விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று (23.02.2023) இரவு நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே பேசிய அவர், "நான் சினிமாவிற்கு வந்து 32 வருடம் ஆகிறது. ஆனால், எனக்கு வயது 30 தான். நான் அடுத்து என்ன படத்தில் நடிக்கப் போகிறானோ அதுதான் எனக்கு ஆர்வமுள்ள படம். நான் இதுவரை பண்ணிய படங்கள் எல்லாம் முடிந்துவிட்டவை. நாம் இதுவரை செய்த சாதனைகள் எல்லாம் பெரிய சாதனையே அல்ல. அடுத்து ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டோம் என்றால் அதுதான் ஆர்வமாக இருக்கும்.
என்னைப் பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது மிகப்பெரிய கௌரவம். ஏனெனில், நான் பள்ளி காலத்தையே தாண்டவில்லை. அதற்கு மேல் ஒரு கல்லூரியில் 10 நாள் படித்தேன். அதற்கு பின்னர் பாலிடெக்னிக் ஒன்றில் 10 மாதம் படித்தேன். என் வீட்டில் படிக்க வைப்பதற்கான வசதியில்லை. அதனால் நடிப்பு, நாடகம் என நான் எங்கோ போய்விட்டேன். 120 சர்வதேச விருதுகள் ஒரு படத்திற்காக வாங்கியிருக்கிறேன். எனக்கும் சினிமாவிற்கும் எவ்வித தொடர்புமே கிடையாது. என் அப்பாவோ, தாத்தாவோ சினிமாவில் இருந்தது கிடையாது. எனக்கு ஆசை, சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்பது. அந்த ஆசை சரியா? தவறா? என்று தெரியாத வயதில் வந்துவிட்டது. அதற்காக நிறைய முயற்சி எடுத்தேன்.
பார்ப்பதற்கு அஜித் மாதிரி இருந்தால் சினிமாவில் நிறைய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நாமோ லைட்டை போட்டால்தான் தெரிவோம். நடிப்பதற்கு முயற்சி எடுத்து கிடைக்கவில்லை என்றதும், தோற்றுப் போக எனக்கு விருப்பமில்லை. எனவே அதன் பின்னர் பாக்யராஜ் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, இயக்குநர் ஆகி நான் நினைத்ததை அடைந்துவிட்டேன். பார்த்திபனின் கனவு என்பது... மிக நீண்ட கனவு! நான் நினைத்த கனவினை அடைந்த பிறகு, அடுத்த கனவு, அடுத்த கனவு என்று போய்க்கொண்டிருக்கிறது.
கனவுகளுக்கு எல்லையே கிடையாது. கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். அதற்காக தொடர் முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும். பார்த்திபன் கனவு... கல்கியின் கனவை விட நீண்டது. என்னை பொறுத்தவரை, சரியான வளர்ச்சி அடைந்த பின் வருவது தான் தன்னடக்கம். பொன்னியின் செல்வன் படத்திற்கான விழாவில் ரஜினி சார் பேசியது தான் அந்த படத்தை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அவர் அங்கு பேசிய தன்னடக்கமான பேச்சு தான் மிக அழகானது. என்னுடைய முன்மாதிரி என்னுடைய அப்பா ராதாகிருஷ்ணன் தான். நான் நன்றாக பேசும் தமிழுக்கு காரணம் அவர்தான். இப்போது என்னுடைய ரோல்மாடல், நான் முகம் பார்க்கும் கண்ணாடிதான். "ஆண்டாள்" எனும் படம் என் எதிர்கால திரைப்பட திட்டத்தில் உள்ளது. அந்த படம் முழுக்க முழுக்க குடும்ப சித்திரம், அந்த காலத்து வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையிலானது. அந்த மாதிரி படம் எடுப்பதற்கு விழுப்புரம், புதுவைப் பகுதியில் நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் கூறுங்கள்" என்றார்.
from விகடன்
Comments