வெளிநாடு சென்று பேயைப் படம் பிடிக்க முயலும் யூடியூபர்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்களே இந்த 'அஸ்வின்ஸ்' (Asvins).
அமானுஷ்யங்கள் நிரம்பிய இடங்களுக்குச் சென்று 'Found Footage' வீடியோ எடுக்கும் யூடியூபர்களாக இருக்கிறார்கள் அர்ஜுனும் (வசந்த் ரவி) அவனது நண்பர்களும். அவர்களுக்கு பிளாக் டூரிசம் (Black Tourism), அதாவது பேய் பிசாசுகள் இருக்கும் இடங்களைத் தேடி சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளைக் கவரும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கான முன்னோட்டமாக ஒரு பைலட் படம் எடுக்க, உலகின் மிகவும் ஆபத்தான, அமானுஷ்யமான பகுதி எனச் சொல்லப்படுகிற லண்டன் தீவில் இருக்கும் ஒரு பாழடைந்த மேன்ஷனுக்கு வருகிறார்கள்.
அந்த இடத்தில் ஏற்கெனவே இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் விநோத சடங்குகள் செய்து பலரைக் கொன்று, தானும் இறந்திருக்கிறார். அவரது பிரேதம் காணாமல் போன சம்பவமும் நடந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த இடத்திற்கும் இந்தியப் புராண இதிகாசமான அஸ்வினி குமாரர்கள் கதைக்கும் தொடர்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. இது தெரியாமல் உள்ளே வந்த யூடியூபர்களுக்கு அடுத்தடுத்து என்ன நடக்கிறது, அவர்கள் உயிரோடு நாடு திரும்புகிறார்களா என்பதைப் புராணக் கூறுகளை அடக்கி ஹாரர் த்ரில்லராக கொடுக்க முயன்று இருக்கிறது இந்த 'அஸ்வின்ஸ்'.
அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வசந்த் ரவி, தனக்குள் கேட்கும் இன்னொரு குரலோடு பேசும் குழப்பமான மனநிலையில் தவிப்பது, நண்பர்களின் உயிருக்காகப் போராடுவது, பேயைப் பார்த்துப் பயப்படுவது எனத் தனது கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதனைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
இருப்பினும் இரண்டு கதாபாத்திர வேற்றுமையைக் காட்டும் காட்சிகளில் தடுமாறியிருக்கிறார். வசந்த் ரவியின் மனைவியாக நடித்துள்ள சாராஸ் மேனனுக்குக் குறைவான திரை நேரமே கொடுக்கப்பட்டதால் பெரிதாக ஸ்கோர் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை. நண்பர்களாக வரும் சிம்ரன் பரீக், முரளிதரன், உதயதீப் ஆகியோர் பேய் படத்துக்கே உண்டான அச்ச உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வரும் விமலா ராமன், கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொடக்கத்தில் அஸ்வினி குமாரர்களின் புராணக் கதையை அனிமேஷனில் சொன்னாலும், படம் ஆரம்பித்த விதமே பிரபல ஹாலிவுட் படமான 'Paranormal Activity' உட்பட பல படைப்புகளில் காணப்பட்ட 'Found Footage' பாணியைப் பிரதிபலித்தது. முதல் 20 நிமிடங்கள் கதாபாத்திரங்களின் முகத்தைக் காட்டாமலேயே பாயின்ட் ஆஃப் வியூ பாணியில் திகில் அனுபவத்தைத் தந்து தனது பெயரைத் தேட வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தருண் தேஜா.
கதாபாத்திரங்கள் தோன்றிய பின்னர் விளக்குகள் அணைவது, திடீரென கதவுகள் திறப்பது மூடுவது, அமைதியாக இருந்துவிட்டு திடீரென சவுண்ட் எஃபெக்ட்ஸ் மூலம் அலறவைப்பது போன்ற பேய்ப்படங்களுக்குரிய டெம்ளேட் 'Jump Scare' காட்சிகளிலிருந்து இந்தப் படமும் தப்பவில்லை. அவற்றில் சில காட்சிகள் நிஜமாகவே திகில் கிளப்பியிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் அதைச் சொதப்பலான திரைக்கதையில் தந்திருப்பதால், ஆரம்பத்தில் ஏற்பட்ட சுவாரஸ்யம் மெல்ல மெல்லக் குறைந்துவிடுகிறது. தொழில்நுட்பங்களின் மீது மட்டும் கவனம் செலுத்திவிட்டு திரைக்கதையில் கோட்டைவிட்டிருப்பது சறுக்கல்.
இதனுடன் இடியாப்பச் சிக்கலாகக் காட்சிகள் ஒருபக்கம் போய்க் கொண்டே இருப்பதால் எந்தக் கதாபாத்திரத்தோடும் எமோஷனலாக ஒன்ற இயலவில்லை. இதனால் கதாபாத்திரங்களின் பிரச்னை, பார்வையாளர்களுக்கு எவ்வித பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனிடையே காட்சிகளுக்கு நடுவில் மீண்டும் மீண்டும் காட்டப்படும் தண்ணீர் அளவு குறித்த அந்தக் குறிப்பிட்ட மான்டேஜ் காட்சி நமது பொறுமையைச் சோதிக்கும் முயற்சி.
எந்தத் தெளிவும் இல்லாமல் முடியும் முதல் பாதியில் ‘ட்விஸ்ட்’ என வைக்கப்பட்ட அந்தக் காட்சி சற்றே நிமிர வைத்தாலும் அதன் நீட்சியாகப் பலமான காட்சிகள் எங்குமே அமைக்கப்படவில்லை. அதிலும் இரண்டாம் பாதியில் ஏற்கெனவே புரிந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் அதே தகவல்களாக அள்ளித் தெளிக்கிறார்கள். இது பார்வையாளர்களின் சுயமாகச் சிந்திக்கும் திறனுக்குப் போட்டியா அல்லது ஒரு குறும்படத்தை முழு நீளப்படமாக மாற்றும் முயற்சியா என்பது தெரியவில்லை.
காட்சிகளுக்கு மேலே வைக்கப்பட்டுள்ள வாய்ஸ் ஓவர் வசனங்களும் ரசிக்கும் படியாக எழுதப்படவில்லை. அதிலும் ‘மீண்டும் மீண்டுமா’ எனக் கேட்கத் தோன்றும் வகையில் அதே செய்தி திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகள் கொண்டு ஒலிக்கப்படுகின்றது. விஜய் சித்தார்த்தாவின் பின்னணி இசையும், “ராட்சஷ்ஷா” என கரகரக்குரலில் வரும் சிறிய பாடலும் கவனம் பெறுகின்றன. இசைக்கேற்ற காட்சியமைப்பு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் ஏ.எம்.சாக்கே அமானுஷ்ய உணர்வினை கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார். குறிப்பாக மேன்ஷன் காட்சிகளில் கேமரா கோணங்களில் மெனக்கெடல் தெரிகிறது. ஆனால் பாதாள உலகம் எனக் காட்டப்பட்ட காட்சிக்குப் பச்சை, சிவப்பு லைட்டை மட்டும் வைத்து போங்குக் காட்டியது ஏமாற்றமே. படத்தொகுப்பாளர் வெங்கட்ராஜன் திகில் காட்சிகளைத் தொகுத்த விதம் அருமை. திரைக்கதையின் குறையை மறைக்க, தொழில்நுட்ப ரீதியாக நிறையவே முயன்றிருக்கிறார்.
பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் மேன்சன், ஆங்காங்கே காட்டப்படும் பென்சில் ஓவியங்கள் எனக் கலை இயக்கத்தில் டான் பாலா கவனிக்க வைக்கிறார். ஆனால் 1000 ஆண்டுகளுக்கு மேலே மண்ணுக்குள் இருக்கும் சிலை, நேற்று பாத்திரக் கடையில் வாங்கியது போல ஜொலிப்பது ஆச்சர்யமே. மேக்கப்பில் இறுதி காட்சியில் சாத்தான் எனப் பல்லுக்குக் கறுப்பு மை பூசிப் பேச வைத்தது குபீர்.
மொத்தத்தில் டெக்னிக்கலாக பலமான தொடக்கத்தைக் கொடுத்தாலும், சுவாரஸ்யமற்ற திரைக்கதை, இழுவையான காட்சியமைப்பு என ஒரு குறும்படத்தைத் திரைப்படமாக மாற்றும் சோதனை முயற்சியாகவே படம் முடிகிறது. ஒருவேளை திரைக்கதையில் சற்று சிரத்தை எடுத்திருந்தால் வியக்க வைத்திருக்கலாம் இந்த 'அஸ்வின்ஸ்'.
from விகடன்
Comments