ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர் `மாரி'. இந்தத் தொடரில் `தாரா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை சோனா.
இவருக்கும் அந்தத் தொடரில் இவரது மருமகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷப்னத்திற்கும் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்கள் மனக் கசப்பை ஏற்படுத்த `ஒண்ணு சீரியலில் அவ இருக்கணும்; இல்ல நான் இருக்கணும்' எனக் கோபப்பட்டு அந்தத் தொடரிலிருந்து வெளியேறிவிட்டார் சோனா. அவரை சமாதானப்படுத்தி தொடர்ந்து நடிக்க வைக்க சேனல் தரப்பும், தயாரிப்பு தரப்பும் முயற்சி செய்திருக்கிறது. சோனா உறுதியாக இருக்க இப்போது அவருக்கு பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் வேறொருவர் நடிக்க இருக்கிறார்.
சோனாவிற்கு பதிலாக அந்தத் தொடரில் `தென்றல்' தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்த நடிகை சாதனா நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவில் சிறந்த வில்லிக்கான விருது சோனாவிற்கும், சிறந்த சப்போர்டிங் ஆக்டருக்கான விருது ஷப்னத்திற்கும் கிடைத்திருந்தது. அதுவும் ஒருத்தருக்குக் கொடுத்து இன்னொருத்தருக்குக் கொடுக்கலைன்னா எதுக்கு வம்புன்னு ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டாங்கங்கிற பேச்சும் சீரியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இப்ப ஒருவேளை அதுதான் உண்மையோன்னு சமூகவலைதள பக்கங்களில் கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.
எது எப்படியோ மீண்டும் சின்னத்திரையில் வலம் வர இருக்கும் சாதனாவிற்கு வாழ்த்துகள்!
from விகடன்
Comments