"`நான் ஈ' படத்தின் இரண்டாம் பாகம் வருமா? ராஜமௌலியுடன் மீண்டும் கூட்டணி அமையுமா?"- நானி பதில்

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் நானி, சமந்தா மற்றும் கிச்சா சுதீப் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் `நான் ஈ'.

தற்போது 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' என சிஜியில் பிரமாண்டம் காட்டிவரும் இயக்குநர் ராஜமெளலி பத்து வருடத்திற்கு முன்பே சாதாரண ஈயை வைத்து தத்ரூபமான சிஜி மற்றும் திரைக்கதையில் அசத்தியிருப்பார். இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் எனப் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நான் ஈ

இதன் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சு வார்த்தைகள் அடிபட்டன. ஆனால் ராஜமெளலி 'பாகுபலி 2', 'ஆர்.ஆர்.ஆர்' என அடுத்தடுத்த படங்களில் கமிட்டானதால் 'நான் ஈ-2' விற்கான பேச்சுவார்த்தைகள் காணாமல் போய்விட்டன.

இந்நிலையில் நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள `தசரா' திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நானி, இயக்குநர் ராஜமெளலி குறித்தும் 'நான் ஈ' படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் பேசியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளில் திரைத்துறையில் பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. இப்போது நாங்கள் ஒரே சினிமா துறையாக மாறியுள்ளோம். இது மிகப்பெரிய மாற்றமாகும். இப்போது எல்லோரும் எல்லோருடையப் படத்தையும் பார்க்கலாம், மொழி என்பது ஒரு தடையல்ல. ஒரு நல்ல படம் இந்தியா முழுவதும் பாராட்டப்படுகிறது. இது சினிமாவின் பொற்காலம்.

'தசரா' படத்தில் நானி

அந்த வகையில் 'நான் ஈ' படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்ற படம். அப்படம் முடியும் போதே 'நான் திரும்பி வருவேன்' என்ற வசனத்துடன் முடிந்திருக்கும். எனவே இரண்டாம் பாகத்திற்கான தொடக்கம் அதிலேயே இருக்கிறது. இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி நானும் ராஜமெளலியும் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். இப்படம் எப்போது எடுத்தாலும் இந்தியா முழுவதும் அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.



from விகடன்

Comments