மாமன்னன் திரைப்படத்தின் `ராசா கண்ணு' என்று வடிவேலுவின் உணர்ச்சிமிக்க குரலில் வெளியான முதல் பாடல் நெகிழ்ச்சியை உண்டாக்கியதைத் தொடர்ந்து, இப்படத்தின் 2வது பாடல் ‘ஜிகு ஜிகு ரயில் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது .
ரசிகர்களை ஆச்சர்யபடுத்தும் விதமாக அதன் லிரிக்கல் வீடியோவில் ரஹ்மான் பாடியது மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் இணைந்து க்யூட் ஸ்டெப்ஸில் நடனமும் ஆடியுள்ளார்.
வழக்கம்போல `An A.R. Rahman musical' என்று ஆரம்பிக்காத லிரிகள் வீடியோ `An A.R.Rahman Reggae' என்று ஆரம்பித்தது. அது என்ன ரெக்கே? அது ஒரு இசை வகை என்றால்! அந்த இசைக்கும் பாப் மார்லேவுக்கும், ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்? வாருங்கள் காணலாம் !
மாஸ்டர் திரைப்படத்தில் `Got the man with the plan right here' என அனிருத்தின் துள்ளலான இசையில் வெளியான ஆங்கிலப் பாடல் பெரும்பாலான ரசிகர்களின் ரிங்டோனாக அலங்கரித்தது.
வேகமான பீட்கள் கிடையாது, மொழியும் நமது மொழி கிடையாது. ஆனால் ரசிகர்களை கவர்ந்திழுத்து மனதுக்குள் ஆட்டம் போட வைத்தன அந்த ஆஃப்-பீட் ராகங்கள்.
இப்படி வசீகரமான அந்த துள்ளல் இசையின் பெயர்தான் ரெக்கே(reggae). ரெக்கேவின் வேர்களை நாம் தேடிப்போனால், நம்மை கண்டம் விட்டு கண்டம் கூட்டி செல்கிறது அந்த கரீபிய மண்ணின் இசைத்தாளங்கள்.
ஒவ்வொரு இசை பாணியும் அது தோன்றிய இடத்தின் கலாச்சார குறியீட்டோடு பிணைக்கப்பட்டுள்ளது. இசை ஒரு சமூக நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது. உதாரணமாக ‘மாடு செத்தா மனுஷன் தின்னான் தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா’ என்று தமிழ்நாட்டில் தொடங்கிய ஒரு பாடல் உலகையே “நாக்க முக்கா” என்று ஆட வைக்கிறது.
விலங்கின் தோலினை இசை கருவிகளாக மாற்றிய மனிதனின் ஆதி உணர்வின் வரலாற்று எச்சங்கள்தான் அதற்குக் காரணம் என்றே சொல்லலாம். இன்று கடல் கடந்து தமிழ் மண்ணிற்கு வருகை தந்திருக்கும் ரெக்கே இசை பாணியையும் அப்படியே நாம் பார்க்கலாம்.
ரெக்கேவின் வரலாறு ஜமைக்கா நகரின் கிங்ஸ்ட்டன் நகரத்தில் 1960-ல் தொடங்கியது. இசை அதை உருவாக்குபவர்கள் மற்றும் கேட்பவர்கள் வாழ்வுடன் தவிர்க்க முடியாமல் வாழ்கிறது என்றே சொல்லலாம்.
ஆப்பிரிக்க நாடு அன்றைய வெள்ளை-காலனிய ஆதிக்கத்தில் இருந்து மெதுவாக வெளியேறிக் கொண்டிருந்த காலகட்டம்.
உலக வரலாற்றில் அதிகமாக அகதிகளாக்கப்பட்ட கறுப்பின மக்கள் தங்களுக்கென ஒரு நாட்டினை உருவாக்கப் போராடிக் கொண்டிருந்தனர். அப்படி தேசிய அடையாளமின்மை, வறுமை போன்ற கடந்தகால சமூக-அரசியல் உண்மைகளுக்கு எதிர்வினையாற்ற, மிருகத்தனமான ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட தங்கள் கலாச்சாரத்தை மீட்டெடுக்க ஆப்பிரிக்க வாரிசுகள் தங்கள் கையில் எடுத்த ஆயுதமே ரெக்கே (Reggae) எனும் இசைக்கருவி.
ஆப்பிரிக்காவில் தொடங்கிய அந்த சமூகத் தாக்கம் பல கண்டங்களைத் தாண்டி பட்டாசாக உலகெங்கும் வெடிக்க ஆரம்பித்தது. ஐரோப்பா, அமெரிக்கா என்று அசமத்துவம் எங்கெங்கு நிலவுகிறதோ அங்கெல்லாம் விடுதலை ஒலியால் மக்களை ஒன்றிணைத்தது ரெக்கே.
இந்த ஒற்றுமை இசையை பற்றிப் பேசும்போது தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் இருக்கிறது. அது இளைஞர்களின் டீ சர்ட்டிலும் பாப் ஐ-கானாகவும, உலகெங்கிலும் எளிய மக்கள் வாழும் சுவர்களில் வண்ணங்களால் நம்பிக்கையை நிரப்பி வைத்திருக்கும் பாப் மார்லேயின் பெயர்.
"ஒரு தத்துவம் ஓர் இனத்தை உயர்வானதாகவோ ஓர் இனத்தைத் தாழ்வாகவோ எவ்வாறு எண்ண முடியும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என நிறவெறிக்கு எதிராக பேசிய பாப் மார்லே. அதை ரெக்கே (Reggae) இசையின் மூலமா ஆப்பிரிக்க கண்டம் முழுக்க PAN AFRICANISM இயக்கமாக மாற்றினார்.
அவரது "ஒன் லவ்" என்கிற ரெக்கே பாடல் ஜமைக்காவின் சுற்றுலா கீதமாக இன்றும் இருக்கிறது. "நோ வுமன், நோ க்ரை," “Buffalo Soldier ”, "ரிடெம்ப்ஷன் சாங்" போன்ற கிளாசிக்ஸ் பாப் மார்லேவை உலக அடையாளமாக மாற்றியது.
இப்படி ரெக்கே இசையின் அமைதி, அன்பு மற்றும் சமூக நீதி பற்றிய உரையாடலை உலகெங்கிலும் பரப்பினார் மார்லே. ஒற்றுமையை வலியுத்தியத்தால் சுடப்பட்ட மார்லே, அதில் இருந்து உடனே மீண்டு வந்து 'ஜமைக்கா ஸ்மைல்' இசைக் கச்சேரியில் "இந்த உலகத்தை நாசமாக்க நினைப்பவர்கள் யாரும் ஒரு நாளும் ஓயமாட்டேன் என்கிறார்கள். நான் ஏன் ஓய்வெடுக்க வேண்டும்?" என்று மேடையில் கர்ஜித்தார். அன்று வலியை மறந்து பாடல் பாடி கொண்டாடிய அவரது கொண்டாட்டமே . இன்று அடக்குமுறைகள் பெருகி நிற்கும் சேரிகளில் 'கானா'க்களாக ஒலித்து கொண்டிருக்கிறது.
ரெக்கே இசை ஆப்ரோ-கரீபியன்ஸ் மற்றும் அனைத்து கறுப்பின மக்களின் உலகப் பார்வையையும் ஒட்டுமொத்தமாக மாற்ற தொடங்கியது. ஒரு நாட்டில் எதிரும் புதிருமாக இருக்க கூடிய இரண்டு தலைவர்களை ஒரே மேடையில் கட்டித் தழுவச் செய்தது.
“சிலரை சில சமயங்களில் ஏமாற்றலாம் ஆனால் எல்லா மக்களையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.” என்ற பாப் மார்லேவின் “கெட்-அப், ஸ்டாண்ட் அப்” பாடல் வரிகள் உலகளாவிய இசை நிலப்பரப்பில் ஒரு அழியாத எழுச்சி முத்திரையை பதித்தது.
இனம் மொழி ஆகிய எல்லைகளைத் தாண்டி மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைத் தொட்டது. உலகில் வெறுப்பு, அன்பு இந்த தத்துவங்கள் தான் மனிதர்களை இயக்கி கொண்டுள்ளது.
இரண்டுமே மக்களிடம் மிக வேகமாகப் பரவிச் செல்வது. அப்படி ரெக்கே தனது கையில் எடுத்து கொண்டது அன்பை! பல நாடுகளில் புலம்பெயர்ந்த (கடத்தப்பட்ட) கறுப்பின மக்கள் அந்த அன்பை சேர்த்தே எடுத்துச் சென்றனர். பிரிட்டன் நாட்டில் ஸ்கின் ஹெட் (SKINHEAD) என்றொரு இசைஅமைப்பு கறுப்பின மக்களையும் உழைக்கும் வெள்ளையின மக்களையும் அதிகாரத்திற்கு எதிராக இசையால் இணைத்தது.
அதே போல 1970-ல் அமெரிக்க நாட்டில் நிலவிய நிறவெறி, வேலைவாய்ப்பின்மை, வர்க்க வேறுபாடுகளை ரெக்கேயின் தாளங்கள் கேள்வி கேட்டன. அங்கு ஏற்கெனவே பரவியிருந்த பாப் மற்றும் பங்க் கலாச்சாரத்தோடு இணைந்த ரெக்கே, முதல் ராப் தோன்ற காரணமாக அமைந்தது. இவ்வாறு ரெக்கே இசையின் செல்வாக்கு ஜமைக்கா வேர்களுக்கு அப்பால் உலகம் முழுவதும் நீண்டு பரவியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் ஹிப் பாப் கலாச்சாரத்தின் தாயாகிய ரெக்கே ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பது, சமூக அநீதிகள் மீது வெளிச்சம் காட்டுவது என இசையின் சக்தியையும் நமக்கு நினைவூட்டுகிறது. இப்படி நீண்ட நெடிய தவிர்க்க முடியாத வரலாற்றினை கொண்ட ரெக்கே இசை
இன்று நம்மை “எல்லாம் மாறும்! எல்லாம் மாறும்! உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்!” என்று இசை புயலின் இசையால் ஆட வைக்கத் தொடங்கியுள்ளது. இப்படி எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை நேர்மறையான மாற்றத்தைத் தூண்டும் இந்த ரெக்கே எனும் இசைகீதம் தலைமுறைகளிலும் காலத்தால் அழியாத ஒற்றுமை கீதம் ஆகும்.
from விகடன்
Comments