ரஜினியின் `ஜெயிலர்' (Jailer) படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. `அண்ணாத்த' படத்துக்குப் பின் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து பாண்டிச்சேரி, கடலூர் எனப் பரந்து விரிந்து நேபாளம் வரை சென்றது. `ஜெயிலர்' ரிலீஸ் நிலவரம், இசை வெளியீடு உள்ளிட்ட அப்டேட்டுகள் குறித்து விசாரித்தேன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில 'ஜெயிலர்' படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினியுடன், மோகன்லால், சிவராஜ்குமார், சஞ்சய் தத், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உட்படப் பலர் நடித்து வருகின்றனர். சென்னை, கடலூர் பகுதிகளிலும் பின்னர், ஆதித்யா ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்தும் படப்பிடிப்பு நடந்தது.
படத்தின் கதை இதுதான் என கோடம்பாக்கத்தில் ஒரு கதை ஓடிக்கொண்டிருக்கிறது. 'ஒரு ஜெயிலர் வாழ்க்கையில் ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை' என்கிறார்கள். இதில் கம்பீரமான ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடித்துவருகிறார் ரஜினி. இந்தாண்டு பொங்கலுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ஆரம்பித்த படப்பிடிப்பு நேபாளம், ராஜஸ்தான் எனச் சென்றது. அதன்பிறகு சமீபத்தில் மங்களூர் சென்று வந்தனர்.
நெல்சனின் பக்கா ஆக்ஷன் காமெடி ஜானரில் படம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுவரை பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்திருப்பதாகவும் தகவல். படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு முக்கியத்துவம் உள்ளதென்றும், தமன்னாவின் கதாபாத்திரம் குறைவுதான் என்றும் சொல்கிறார்கள். படத்தின் இரண்டு முக்கியமான சண்டைக்காட்சிகளை ராஜஸ்தான் மற்றும் மங்களூரில் எடுத்து முடித்துள்ளனர்.
மோகன்லால், சிவராஜ்குமார் வரும் போர்ஷன்கள் ஏற்கெனவே படமாக்கப்பட்டு விட்டன. தமன்னா, சஞ்சய் தத் போர்ஷன்களின் படப்பிடிப்பு மீதமிருக்கின்றன. சமீபத்தில் மங்களூருக்குப் பறந்த படப்பிடிப்பு குழுவினர், அங்கே ரஜினி - சிவராஜ்குமார் காம்பினேஷனில் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதன்பின், படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.
முன்னதாக ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், அதன் பின்னர் பான் இந்தியா படமாக மாறியதால் படப்பிடிப்பு மே மாதம்வரை நீளலாம் என்பதால் ரிலீஸ் தேதி இன்னமும் முடிவாகமல் இருக்கிறது. அது உறுதியான பின்னரே இசை வெளியீடு இருக்கும் என்கிறார்கள்.
from விகடன்
Comments