பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2021-ம் ஆண்டில் மகள் வாமிகா கோலி பிறந்தார். பொழுதுபோக்குத் துறைகளில் மிகவும் பிஸியான, அதே சமயம் மிகவும் பிரபலமான ஜோடியாக இவர்கள் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை இவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடி சமீபத்தில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் 2023-ல் கலந்து கொண்டனர்.
அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பின்போது இருவரிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. ’இருவரில் யார் அதிகம் சர்ப்ரைஸ் கொடுப்பது?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலி, “சமீபத்தில் அனுஷ்கா தன் வேலை விஷயமாக பாங்காக் சென்றிருந்தார். நான் வீட்டில் வாமிகாவுடன் இருந்தேன். அவர் மும்பைக்குத் திரும்பும்போது அவரை ஆச்சர்யப்படுத்துவதற்காக ஒரு திட்டம் தீட்டினேன்.
அனுஷ்கா என்னிடம், ``தயவு செய்து குழந்தையுடன் இரு, விமான நிலையம் வரத் தேவையில்லை’’ எனக் கூறினார். நான் மிக சாதாரணமாக, `எப்போது விமான நிலையம் வருவாய்?’ என்று மெசேஜ் செய்தேன். அவரும் அதற்கு பதில் அளித்தார். அனுஷ்கா விமான நிலையம் வருவதற்கு முன்பே நான் அங்கு சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருந்தேன். ஆனால் அவர் என்னைப் பார்த்து விட்டு எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அமைதியாக காரில் ஏறி அமர்ந்தார்.
இப்போது என்ன நடந்தது என்பது போல நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அனுஷ்கா என்னிடம், ``எனக்கு மெசேஜ் அனுப்பிய நொடியே நிச்சயம் நீ ஏர்போர்ட்டுக்கு வருவாய் என எனக்குத் தெரியும்’’ என்று கூறினார். நான் எப்படித்தான் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது என்றே தெரியவில்லை. நான் ஏர்போர்ட் வருவது நிச்சயமாக அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என உறுதியாக நம்பினேன். எத்தனை முறை நான் சர்ப்ரைஸ் ப்ளான் செய்தாலும் அதை எப்படியாவது அனுஷ்கா கண்டுபிடித்துவிடுவார்” என்று சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார் விராட்.
from விகடன்
Comments