`என் திருமண பந்தத்தில் 100% உண்மையாக இருந்தேன், ஆனால்..!’ - நடிகை சமந்தா

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்வதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவரும் அறிவித்தனர். இதனையடுத்து சமந்தா ஆன்மிகம், சினிமாவில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

சமந்தா

தற்போது இவரின் `சகுந்தலம்’ படம் வெளியாகவுள்ளது. அதற்கான புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் நடிகை சமந்தா. அப்படி `மிஸ் மாலினி’ என்ற சினிமா தொடர்பான சேனலுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா, தன் விவாகரத்து தொடர்பாக முதன்முறையாக கேமரா முன்பு பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், ``நான் விவாகரத்து குறித்து அறிவித்த சில நாள்களிலேயே ’புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ பாடலில் நடனமாட வாய்ப்பு வந்தது. அதை அறிந்ததும், `இந்த நேரத்தில் இப்படியான பாடலில் பங்கேற்க வேண்டாம், வீட்டிலேயே இரு’ என என் குடும்பத்தினர் அட்வைஸ் செய்தனர். எப்போதும் நான் என்ன செய்தாலும் என்னை ஊக்குவிக்கும் என் நண்பர்களும், `இந்தப் பாடலை ஏற்க வேண்டாம், அமைதியாக இரு’ எனக் கூறினர்.

சமந்தா

ஆனால் நான் அனைவரின் அட்வைஸையும் கேட்டு விட்டு பாடலில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில், நான் என் திருமண பந்தத்தில் 100% நேர்மையாகதான் இருந்தேன். ஆனால் அது எனக்கு சரியாக அமையவில்லை. அதற்காக நான் ஏதோ தவறு செய்ததை போல், எதற்காக ஓடி ஒளிய வேண்டும்? நான் செய்யாத குற்றத்திற்கு எதற்கு என்னை நானே வருத்திக்கொள்ள வேண்டும்? ஏற்கெனவே எத்தனையோ வேதனைகளை அனுபவித்துவிட்டேன்“ எனக் கூறியுள்ளார்.



from விகடன்

Comments