`நிழல்கள்' படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய ஹீரோ, சினிமா இயக்குநர், சின்னத்திரை நடிகர் எனப் பல முகங்களைக் காட்டி விட்டு மறைந்த ராஜசேகரின் (ராபர்ட்) மனைவி தாரா குடியிருந்து வரும் வீடு ஏலத்துக்கு வரவிருப்பதால், `அடுத்து எங்குச் செல்வது' எனத் தெரியாமல் கலங்கியபடி இருக்கிறார்.
'என்ன நடந்தது' எனக் கேட்டோம்.
"ஒளிப்பதிவாளராகத்தான் சினிமாவுக்குள் நுழைஞ்சார். 'ஒரு தலை ராகம்' படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான். பிறகு ராபர்ட்டுடன் சேர்ந்து படங்கள் இயக்கினார். 'பாலைவனச் சோலை', 'மனசுக்குள் மத்தாப்பூ'ன்னு சில படங்கள் இவர் இயக்கி ஹிட் ஆகின. பிறகு 'நிழல்கள்' படத்துல ஹீரோவா நடிச்சார்.
சினிமாவுல பிஸியா இருந்த காலத்துல சம்பாதிச்சதை குடும்பத்துக்காகச் செலவு செய்தார். அவருடைய சொந்தத் தங்கச்சியை நிறைய நகை போட்டு எம்.ஜி.ஆர். உறவினர் குடும்பத்துல கட்டிக் கொடுத்தார். நண்பர்களுக்காகவும் நல்லா செலவு செய்தார்.
முதல்ல நடிகை சரண்யாவைக் கல்யாணம் செய்து அந்தக் கல்யாணம் விவாகரத்துல முடிய இரண்டாவதா என்னைக் கட்டிக்கிட்டார்.
நல்லா சம்பாதிச்ச நாள்கள்ல சிக்கனம், சேமிப்புனு எதுவும் பண்ணலை. சினிமா ஓய்வு கொடுத்த சமயத்துலதான் திரும்பிப் பார்த்தா சொந்தமா வீடு கூட இல்லை. காசு, பணம்ன்னு கையில பெரிசா எதுவும் இல்லை.
அப்பத்தான் அவருக்கு ஒரு பயம் வந்தது. அது கூட அவர் குறித்த பயம் இல்லை. என்னை நினைச்சு வருத்தப்பட்டார்.
'நாளைக்குத் திடீர்னு எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, உன் நிலைமை என்னாகும்'னு புலம்பத் தொடங்கினார். காலம் கடந்த பின்னாடி புலம்பி என்ன ஆகப் போகுது?
அதனால 'விடுங்க, நடக்கறது நடக்கட்டும்'னு சொன்னேன்.
ஆனாலும் 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட சில சீரியல்கள்ல நடிச்சதுல கிடைச்சக் கொஞ்சம் காசை எடுத்துகிட்டு மீதிக்கு வங்கியில கடன் வாங்கி வடபழனியில ஒரு ஃபிளாட்டை வாங்கினார்.
ஆனா அந்த வீட்டுக்கு முறைப்படி பால் காய்ச்சி குடிவர்றதுக்கு முன்னாடியே அவர் இறந்துட்டார். அவருடைய உயிரற்ற உடலைத்தான் கொஞ்ச நேரம் அந்த வீட்டுல வச்சுட்டு எடுத்துட்டு அடக்கம் பண்ணினோம்.
அவர் இறந்த ரெண்டாவது மாசமே வங்கியில இருந்து வந்துட்டாங்க. 'மீதிக் கடனை எப்படிக் கட்டுவீங்க'னு அவங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியலை.
ஆனாலும் எனக்கு அங்கங்க இருந்து கிடைச்சதையெல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா ஆறு லட்சம் ரூபாய் வரை வங்கியில கட்டினேன்.
வீட்டின் மொத்த மதிப்பு 60 லட்சம். ஆரம்பத்துல 30 லட்சம் ரூபாய் கட்டினோம். பிறகு நான் கட்டினதையும் சேர்த்தா 35 லட்சத்துக்கு மேல கட்டியாச்சு. மீதிப் பணத்துக்கு நானும்தான் எங்க போவேன். எனக்கும் வயசு ஆகிடுச்சு. இனி என் சாப்பாட்டுக்கே என்ன பண்றதுனு தெரியாத ஒரு சூழல்தான்.
அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்த வாடகையை வாங்கி குறைஞ்ச வாடகையில ஒரு வீட்டைப் பிடிச்சு இருந்துட்டு வர்றேன்.
இப்படியான நிலைமையில இப்ப வீட்டை ஏலத்துக்கு விடறதை விட வேற வழி கிடையாதுன்னு வங்கியில சொல்லிட்டாங்க.
நடிகர்கள், இயக்குநர்கள், சின்னத்திரை நடிகர்கள் சங்கம்னு எல்லா சங்கத்துலயும் ராஜசேகர் உறுப்பினரா இருந்தார். அதனால ஆர்.கே.செல்வமணி சார் ஆபீஸ், டிவி நடிகர் சங்கம்னு பல இடங்களுக்கு உதவி கேட்டுப் போனேன். எங்கேயும் எதுவும் நடக்கலை. என்னுடைய நிலைமையை விளக்கி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தேன். ஆனாலும் இந்தத் தேதி வரை எதுவும் நல்லது நடக்கலை.
ரெண்டு நாளைக்கு முன்னாடி வங்கியில இருந்து பேசினாங்க. வங்கி அசோசியேஷன்ல இருக்கிற ஒருவரே அந்த வீட்டை ஏலத்துல எடுக்க முன் வந்திருக்கிறார். அதனால நீங்க முறைப்படி வீட்டை காலி செய்து தந்திடுங்க, அல்லது போலீஸைக் கொண்டு வந்து வெளியேத்த வேண்டி இருக்கும்னு சொன்னாங்க.
அவர் பயந்தது போலவே நடக்குது. இப்ப எனக்கு இந்த ஒரு வீடுதான் வாழ்வாதாரமா இருக்கு. இந்த வீட்டை இழந்துட்டா அடுத்து எங்க போறதுன்னே தெரியலை. ராஜசேகருடனான திருமணத்தை எங்க வீட்டுல யாருமே ஆதரிக்கலைங்கிறதால சொந்தக்காரங்க ஆதரவுன்னெல்லாம் எதுவும் எனக்கு இல்லை.
ஆதரவில்லாம இருக்கேன். உதவி கேட்டுப் போன சில இடங்கள்ல 'இவ்ளோ பெரிய தொகையை யாருங்க தருவாங்க'ன்னு கேட்டுட்டாங்க.
எனக்கு ஒரேயொரு கேள்விதான். அதை அவர் உயிருடன் இருந்தப்ப அவர்கிட்டயே கேட்டேன். வயசான காலத்துல எதுக்குக் கடன் வாங்குறீங்க. இருக்கிற பணத்துக்கு வீட்டை வாங்கலாமேனு சொன்னேன். அவர்தான் வங்கியில லோன் தர்றதாச் சொல்றாங்கன்னு வாங்கினார். வங்கியும் இவர் எப்படித் திரும்பக் கட்டுவார்னு யோசிக்காம அன்னைக்குக் கடனைக் கொடுத்துட்டு இப்ப வந்து வீட்டை எடுத்துக்கறோம்னு சொல்றாங்க.
வங்கியில கடனை வாங்கிட்டு திரும்பச் செலுத்தக் கூடாதுங்கிற எண்ணம் இல்லை. வருமானத்துக்கு வழியே இல்லைங்கிற போது என்ன செய்றதுன்னே தெரியலைங்க.
எந்த நேரத்துலயும் வீடு என்னை வெளியில தள்ளி ரோட்டுல கொண்டு வந்து நிறுத்திடலாம்கிற நிலையில கடைசி வேண்டுகோளா சினிமா தொடர்புடையவர்களுக்கும் முதலமைச்சருக்கும் கண்ணீருடன் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். 'இந்தப் பிரச்னையில இருந்து என்னை மீட்டு மிச்சமிருக்கிற நாள்களை நான் நிம்மதியா வாழ உதவி செய்யுங்க'ங்கிறதுதான் அந்தக் கோரிக்கை" என்கிறார் தாரா ராஜசேகர்.
from விகடன்
Comments