சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மகிந்த்ரா, தொழில் சார்ந்த விஷயங்கள் மட்டும் அல்லாமல் சுவாரஸ்யமான தகவல்கள், நகைச்சுவைகள் என பல விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருவது வழக்கம்.
அந்தவகையில், தற்போது சிந்து சமவெளி நாகரிகத்தின் பழங்கால நகரங்களான ஹரப்பா தொடர்பான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, பழங்கால நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி படம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஆனந்த் மகிந்த்ரா ட்விட்டர் மூலம் பரிந்துரைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “ இந்த புகைப்படங்கள் நம் வரலாற்றை கண் முன் கொண்டுவருவது மட்டுமின்றி நல்ல ஒரு கற்பனையையும் தூண்டுகிறது. இந்த பழங்கால நாகரிக வரலாற்றை அடிப்படையாக கொண்டு படம் ஒன்றை எடுங்கள். அவை நமக்கு வரலாறு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியை ஆனந்த் மகிந்த்ரா டேக் செய்திருக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.எஸ்.ராஜமௌலியும் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். “ ஆமாம் சார்... தோலாவிராவில், மகதீரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது பழமை வாய்ந்த ஒரு மரத்தை பார்த்தேன். அவை சிதைந்துபோய் இருந்தது. அதை பார்க்கும்போது எனக்கு சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரத்தின் மூலம் விவரிக்கும்படியான ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று தோன்றியது.
அதன் பின் சில வருடங்கள் கழித்து பாகிஸ்தான் சென்றிருந்தேன். அப்போது மொஹஞ்சதாரோவுக்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் செல்ல முடியவில்லை" என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதனை அடுத்து பழங்கால நாகரிக வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு படம் எடுப்பாரா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
from விகடன்
Comments