர் அணித்தலைவிகளின்’ அட்ராசிட்டிகளை அற்புதமாகப் பிரதிபலித்திருந்தார். அவ்வப்போது ‘சஸ்பெண்ட்’ ஆகும் மனோரமாவின் ‘ஹஸ்பெண்டுகளில்’ ஒருவராக ஜனகராஜ், பெண்மை மிளிரும் உடல்மொழியில் கலகலப்பூட்டினார். மனோரமா வெளியே துரத்திய பிறகு ‘பாலிடெக்னிக்’ முதல்வராக வந்து ஜனகராஜ் பேசும் காட்சிகள், நம்ம ஊர் ‘கல்வித் தந்தைகளை’ நினைவுபடுத்தின. தலையில் முடியுடன் இருந்த எம்.எஸ்.பாஸ்கரை கூட ஒரு காட்சியில் காண முடியும்.

வில்லனாகத் தொடங்கி ஹீரோவாக நடித்தவர் சத்யராஜ். இதன் எதிர்த்திசையில் ஹீரோவாக நடித்து பிறகு வில்லனாக மாறிய ரகுவரன், இந்தப் படத்தில் சத்யராஜிற்கு விஸ்வாசமான வலதுகரமாக நடித்திருப்பார். ‘நிழல்கள்’ ரவியின் மெல்லிய நகைச்சுவைகளும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். சத்யராஜ் மீதுள்ள வழக்குகளைச் சமாளிக்கும் வழக்கறிஞராக சில காட்சிகளில் வந்துபோனார் நாகேஷ். முக்கியத்துவம் இல்லாத பாத்திரம்தான் என்றாலும் தான் வந்த காட்சிகளில் எல்லாம் தன் பிரத்யேக டைமிங் முத்திரையை அட்டகாசமாகப் பதித்துச் சென்றார்.

மக்கள் என் பக்கம்

ஆண்டவனைப் பார்க்கணும்... அவனுக்கும் ஊத்தணும்...

இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். தனது இனிமையான மெலடி பாடல்களின் மூலம் இன்றும் கூட நினைவுகூரப்படுபவர். மேலதிகமாக இன்னமும் கூட கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்குத் திறமையான இசையமைப்பாளர்.

‘ஆண்டவனைப் பார்க்கணும்... அவனுக்கும் ஊத்தணும்...’ என்று குடிபோதையில் சத்யராஜ் பாடும் பாடல் பிரபலமானது. இந்தப் பாடலை அட்டகாசமாகப் பாடியிருந்தார் எஸ்.பி.பி... அவரது டிரேட் மார்க் நக்கல் சிரிப்பு இதிலும் எட்டிப் பார்க்கும். எஸ்.ஜானகி பாடிய ‘மானே பொன் மானே விளையாட வா...’ என்பது கேட்பதற்கு இனிமையான மெலடி. ‘கொங்கு நாட்டு தங்கமடா’, ‘பஞ்சாங்கம் ஏங்க’ உட்பட அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தவர் வைரமுத்து.

நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல...

பூவுக்கு அடிமை பதினாறு வயசுல...

நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல...

சாவுக்கு அடிமை அட நூறு வயசுல...

என்று ஒரு மனிதனின் வாழ்க்கையை நான்கே வரிகளில் சுருக்கமாக எழுதிவிட்டார் வைரமுத்து.

மக்கள் என் பக்கம்

‘மக்கள் என் பக்கம்’ படத்தை இயக்கியவர் கார்த்திக் ரகுநாத். 'அண்ணி', 'சாவி', 'மருமகள்', 'ராஜமரியாதை', 'வீரபாண்டியன்' என்று சொற்ப எண்ணிக்கையில் படங்களை இயக்கிய இவரைப் பற்றிய மேலதிக விவரங்கள் இல்லை. மலையாளப் படத்தின் ரீமேக் என்றாலும் தமிழிற்கு ஏற்றபடி ஜனரஞ்சகமான அம்சங்களுடன் சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார் கார்த்திக் ரகுநாத். ‘இதில் வரும் காட்சிகளும் வசனங்களும் யாரையும் குறிப்பிடவில்லை’ என்று டைட்டில் கார்டில் டிஸ்கிளைய்மர் போட்டாலும் ‘ரெண்டு கட்சிங்க கிட்டயும் மாத்தி மாத்தி ஏமாறணும்ன்றதுதான் மக்களோட தலையெழுத்து போல இருக்கு’ என்பது போன்ற துணிச்சலான வசனங்கள் இடம் பெற்றன. இதுபோல் பல இடங்களில் நையாண்டியும் குத்தலான வசனங்களையும் எழுதி ரசிக்க வைத்திருந்தார் ஏ.எல்.நாராயணன்.

சாராயம் கடத்திச் செல்லும் லாரிகளை போலீஸ் மடக்கப் போகும் செய்தியைக் கேள்விப்பட்டு, வெளிநாடு சென்று திரும்பும் அரசியல்வாதியை வரவேற்கச் செல்வது போல் நூறு ஆட்டோக்களை கொண்டு சென்று காவல்துறையின் பிளானை சத்யராஜ் கலைத்துப் போடும் காட்சி நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தது. (ஒளிப்பதிவு: அசோக் சௌத்ரி). கொலை வழக்கில் சிக்கும் ரகுவரனை விடுவிப்பதற்காக அம்பிகா போடும் திட்டம், நீதிமன்றக் காட்சிகள், அங்கு வெளிப்படும் சத்யராஜின் நகைச்சுவை அலப்பறை போன்ற காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தன. கடத்தல்காரனிடமிருந்து உதவி பெறக்கூடாது என்று பிடிவாதமாக அம்பிகா காட்டும் நேர்மை அவரது பாத்திரத்தைத் தனித்துக் கவனிக்க வைத்தது.

மக்கள் என் பக்கம்
சத்யராஜின் நக்கலான நடிப்பு, ராஜேஷின் அமைதியான வில்லத்தனம், அம்பிகாவின் பரிதவிப்பு, பொறி பறக்கும் அரசியல் வசனங்கள், இனிமையான பாடல்கள், சுவாரஸ்யமான திரைக்கதை என்று ஒரு வெகுசன படைப்பிற்கு உரிய அத்தனை இலக்கணங்களுடன் அமைந்த ‘மக்கள் என் பக்கம்’ திரைப்படத்தை இன்றும் கூட பார்த்து ரசிக்கலாம்.


from விகடன்

Comments