பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சுதாகர். அதன்பின் ‘கல்லுக்குள் ஈரம்’, 'சுவரில்லாத சித்திரங்கள்', ‘நிறம் மாறாத பூக்கள்', 'மாந்தோப்பு கிளியே', 'எங்க ஊரு ராசாத்தி', ‘அதிசய பிறவி’ போன்ற பல படங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.
தமிழில் பல ஹிட் படங்களைக் கொடுத்த அவர், பின் தெலுங்கு சினிமாவில் கால்பதித்து ‘பவித்ரா பிரேமா’, ‘அக்னி பூலு’, 'ஊரிகிச்சினா மாதா’, ‘போகி மண்டலு’, ‘கொண்டே கொடல்லு’ போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தார். அதன்பிறகு அவருக்கு ஏற்ற நகைச்சுவை வேடங்களைத் தேர்ந்தெடுத்து நகைச்சுவை நடிகராகவும் நடித்து வந்தார்.
இந்நிலையில் 64 வயதாகும் சுதாகரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவந்தன. இதனால் பலரும் சுதாகரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கின்றனர்.
இந்தத் தவறான தகவல் டோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுதாகரே முன்வந்து தனது உடல்நிலை குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “என்னைப் பற்றிப் பரவும் தகவல்கள் அனைத்துமே தவறானவை. அந்த வதந்திகளை நம்பாதீர்கள். எந்த உண்மையும் தெரியாமல் தகவல்களைப் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம். நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
from விகடன்
Comments