`இந்தியாதான் எனக்கு எல்லாம்!' - கனடா நாட்டுப் பாஸ்போர்ட்டை துறக்க முடிவு செய்த அக்‌ஷய் குமார்

பிரபல பாலிவுட் நடிகரான  அக்‌ஷய் குமார் சில வருடங்களுக்கு முன்பு கனடா நாட்டு குடியுரிமையைப் பெற்றிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏ.என்.ஐ ஊடகம் பிரதமர் மோடியை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.

அதில் பிரதமர் மோடியை அக்‌ஷய் குமார்தான் நேர்காணல் செய்திருந்தார். ஆனால் அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்‌ஷய் குமார் வாக்களிக்கவில்லை. இதற்குக் காரணம் அவர் கனடா நாட்டுக் குடியுரிமையை வைத்திருந்ததுதான் என்று கூறப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார்.

பிரதமர் மோடி, அக்‌ஷய் குமார்

அப்போது அது தொடர்பாக விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். அதில் “1990 களில் 15 க்கும் மேற்பட்ட  எனது படங்கள்  வெற்றியை பெறவில்லை. நடித்த படங்களும் தோல்வி அடைந்தன. அதனால் நான் வேறு எங்காவது சென்று வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது கனடாவில் இருந்த என் நண்பன் கனடாவுக்கு வரும்படி என்னை அழைத்தார்.

அதனால் கனடா நாட்டு குடியுரிமையைப் பெற்றேன். அதற்குப் பின் நான் நடித்த இரண்டு படங்கள் நன்றாக ஓடின. அதனால் இந்தியா வந்து மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். இது தெரியாமல் பலரும் என்னை விமர்சித்து வருகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

அக்‌ஷய் குமார்

இந்நிலையில் தற்போது தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், தனது கனடா நாட்டுப் பாஸ்போர்ட்டை துறக்க முடிவு செய்துள்ளதாக நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நான் கனடா நாட்டுப் பாஸ்போர்ட்டை துறக்க முடிவு செய்துள்ளேன். இந்தியாதான் எனக்கு எல்லாம். நான் இங்குதான் சம்பாதித்தேன். இங்கு உள்ளவர்கள்தான்  என்னை வளர்த்து விட்டார்கள். தற்போது அவர்களுக்கு எல்லாம் திருப்பி செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 



from விகடன்

Comments