Karthi: `புழுதிக் களத்தில் நின்று ஆடி நிரூபித்த பருத்திவீரன்!' - ஒரு ஸ்பெஷல் ரீவைண்டு

சினிமாவில் மாஸ் + க்ளாஸ் ஹீரோவாக 16-வது ஆண்டைக் கொண்டாடுகிறார் கார்த்தி. அன்பின் ஈரம் அறியாமல் புழுதிக் காட்டில் புரண்டு திரியும் ஒரு கிராமத்து சண்டியரின் கதையான 'பருத்தி வீரன்' வெளியான தினமும் இன்றுதான்.

இன்றைக்கும் கல்ட் படங்களில் பருத்திவீரன் படத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. கார்த்தியின் முதல் படத்திலேயே தனிப்பட்ட கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கவும் இதுதான் காரணம். இன்னொரு சிறப்பு, அவரது இத்தனை வருட திரைப்பயணத்தில் அவரது தோற்றங்களை வைத்தே, 'இது இந்தப் படம்' என்று சொல்ல முடியும். கார்த்தி அறிமுகமான புதிதில், அவரைப் பற்றி தெறித்த நம்பிக்கை விதைகள் ஒரு ரீவைண்டு!

கார்த்தி

* 'பருத்திவீரன்' க்ளைமாக்ஸில் கார்த்தியின் நடிப்பு சிவகுமாரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. அந்தக் க்ளைமாக்ஸ் சீனில் கார்த்தி, 'என் பாவம்லாம் முத்தழகு மேல விடிஞ்சிருச்சே’னு அழுது புலம்பிட்டே அடி வாங்குவான் பாருங்க... அது நாட்கணக்கில் எடுத்த காட்சி. அதுல அவன் உடம்பு முழுக்கவே தடம்தடமா வீங்கிருச்சு!'' எனக் கண்கள் கலங்க வாழ்த்தியிருக்கிறார். '' புருஷ லட்சணக் கேரக்டர்கள்ல நடிச்ச எனக்கே தமிழ்நாட்டுல அப்ப பொண்ணு தர யோசிச்சாங்க. இவன் இப்படி ஒரு வேஷம் பண்றானே, இவனுக்கு யார் பொண்ணு தருவா?'னு பயம் தான் வந்துச்சு'' என்றும் நகைச்சுவையாக சிவகுமார் சொன்னதுண்டு.

கார்த்தி - சூர்யா

* கார்த்தியின் அறிமுகம் சூர்யாவையும் வியக்க வைத்திருக்கிறது. ''தம்பி கார்த்தி, எப்பவுமே ஸ்மார்ட். மணி சார்கிட்ட உதவி இயக்குநராக வேலை பார்த்தவர். 'நடிகன்’ என்பதைத் தாண்டி படத்துக்காக நிறைய விஷயங்களுக்கு மெனக்கெடுவார். 'சினிமாதான் என் வாழ்க்கை. நீங்க சொல்றதுக்காக படிக்கப்போறேன்’னு சொல்லிட்டு அமெரிக்கா போனார். திரும்ப வந்ததும், சொன்ன மாதிரியே, மணிரத்னம் சார்கிட்டே அசிஸ்டென்ட் டைரக்டரா வேலைக்குச் சேர்ந்தார். சினிமாவுக்கு வரணும்னு முடிவு எடுத்து, தன்னைத் தகுதிப்படுத்திக்கிட்டு வந்தார். நான் என்னை நிரூபிக்க, 'நந்தா’ வரைக்கும் காத்திருக்க நேர்ந்தது. கார்த்தி முதல் படத்திலேயே 'பருத்திவீரனா’ எல்லோரையும் திரும்பிப் பார்க்கவெச்சார்'' என கார்த்தியை பார்த்து வியந்திருக்கிறார்.

பருத்திவீரன்

* முதல் படத்திலேயே தன் குரு மணிரத்னத்திடமிருந்தும் பாராட்டுகளை வாங்கிக் குவித்தார் கார்த்தி. ''அவர்கிட்ட உதவி இயக்குநரா இருந்தப்ப கிளாப் அடிக்கும்போது திட்டு வாங்கியிருக்கேன். நடிக்கும்போதும் திட்டு வாங்க வேணாமா? சார் ஃப்ரீயா இருக்கிறப்ப போய்ப் பார்த்து பொதுவா பேசிட்டு வருவேன். 'முதல் படத்தில் பண்ண மாதிரி நீ இன்னொரு படம் பண்ணணும்டா’னு அடிக்கடி சொல்வார். ' 'மெட்ராஸ்’ நல்ல ரிவ்யூஸ் வந்துட்டு இருக்கு. நான் படம் பாத்துட்டுக் கூப்பிடுறேன்’னு மெசேஜ் பண்ணார். அந்த வாய்ப்புதான் 'காற்று வெளியிடை' '' என்கிறார் கார்த்தி.

வந்தியத் தேவன்- கார்த்தி

* 'பருத்தி வீரன்' விகடன் சினிமா விமர்சனத்தில் கார்த்தியைப் பற்றிக் குறிப்பிட்டது இது. ''ஆச்சர்ய அறிமுகம், கார்த்தி. முதல் மேட்ச்சிலேயே சதமடிப்பது மாதிரி கலக்கல் விளாசல். கண்களில் வழியும் சிரிப்பும், ஆடிக் கொண்டே அலைகிற திமிரும், வேலி ஓணானுக்கு வெட்கம் வந்தது போலத் திரிகிற இயல்பிலுமாக இது பிரமாத ஓப்பனிங். சூர்யாவுக்கு நிஜமான போட்டி, இனி வீட்டுக்குள்தான்!''



from விகடன்

Comments