Viduthalai: "`காட்டுமல்லி' டியூன் கேட்டு அழுதுட்டேன்!"- இளையராஜாவின் ரெக்கார்டிங் செஷன் பற்றி அனன்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து மார்ச் 31-ல் வெளியாகவிருக்கும் படம் விடுதலை. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, "இதுவரை சுமார் 1,500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால், விடுதலை படத்தில் இதுவரை கேட்காத இசையைக் கேட்பீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்றாற்போல விடுதலை ஆல்பம் நம் அனைவரையும் சொக்கவைத்திருக்கிறது.

குறிப்பாக, ’வழி நெடுக காட்டுமல்லி’ எனும் பாடல் எல்லோரையும் தாலாட்டித் தூங்க வைக்கும் வண்ணம் இருக்கிறது. தினமும் ரிப்பீட் மோடில் கேட்டு ரசிகர்கள் அனைவரும் வைப் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும், 'காட்டுமல்லி' பாடலுக்கு ராஜா வரிகள் எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு.

விடுதலை ஆல்பத்தில், இளையராஜா குரலுக்கு இணையாகப் பாடியிருக்கும் அந்த இனிமையான குரல் பாடகி அனன்யா உடையது!

'காட்டுமல்லி' பாடல்
ஆம், சென்ற ஆண்டு பேன் இந்தியா ஹிட் அடித்து இன்று வரை பல பேரின் போன் ரிங்டோன் ஆக ரீங்காரமிட்டுவரும் "மெஹபூபா" என்ற 'KGF - 2' படப் பாடல் பாடிய அனன்யா பட்தான் அது! `விடுதலை' படம் குறித்தும் இளையராஜா குறித்தும் அவரிடம் பேசினேன்.

படிக்காதவன் ரஜினி போல் "Yes, yes... Thank you" என ஆங்கிலத்தில் தடுமாறிப் பேசத் தொடங்கிய என்னை இடைமறித்து அழகாகத் தமிழில் பேசத் தொடங்கினார் அனன்யா.

"பொதுவாகவே பாடகர்களுக்கு, ‘நாம் பாடிய பாட்டு கதாபாத்திரத்திற்கு செட் ஆகுமா? படத்தில் இடம்பெறுமா?’ போன்ற சந்தேகம் இருக்கும். 'காட்டுமல்லி' ரெக்கார்டிங் முடித்து இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகின்றன. அதனால், அதேபோல் சந்தேகம் எனக்கும் வந்தது. ஆனால், சமீபத்தில் ராஜா சார் தெலுங்கு மொழியிலும் என்னைப் பாட அழைத்தபோது எனக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டு குஷியாகிவிட்டேன்" என 'விடுதலை' ரெக்கார்டிங் செஷன் அனுபவங்களைப் பற்றி ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் அனன்யா.

அனன்யா பட்

கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பாடிவந்த உங்களை முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியது யார்? எப்படித் தமிழ் கத்துக்கிட்டீங்க?

"நான் மைசூரில் கல்லூரி பயிலும் நாள்களிலிருந்தே தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. ஒரு சில தமிழ் நண்பர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். ஆனால், அப்போது தமிழ்ப் படங்களில் பாடுவேன் எனத் துளியும் எதிர்பார்க்கவில்லை.

எனக்கு டி.இமானின் இசை ரொம்பப் பிடிக்கும். அவர் படத்தில் பாட விருப்பப்பட்டு நான் பாடிய கன்னடப் பாடல்களை கர்நாடகாவில் இருந்து அவருக்கு அனுப்பி வைத்தேன். உடனே 'கருப்பன்' திரைப்படத்தில் ’உசுரே உசுரே’ என்கிற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். நானே ஆசைப்பட்டு என்னைத் தமிழில் அறிமுகப்படுத்திக்கொண்டேன் எனலாம். முதலில் ழ, ள போன்ற சொற்களை உச்சரிப்பதில் சிரமப்பட்டேன். இப்போது கொஞ்சம் தேறிவருகிறேன்."

இளையராஜா உங்களை எப்படித் தேர்வு செய்தார்?

"2020-ம் ஆண்டு நடைபெற்ற ஈஷா மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் நான் பாடிய ’Sojugada Sooju Mallige’ எனும் பிரபலமான பாடலைப் பார்த்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்டார். அப்புறம் உடனே நடந்ததுதான் காட்டுமல்லி ரெக்கார்டிங். ’Dream come true’ மொமன்ட்தான்.

முதலில் 'காட்டுமல்லி' பாடல்தான் ரெக்கார்டு பண்ணினோம். ராஜா சாருடைய டியூன் கேட்டுக் கண்கலங்கி சந்தோசத்தில் அழுதுட்டேன். அவ்வளவு அருமையாக இருந்தது. கூடவே எப்படி ராஜா சார் கூட பாடப்போறோம்னு பதற்றமாகிட்டேன். ஆனால் அவர் நிதானமாக இருந்தார்.

"அழாத... நீ நல்லா பாடுற... டைம் எடுத்துக்கோ. நீ தயாரான பிறகு பண்ணிக்கலாம்" என்று என்னை ஆசுவாசப்படுத்தினார். மேலும், கன்னட மொழியிலும் என்னிடம் உரையாடி நிறைய விஷயங்களைப் பொறுமையாகக் கற்றுக் கொடுத்தார். பொதுவாக ராஜா சாரிடம் ஒரு பாடல் பாடக் கிடைப்பதே பெரிய பாக்கியம். ஆனால், மொத்த ஆல்பத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பாடல்களைப் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த விதத்தில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி."

அனன்யா பட், இளையராஜா

இளையராஜா பாடல்களில் உங்க ஃபேவரைட் எது?

”ராஜா சார் இசையில் குறிப்பிட்டு ஒரு பாடல் சொல்வது இயலாத ஒன்று. அவர் இசையமைத்து எந்தப் பாடலும் எனக்குப் பிடிக்காமல் போனதில்லை. எல்லாப் பாடல்களும் பிடிக்கும். நான் சின்ன வயதில் முதலில் கேட்ட ஆல்பம் ’பல்லவி அனுபல்லவி.’ கன்னடத்தில் கேட்டேன். கேட்ட மறுகணம் ராஜாவின் ரசிகை ஆகிவிட்டேன்.

சாங் ரெக்கார்டிங் முடிந்த பிறகு ’நல்லா பாடியிருக்க... மறுபடியும் நான் உன்னைக் கூப்பிடுவேன்’னு ராஜா சார் சொன்னார். இதுக்குமேல ஒரு ரசிகையா எனக்கு வேற என்ன வேணும்? செம ஹேப்பி!”
அனன்யா பட்

நிறைய ஹிட் பாடல்கள் பாடியிருக்கீங்க... 'KGF 2' படத்தில் நீங்கள் பாடிய 'மெஹபூபா' பாடல் மிகப்பெரிய கவனம் பெற்றது. அதைப் பற்றிச் சொல்லுங்க...

”'கே.ஜி.எஃப்' ஆல்பம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இரண்டு பாகத்திலும் சேர்த்து 6 பாடல்கள் பாடியிருக்கிறேன். 'மெஹபூபா' பாடல் ரெக்கார்டிங் நடக்கும்போதே படக்குழுவிடம் ’இந்தப் பாடல் வேற லெவல்ல ஹிட் ஆகும் பாருங்க’ என்று சொன்னேன். ஆனா இவ்வளவு பெருசா கவனம் பெறும்னு நினைக்கல. அரபிக் ஸ்டைலில் இசையமைத்திருப்பார்கள். இன்ஸ்டா, ட்விட்டர்ல செமயா டிரெண்ட் ஆகி எனக்கு எல்லா ஏரியாவிலும் பாராட்டு மழைதான்.”

தமிழில் டி.இமான், ஜீ.வி.பிரகாஷ், இளையராஜாகூட வொர்க் பண்ணியிருக்கீங்க... மூணுபேர்கிட்டவும் என்னென்ன விஷயம் கத்துக்கிட்டீங்க?

”இமான் சார்கிட்ட பணிவு, அமைதி.

ஜீ.வி சார் டிரெண்டுக்கு ஏற்றமாதிரி அப்டேட்டில் இருப்பார்.

ராஜா சார் பற்றிச் சொல்லணும்னா லிஸ்ட் பெருசா போகும். சுருக்கமாகச் சொல்லணும்னா ஆன்மிகம், நேரம் தவறாமை போன்றவற்றைக் கத்துக்கிட்டேன்.

அனன்யா பட்

அடுத்து என்ன பிளான்?

”ஏ.ஆர்.ரஹ்மான் கூட கட்டாயம் வொர்க் பண்ணியே ஆகணும். அப்புறம், சந்தோஷ் நாராயணன், C.சத்யா, அனிருத் ஆகியோருடனும் பணியாற்ற ஆசை. அதெல்லாம் கூடிய விரைவில் நடக்கும்னு நம்புறேன். அடிக்கடி சென்னை விசிட் அடிக்க ஆவலாக இருக்கிறேன்.”

மார்ச் 31 உங்களுக்கு ஸ்பெஷலான நாளாக இருக்கும்ல?

”என்னோட பாட்டுக்காக மட்டுமல்ல, பொதுவாகவே 'விடுதலை' படத்தைப் பெரிய திரையில் காண ஆவலாக இருக்கேன். இயக்குநர் வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி எல்லாரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். மார்ச் 31-க்காக வெறித்தனமா வெயிட்டிங்!” என்று துள்ளலாகப் பேசி முடித்தார் அனன்யா பட்.



from விகடன்

Comments