பாலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. சமீபமாக அவரது நடிப்பில் வெளியான 'பச்சன் பாண்டே', 'சாம்ராட் பிருத்விராஜ்', 'பெல்பாட்டம்', 'ரக்ஷா பந்தன்', 'கட்புட்லி' உள்ளிட்ட பல படங்கள் தோல்வியடைந்தன.
இதனிடையே தற்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள 'செல்ஃபி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியான முதல் நாளில் மோசமான வசூலை ஈட்டியிருக்கிறது. இதனால் அக்ஷய் குமார் கதைகளில் கவனம் செலுத்தி படங்களைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தனது படங்கள் வெற்றி பெறாததற்கு நான்தான் காரணம் என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ இதுபோன்று நடப்பது எனக்கு முதல் முறையல்ல. எனது கரியரில் ஒரே நேரத்தில் 16 தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். படங்கள் வெற்றி பெறாததற்கு நான்தான் காரணம். பார்வையாளர்களைக் குறைசொல்ல விரும்பவில்லை. அவர்கள் வழக்கமானதைத் தாண்டி வேறொன்றை எதிர்பார்க்கிறார்கள்.
அதற்கு ஏற்றமாதிரி நானும் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. படங்கள் தொடர்ந்து தோல்வியடைகிறது என்றால் அது எனது தவறு மற்றும் எனக்கான எச்சரிக்கை. அவற்றை சரி செய்துகொள்ள முயல்கிறேன். படம் ஓடவில்லை என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் அல்ல. ஒருவேளை நான் படங்களைச் சரியாகத் தேர்ந்தெடுக்காததுகூட காரணமாக இருக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
from விகடன்
Comments