`மழைக்குப் பயப்படாத வாழ்க்கை வேணும்!' - வைரலாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் கென்லியின் கதை
இன்று சினிமாவில், மேடைக் கச்சேரிகளில், தொலைக்காட்சிகளில் பெரிய பாடகர்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
பல தலைமுறைகள் கடந்து தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 9 விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் சிங்கர் சீசன் 9 வருகிற ஜூன் மாதத்தில் முடிவடைய இருக்கிறது. மேலும், சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனும் அதே ஜூன் மாதத்தில் இருந்து ஆரம்பமாக இருக்கிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியருக்கான ப்ரோமா சமூகவலைதள பக்கங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த ஜூனியர் சீசனில் போட்டியாளராகக் களம் இறங்க இருக்கும் ராமேஸ்வரத்தில் வசிக்கும் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த கென்லிசிஜாவின் வீடியோவை `ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்' என்கிற கேப்ஷனுடன் விஜய் டிவி தரப்பிலிருந்து பகிர்ந்திருக்கிறார்கள். அதில், `மழைனாலே என் ஃப்ரெண்ட்சுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் கென்லிசிஜா. எனக்கு மழைனாலே பயம். எங்க வீடு முழுக்க மழைநீர் ஒழுகும். அப்பா எப்ப வருவாருன்னு அம்மா கடலையே பார்த்துட்டு இருப்பாங்க.
அப்ப அம்மாவுக்கு ஆறுதலா இருக்கிறது என் பாட்டு மட்டும்தான்.. என் ஆசை, கனவு எல்லாமே என்னன்னா மழைக்குப் பயப்படாத ஒரு வாழ்க்கை எனக்கு வேணும்! அதுக்கு நான் எடுத்து வைக்கிற முதல் படி இந்த மேடை!" என கென்லி கூறியிருப்பார். தனது குடும்ப சூழலை அந்த ஒரு ப்ரொமோவில் கடத்தியிருப்பார். அடுத்தடுத்த போட்டியாளர்களின் கதைகளைக் கேட்க பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதே போல இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் யார் வெற்றி வாகை சூட்டப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் இருக்கின்றது.
from விகடன்
Comments