``தமிழ் இலக்கியச் சொற்களை கலை வடிவத்தில் வெளிபடுத்துவதே என் எண்ணம்!" - வர்ஷா

`Chaos' வடிவத்தில் இருப்பது தான் கலை என பிகாசோ கூறுவார். பல நேரங்களில் `Chaos' வடிவத்தில் இருகக்கூடிய பல கலைப் படைப்புகள் மக்களின் ரசனையை அதிகளவில் கவர்கிறது.

சமீபத்தில் ஒரு கோல வடிவமைப்பு சமூக வலைதளங்களில் பலரால் பாராட்டப்பட்டது. கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் சென்னை சங்கமத்தின் பொங்கல் திருவிழாவின் வாழ்த்து அட்டையிலும் அது இடம் பெற்றிருந்தது. நேர்த்தியான கலைப் படைப்பு மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும்போது அதன் மதிப்பு உயர்ந்துவிடுகிறது. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு என்கிற ஒற்றைச் சொல் அரசியல் களத்தில் நெருப்பென தகித்தது. `தமிழ்நாடு' என்கிற ஒற்றை வார்த்தையை வைத்து அதை கோல வடிவிலான படைப்பாக்கியிருந்தார் வரைகலை வடிவமைப்பாளர் வர்ஷா. மதிப்புமிக்க தமிழக குடியரசு தின விழா பண்பாட்டு ஊர்தியின் முகப்பில் கம்பீரமாக அமைந்திருந்தது இவரின் வரைகலை ஓவியம். இப்படி உயிர்மெய் என்கிற அவரின் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியாகிற படைப்புகள் பலவும் கவனம் பெறுகின்றன. வெகுவாகக் கொண்டாடப்பட்ட `கடைசி விவசாயி' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ராமையா கதாபத்திரத்தை நுட்பமாக அணுகி, அந்த பாத்திரப் படைப்பை முழுமையாக இவர் வடிவமைத்திருந்தது, தமிழ்ச் சொற்களை, கலைகளை முன்வைத்து இவர் வரைகிற ஓவியங்கள் எனப் பலவும் குறிபிடத்தக்க படைப்புகள். தொடர்ச்சியாக இந்த கலை வடிவத்தில் செயல்பட்டு வரும் வர்ஷாவை ஒரு மாலைப் பொழுதில் தொடர்பு கொண்டு பேசினோம்.

தமிழ்நாடு ஓவியம்

" கேலிகிராஃபி போன்ற வேலைகளை பள்ளிக் காலங்களிலேயே செய்திருக்கிறேன். கல்லூரி காலங்களில் ஒரு பொழுதுபோக்காகத்தான் இந்த வேலையைத் தொடங்கினேன். அப்படி நான் வடிவமைத்ததை எல்லாம் எனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு தான் சென்னை சங்கமத்திற்கு 'இது போன்ற டிசைன்கள் வேண்டும்' எனக் கூறி என்னை வடிவமைக்க அழைத்தனர். சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்திக்கும் போது தான் அது பொங்கல் விழாவுக்கான வாழ்த்து அட்டையில் இடம் பெறப் போகிறது என்பது தெரியவந்தது.

கனிமொழி அவர்களைச் சந்திக்கப் போகையில் அவரைப் பற்றி என் அபிமானத்தை ஓவியமாக வடிவமைத்துக் கொடுத்தேன். அவருக்கு அந்த ஓவியம் பிடித்திருந்தது. நெடு நேரம் கவனித்துப் பார்த்தவர் என்னை வெகுவாகப் பாராட்டினார். பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் கருத்துக்களை எனது வடிவமைப்பின் மூலமாகக் கொண்டு சேர்க்கு ஆசையிருக்கிறது. அதை தொடர்ச்சியாக செய்தும் வருகிறேன். தமிழ் இலக்கியச் சொற்களை என் கலை வடிவத்தில் வெளிபடுத்த வேண்டும் என தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்." என்றார்

தன் ஓவியங்களை வார்த்தைகளால் தனித்துவமாக வடிவமைப்பவர் வர்ஷா. அந்த வடிவமைப்பு குறித்துப் பேசிய அவர், "நான் ஒரு வார்த்தையை வடிவமாகப் பார்ப்பேன். ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பர். ஆனால் வார்த்தைகளிலையே ஒரு ஓவியத்தை கொண்டு வரும் சாத்தியங்கள் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. பெரும்பாலும் நான் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் வடிவமைப்பேன். ஆங்கில வார்த்தைகளுக்கு இருக்கும் அளவிற்கு தமிழ் வார்த்தைகளுக்கு ஸ்டைலான ஃபாண்ட்கள் கிடைப்பதில்லை. நமது மொழி வடிவத்தை மெருகேற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காக தான் சில வார்த்தைகளை வடிவமைத்திருப்பேன். சிலருக்கு தமிழ் பேசத் தெரிந்தும் மெதுவாக வாசிப்பார்கள். இது போன்று ஸ்டைலாக வடிவமைக்கும் போது , அந்த வார்த்தைகளின் மேல் ஆர்வம் வந்து அதனை எடுத்து வாசித்துப் பார்க்கிறார்கள்.

கனிமொழி - வர்ஷா

பாபநாசம் சிவனின் வரிகளைக் கொண்டு ஒரு வடிவமைப்பு செய்திருப்பேன்.அந்த வார்த்தைகளை பொம்மைகளை வைத்து வடிவமைத்திருப்பேன்.அந்த வார்த்தைகளைப் படிக்கும் போதே அதன் பொருள் குறித்து புரியும் வகையில் அந்த வடிவமைப்பு இருக்கும்." எனப் பேசி முடித்தவரிடம் அவரது வடிவமைப்பு துறை குறித்தும் அதில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து கேட்டேன்.அதற்கு அவர்,"சமூக வலைதளங்கள் இப்போது பொழுதுபோக்காகவும், கண்டண்ட்காகவும்  இருந்து வருகிறது. தொடர்ந்து வடிவமைப்புகளை பதிவிடும் போது தான் வரவேற்பு கிடைக்கும். வரவேற்பை நினைத்துக் கொண்டே வடிவமைத்தால் நாம் எதற்காக இதனை செய்கிறோம் என்பது காணாமல் போய்விடும். நான் செய்கிற வேலைகளுக்குத் தேவையான வரவேற்புகள் எனக்கு கிடைத்ததில்லை. இது போன்று பலருக்கும் பெரியளவில் வரவேற்போ, பாராட்டுகளோ கிடைப்பதில்லை.

எங்களின் வடிவமைப்பு வேலைகள் அனைத்தும் புகைப்பட வடிவத்தில் இருக்கிறது. அல்காரிதம் முதலில் ரீல்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும் எங்களுடய புகைப்படங்கள் சமூக வலைதளங்களின் ஃபீடில் கூட வருவது கிடையாது." என வடிவமைப்புத் துறையில் இருக்கும் சவால்கள் குறித்து பேசியவரிடம் தமிழ்நாடு கோலம் குறித்து கேட்டபோது."தமிழை வளைத்து எழுதினால் சிக்குக் கோலம் வடிவில் வரும். அதை வைத்து அந்தக் கோலத்தை வடிவமைத்தேன். நான் செய்த வடிவமைப்பைப் பார்த்த பிறகு இந்தக் கோலத்தில் `தமிழ்நாடு' என்று வைத்துவிடலாம் எனக் கூறினர்கள். அப்படி உருவானதுதான் அந்த வடிவமைப்பு.

வர்ஷாவின் வடிவமைப்புகள்

`கடைசி விவசாயி' திரைப்படத்தில் உடன் இல்லாதவர்களை, இருப்பதாகவே நினைத்து அவர்களை அதிகளவில் பார்த்துக் கொள்ளும் ராமையாவின் காதல் என்னைக் கவர்ந்தது. அந்த ராமையா கதாபாத்திரம் பார்த்ததை மக்களுக்குக் காட்ட வேண்டும் என நினைத்து செய்த வடிவமைப்பு தான் அது. அந்த வடிவமைப்பை முதலில் ட்விட்டரில் பதிவிட்டேன். அதனை பார்த்து பல மீம் பக்கங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு முன்பாகவே பதிவிட்டனர். இது நான் செய்தது என நான் கூறுவதைக் கூட கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த சமயத்தில் என்னை கடுமையாகப் பேசினார்கள். அந்த வடிவமைப்பிற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நான் செய்தேன் என்பதற்கான அடையாளம் தொலைந்துவிட்டது." எனக் கூறினார்.

"எப்போதும் நான் கைகளால் ஓவியங்களை வரைந்திடுவேன். பின் அதை ஸ்கேன் செய்வேன். இல்லஸ்ட்ரேட்டர் போன்ற மென் பொருட்களைப் பயன்படுத்தியதில்லை. கைகளால் வரையும்போது கிடைக்கும் பிரதி மென் பொருட்களைப் பயன்படுத்தும் போது கிடைப்பதில்லை என்பது என் எண்ணம்." என தீர்க்கமாகச் சொல்கிறார் வர்ஷா.



from விகடன்

Comments