``ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் ஒரு பாடல் பாட வேண்டும்" இன்ஸ்டா வைரல் `ஜூனியர் ரஹ்மான்' நிகில்!

ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'தில் சே ரே' பாடலை அவரது குரலிலேயே பாடியிருக்கிறார் கேரள மாநிலம் பாலக்காடு சாலுசேரியைச் சேர்ந்த நிகில் பிரபா. பிளவர்ஸ் என்ற மலையாள டி.வி சேனலில் காமெடி உற்சவம் என்ற நிகழ்ச்சியில் நிகில் பிரபா பாடிய அந்தப் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதனால் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார் நிகில் பிரபா. மலையாள சினிமா இசை அமைப்பாளராக இருக்கும் நிகில் பிரபா-விடம் பேசினோம், "நான் 13 சினிமாக்களுக்கு இசை அமைத்துள்ளேன். எனக்கு 19 வயது இருக்கும்போது மலையாள சினிமாவில் இசை அமைக்கத் தொடங்கினேன். கலாபவன் மணி கதாநாயகனாக நடித்த 'அன்னார கண்ணனும் தன்னாலாயதும்' என்ற சினிமாவில் முதலில் இசை அமைத்தேன். இப்போது ஸ்யாமன் உள்ளிட்ட மூன்று சினிமாக்களில் இசை அமைத்துக்கொண்டிருக்கிறேன்.

ஜேசுதாஸுடன் நிகில் பிரபா

நான் ஒன்றரை ஆண்டுக்கு முன்பே ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் கவர் சாங்ஸ் பாடியுள்ளேன். எனது குரல் ஏ.ஆர்.ரஹ்மான் சாரைப்போன்று உள்ளதால் அவை ஹிட் ஆகியுள்ளன. சென்னை, ஈரோடு போன்ற இடங்களில் 'ஜூனியர் ரகுமான்' என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் போன்று பாடுவதால் தமிழ்நாட்டில் இருந்தும் தொலைக்காட்சி ஷோ-வுக்கு ஆஃபர் வருகிறது. நான் ரஹ்மான் சாரைப்போன்று பாடி ஏற்கெனவே பிரபலம் ஆகிவிட்டேன். இப்போதுதான் ஏ.ஆர் ரஹ்மான் சாரின் கவனத்துக்குப் போயிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனது பாடலை ட்வீட்செய்து லவ் எமோஜி போட்டுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் சாரை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். அவரது ஷோ-விலோ அல்லது அவருடனோ பாட வேண்டும் என்பதும் எனது கனவாக உள்ளது. நான் இசை அமைப்பாளராகவே மக்களுக்குத் தெரிய ஆசைப்படுகிறேன். நான் அமைத்த இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் மெழுகுநீர்த் துளிபோலே என்ற பாடலைப் பாடியுள்ளார். அதுபோல சித்ரா மேடமும் எனது இசையில் பாடியுள்ளார்கள்.

ஏ.ஆர்.ரகுமானின் குரலில் பாடும் நிகில் பிரபா

நான் ஸ்கூலில் படிக்கும் காலங்களில் நிகழ்ச்சிகளில் பாடியபோது ஏ.ஆர்.ரஹ்மான் சாரைப்போன்று பாடுவதாக நண்பர்களும், ஆசிரியர்களும் சொன்னார்கள். நான் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைத்தான் அதிகமாகப் பாடுவேன். முதலில் நான் ஏ.ஆர்.ரஹ்மான் போன்று மிமிக்ரி செய்து பாடுவதாக அனைவரும் நினைத்தார்கள். அதன் பிறகு எனது ஒரிஜினல் குரல் அப்படித்தான் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

இசை அமைப்பாளர் நிகில் பிரபா

ஜூனியர் ரகுமான் என எனது பாடல்கள் இணையதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்தே பிளவர்ஸ் டி.வி-யில் நிகழ்ச்சிக்காக என்னை அழைத்தார்கள். உலகில் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் குரல் போன்று பாடுபவர்கள் வேறு யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.

ரஹ்மான் சாரின் குரல் எனக்குக் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் சாரை நேரில் சந்தித்து, அவர் முன்னிலையில் ஒரு பாடல் பாட வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசையாக உள்ளது" என்றார்.


from விகடன்

Comments