நான்கு வயதிலிருந்து பரதநாட்டியம் ஆடத் தொடங்கியவர் டாக்டர். ஆனந்தா சங்கர் ஜெயந்த். பரதநாட்டியத்துடன் குச்சிப்புடியும் கற்றுக் கொண்டு இரண்டு நடனங்களிலுமே பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்திருந்தாலும், ஹைதராபாத்தில் செட்டிலாகி இருக்கிறார். தென் ரயில்வே போக்குவரத்துத் துறையில் பணியாற்றிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இப்படி பன்முகத்தன்மையோடு துடிப்புடன் செயல்பட்டு வரும் ஆனந்தா சமீபத்தில் குழந்தைகளை கதை சொல்லிகளாக மாற்றி, அவர்கள் சொல்லும் கதையை வீடியோ பதிக்கப்பட்ட ஈ-புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கலாக்ஷேத்ராவில், பரதநாட்டியத்தில் முதுநிலை டிப்ளமோ முடித்து, 17 வயதில் ஹைதரபாத்திற்குச் சென்றார் ஆனந்தா. அங்கே சில வருடங்கள் கழித்து எட்டு மாணவர்களுடன் சங்கரானந்த கலாஷேத்ரா என்ற நடனப் பள்ளியை ஆரம்பித்து அதை மிகப்பெரிய அகாடமியாக உருவாக்கினார். பின், ஹைதாராபாத்தில் குச்சிப்புடி கற்று அப்படியே இந்திய குடிமையியல் தேர்வுகளும் எழுதினார். இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையில் சேர்ந்தார். இப்படி பல சாதனைகளைத் தன் வசம் வைத்திருந்த ஆனந்தாவின் வாழ்க்கை 2008ல் புரட்டிப் போடப்பட்டது.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கையில் பத்ம ஸ்ரீ விருதை வாங்கிய ஒரே ஆண்டில், ஆனந்தாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. “ஆரம்பத்துல நானுமே இதை கேட்டு ரொம்ப கோபப்பட்டேன், வேதனை அடைஞ்சேன். ஆனா என் கணவர் ரொம்ப நம்பிக்கையான மனிதர். அவர்தான் எனக்கு தைரியமும் ஆறுதலும் கொடுத்தார். 2008ல கேன்சர் என்கிற வார்த்தையைக் கூட சத்தமா வெளிய சொல்லமாட்டாங்க. அப்போ புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு எல்லாம் இல்ல. மூன்று மணி நேரம் தொடர்ந்து நடனமாடிட்டு இருந்த எனக்கு, படிகட்டு ஏறினாலே மூச்சு முட்ட ஆரம்பிச்சது. இந்த கேன்சர் நோய் நான் நாலு வயசுல இருந்து தினமும் ஆடும் என் நடனத்தை இனி ஆட முடியாம ஆக்கிடுமோன்னு எனக்கு பயம் வர ஆரம்பிச்சது.
எல்லாரும் பேச பயந்த விஷயத்தை, நானே சத்தமா பேசலாம்னு முடிவு செஞ்சேன். அது மட்டும் இல்லாம நானே எனக்கு மூணு விதிமுறைகளையும் உருவாக்கிகிட்டேன். என்ன ஆனாலும் என்னோட நடனத்தை நிறுத்தக் கூடாது. ரெண்டாவது, "கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி"னு யோசிக்கவே கூடாது. மூணாவதா, என்னைக்குமே கேன்சர் என்ன கட்டுப்படுத்த விடக்கூடாது. நான்தான் கேன்சரைக் கட்டுப்படுத்தனும்னு முடிவு செஞ்சேன்.
இந்த மனநிலைக்கு வந்ததும், கேன்சர் என் வாழ்க்கையோட ஒரு பக்கம்தான். அது என்னோட மொத்த வாழ்கை இல்லன்னு முடிவெடுத்தேன். எப்பவும் போல மறு நாள் காலையில எழுந்து என் நடன பயிற்சியை ஆரம்பிச்சேன். நடனம் ஆடும்போது, எனக்கு இருக்க நோய் என்ன விட்டு போன மாதிரி இருந்தது.
உடல்லையும் மனசுலையும் எவ்ளோ சோர்வு இருந்தாலும், நான் நாலு வயசுல இருந்து தினமும் ஆடுற நடனம் என்னை அதுல இருந்து வெளிய கொண்டு வந்தது. ஒவ்வொரு முறை கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை எல்லாம் எடுக்க போறதுக்கு முன்னாடி ப்யூட்டி பார்லர் போய் மெனிக்யூர், பெடிக்யூர் செய்து நடன நிகழ்ச்சிக்கு தயாராவது போலவே போவேன். சிகிச்சை முடிஞ்சதும், ஓய்வெடுத்துட்டு உடனே மேடை ஏறி ஆடப் போயிடுவேன். என் கவனம் முழுக்க நடனத்துல இருந்ததால, கேன்சரால என் உடல மட்டும்தான் ஆக்கிரமிக்க முடிஞ்சுதே தவிர, என் மனசும், மூளையும் அந்த நோய் பத்தின நினைப்பே இல்லாம எப்பவும் போல என்னை உயிர்ப்புடன் வச்சி இருந்தது. கேன்சர் பத்தி கவலைப் படத்தான் என்னோட மருத்துவர்கள் இருக்காங்களே. அதனால அவங்க வேலைய அவங்க பார்க்கட்டும்னு, நான் என் கவனத்தை எல்லாம் நடனத்துல மட்டுமே ஈடுபடுத்தினேன்.
என்ன இப்படி ஒரு சூழல்ல இருந்து வெளிய கொண்டு வந்தது நடனம்தான். எல்லாருக்கும் வாழ்க்கையில எப்போவாவது துவண்டு போற மாதிரி சில சந்தர்ப்பங்கள் வரும். இதுக்கு வழியே இல்லன்னு நினைக்கிற விஷயத்தைக் கூட, தைரியமா எதிர்க்கொண்டு வெளியே வர, நமக்கு இது போல வாழ்க்கையில சந்தோஷம் கொடுக்கக்கூடிய விஷயம் இருக்கணும். அது நடனமாத்தான் இருக்கணும்னு சொல்ல வரல. சமையல், வாசிப்பு, கோலம், ஓவியம், இசைன்னு ஏதாவது ஒரு விஷயத்த ஈடுபாடோட தினமும் பண்ணுங்க. அந்த விஷயம், உங்கள இது போல போராட்டமான நாட்கள்ல கொஞ்சம் கஷ்டமான நாட்கள்ல உங்களை மீட்டுக் கொண்டு வரும்” என்றவர் இரண்டு ஆண்டுகளில் கேன்சரோடு போராடி அதை வென்று இருக்கிறார். இவர், டெட் டாக்ஸில் தன் அனுபவத்தை பற்றி பேசிய காணொளி, இந்தியர்களின் தலைசிறந்த ஐந்து டெட்-டாக்ஸ் வீடியோக்களில் ஒன்றாக, Huffington Post என்ற ஆங்கிலப் பத்திரிக்கை மூலம் தேர்வாகியுள்ளது. சமீபத்தில் இதய பிரச்சனை வந்து ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்று இதயத்தில் நான்கு ஸ்டெண்ட் வைத்தும் நிறுத்தாமல் நடனமாடிக்கொண்டிருக்கிறார் ஆனந்தா.
நடனமும் ஒரு வகையான கதை சொல்லல் தானே. நடனம் வழியா நான் பல ஆண்டுகளாக கதை சொல்லிட்டுதான் இருந்தேன். கொரோனா ஊரடங்குல, குழந்தைகள் வெளியே விளையாட முடியாம, உறவினர்கள் யாரையும் பார்க்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு வேணும்னு எல்லாரும் முடிவு பண்ணி என்ன செய்யலாம்னு யோசிச்சோம். அப்போதான் குழந்தைகள வெச்சே குழந்தைகளுக்குக் கதை சொல்லலாம்னு யோசிச்சோம். 5 வயதில் இருந்து 13 வயது வரை உள்ள குழந்தைகளை, அவர்களுக்குப் பிடித்த கதையைச் சொல்லச் சொன்னோம். இந்தக் கதையை இசை, நடனம், நாடகம், எழுத்து, கைப்பாவை என்று எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம்.
எந்த மொழியில் வேண்டுமானாலும் கதைகள் இருக்கலாம் என்று சொன்னதால், இந்தியாவில் இருந்து மொத்தம் 13 மொழிகளில் குழந்தைகள் கதை சொல்லி வீடியோ பதிவாக அனுப்பினார்கள். அதை பின்னர் அழகான அனிமேஷன்களாக மாற்றி, ’குட்டிக் கதைகள்’ என்ற யுடியூப் தளத்தில் ஒவ்வொரு கதையையும் எபிசோட்களாக வெளியிட்டோம். மொத்தம் 55 எபிசோட்கள் சேர்ந்தது. தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல், இந்தக் கதைகளை 2021ல் வெளியிட்டது. இப்போது இதை எல்லாம் நாங்கள் சேர்த்து வீடியோ ஈ-புக்காக வெளியிட்டுள்ளோம்” என்று கூறும் ஆனந்தா, கலைமாமணி, பத்மஸ்ரீ, நாட்டிய இளவரசி, சங்கீத நாடக அகாடமி விருது, கலா ரத்னா உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.
from விகடன்
Comments