பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கி தனது மனைவி ஆலியாவுடன் விவாகரத்து பிரச்னை, குழந்தைகளை தன் வசம் பெறுவது, சொத்துப் பிரச்னை உட்படப் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் வீட்டு வேலைக்கார பெண் ஒருவர் மூலம் நவாசுதீனுக்கு எதிராக ஆலியா சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஆலியா தனது இரண்டு குழந்தைகளுடன் துபாயிலிருந்தார். அங்குதான் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தனர். ஆனால் திடீரென அவர் குழந்தைகளுடன் இந்தியா திரும்பியிருக்கிறார். அவர் மும்பை அந்தேரியில் இருக்கும் நவாசுதீன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரின் தாயாரோடு சண்டையிட்டிருக்கிறார். அதோடு இது தொடர்பாக போலீஸிலும் புகார் செய்திருக்கிறார்.
இதையடுத்து திடீர் திருப்பமாக நவாசுதீன் சித்திக்கி மீது அவரது மனைவி ஆலியா, பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில், "நவாசுதீன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தின் மூலம் குழந்தைகளைத் திருடப்பார்க்கிறார். குழந்தைகளுடன் நவாசுதீன் ஒருபோதும் இருந்ததில்லை. அவருக்குக் குழந்தைகளைப் பற்றி எதுவும் தெரியாது. என்ன நடந்தாலும் இதயமில்லாதவரின் கைக்குக் குழந்தைகள் செல்வதை அனுமதிக்கமாட்டேன். வர்சோவா போலீஸ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் புகார் கொடுத்திருக்கிறேன். அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த நவாசுதீன் சித்திக்கி, "இது பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால் எனது குழந்தைகள் துபாயில் படித்து வந்தனர். அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதே எனது கருத்து" என்று தெரிவித்திருந்தார்.
நவாசுதீன் சமீபத்தில் தனது குழந்தைகள் எங்கு இருக்கின்றனர் என்றே தெரியவில்லை என்று கூறி, குழந்தைகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், "இப்பிரச்னைக்குத் தீர்வு காண முதலில் ஒருவரை ஒருவர் பேசிப்பாருங்கள். தந்தை குழந்தைகளைப் பார்க்க அனுமதிப்பது தொடர்பாக முடிவு செய்யப் பேச்சுவார்த்தை நடத்துங்கள்" என்று தெரிவித்தனர்.
நவாசுதீன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், "குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு வரவில்லை என்று துபாயில் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து நவாசுதீனுக்கு தகவல் வந்தது. குழந்தைகள் துபாயிலிருந்த போதும் அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. கடந்த நவம்பர் மாதமே குழந்தைகளைத் துபாயில் விட்டுவிட்டு ஆலியா மட்டும் இந்தியாவிற்கு வந்துவிட்டார்" என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆலியா சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குழந்தைகள் ஆலியாவிடம்தான் இருப்பதாகவும், அவர்கள் தங்களின் படிப்பை இந்தியாவில் தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகளின் படிப்பு குறித்து அடுத்த வாரம் கோர்ட்டில் தகவல் கொடுக்கும்படி ஆலியாவிற்கு கோர்ட் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 3ம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
ஆலியா அளித்துள்ள புதிய பேட்டியில், தனது இரண்டு வயது மகனைத் தனது பேரனாக நவாசுதீன் சித்திக்கின் தாயார் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், முறைகேடாகப் பிறந்ததாகக் கூறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நவாசுதீன் தாயாரின் இக்குற்றச்சாட்டு என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. எனது இரண்டு வயது மகனுக்கு அப்பா என்றால் என்னவென்று கூட இன்னும் தெரியாது. அவர் துபாய் வந்தபோது கூட எனது மகனுக்கு நேரம் ஒதுக்கியது கிடையாது" என்று தெரிவித்தார். ஆலியா, இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டியில், நவாசுதீன் தனது மகனை வெறுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆலியா சித்திக்கின் இயற்பெயர் அஞ்சனா கிஷோர் பாண்டே. இவரும் நவாசுதீனும் சிறு வயது முதலே காதலித்து வந்தனர். 2010-ம் ஆண்டு பிரிந்த இவர்கள், அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இவர்கள் மீண்டும் இணைந்தனர். அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டே ஆலியா தன் கணவரை விவாகரத்து செய்ய முயன்றுவருவதாகத் தெரிவித்திருந்தார். அப்போதிருந்தே இரண்டாவது மகனின் பிறப்பு குறித்த வழக்கு, மும்பை பங்களாவுக்கான உரிமை குறித்த வழக்கு, குழந்தைகள் யாரிடம் வளரவேண்டும் என்பது தொடர்பான வழக்கு உள்ளிட்ட சட்டப்போராட்டங்களை இருவரும் நடத்திவருகின்றனர்.
from விகடன்
Comments