IIFA 2023: விருதுபெற்ற கமல்ஹாசன்; எழுந்து நின்று வாழ்த்தி மகிழ்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

IIFA திரைப்பட விருது வழங்கும் விழாவிற்காக ஒட்டுமொத்த பாலிவுட்டும் கடந்த சில நாட்களாக அபுதாபியில் முகாமிட்டு இருந்தது. நேற்று இரவு திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு `விக்ரம் வேதா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. விருதை நடிகர் சையிப் அலிகான் வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட ஹ்ரித்திக் ரோஷன் விக்ரம் வேதாவாகவே தான் பல ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தெரிவித்தார். நடிகை அலியா பட்டிற்கு `கங்குபாய்' படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

ஹ்ரித்திக் ரோஷன்

அலியா பட் வராததால், அவருக்கு பதிலாக இயக்குநர் ஜெயந்தி லால் அவ்விருதை பெற்றுக்கொண்டார். `கங்குபாய்' படம் மேலும் நான்கு விருதுகளைப் பெற்றது. இப்படத்தில் நடித்த நடிகர் சாந்தனு மகேஷ்வரிக்கு சிறந்த அறிமுக நடிகர் விருது வழங்கப்பட்டது. விழாவில் பிரம்மாஸ்த்ரா அதிகப்படியான விருதுகளை வாங்கிக் குவித்தது. `நம்பி எபெக்ட்' படத்தை இயக்கி நடித்த நடிகர் ஆர்.மாதவனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த படத்திற்கான விருது த்ரிஷ்யம் 2 விற்குக் கிடைத்தது. சிறந்த துணை நடிகர் விருது அனில் கபூருக்கும், சிறந்த துணை நடிகை விருது மெளனி ராயிக்கும் கிடைத்தது. இந்திய சினிமாவில் செய்த சாதனைகளுக்காக நடிகர் கமல்ஹாசனுக்கும், சினிமா பேஷன் துறையில் செய்த சாதனைக்காக மனீஷ் மல்கோத்ராவிற்கும் விருது வழங்கப்பட்டது. கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவ்விருதை வழங்கினார்.

கமல்ஹாசன் இவ்விருதை பெறும்போது நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் எழுந்து நின்று கைதட்டி ஆராவாரம் செய்தனர். சிறந்த பின்னணி பாடகியாக பிரம்மாஸ்த்ராவில் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கும், சிறந்த பின்னணி பாடகராக அர்ஜித் சிங்கிற்கும் விருது வழங்கப்பட்டது. பிரம்மாஸ்த்ரா படத்திற்கு இசையமைத்த பிரித்தமிற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதை மற்றும் வசனத்திற்காக கங்குபாய் படத்திற்கு தனித்தனி பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.



from விகடன்

Comments