மோகன் ராஜா இயக்கிய ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின்.
அதன் பின் ‘சிவகாசி’, ‘கஜினி’, ‘போக்கிரி’ போன்ற படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் படங்களின் ஹிட்களைத் தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகள் வந்ததால் அங்கு சென்று சல்மான் கான், ஆமீர் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பின் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் உரிமையாளர் ராகுல் சர்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அரின் என்ற பெண் குழந்தையும் உள்ளது.
அசின் - ராகுல் சர்மா ஜோடிக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “ கோடை விடுமுறையில் குடும்பத்துடன் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, இந்த கற்பனையான, கொஞ்சம் கூட நம்பமுடியாத செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இது நாங்கள் எங்கள் குடும்பத்துடன் அமர்ந்து எங்கள் திருமணம் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்கு ‘பிரேக் அப்’ ஆகிவிட்டதாக வந்த செய்தியை நினைவூட்டுகிறது. விடுமுறையில் 5 நிமிடத்தை வீணாக்கியதற்காக வருந்துகிறேன். Pls do Better" என்று பதிவிட்டிருக்கிறார்.
from விகடன்
Comments