Alia Bhatt: ரகசியமாக போட்டோ எடுக்க முயன்ற நபர்கள்; கோபமடைந்த ஆலியா பட்! என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் பலரும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற செயல்கள் நிச்சயம் பிரபலங்களின் பிரைவசிக்கு எதிரானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அந்த வகையில் ஆலியா பட் வீட்டிற்குள் இருந்தபோது அனுமதியில்லாமல் அவரை இரண்டு நபர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஆலியா பட் இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
ஆலியாபட்

அப்பதிவில், “நான் மதிய நேரத்தில் எனது வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. உடனே நான் நிமிர்ந்து பார்க்கும்போது எனது வீட்டின் பக்கத்துக் கட்டடத்தின் மாடியில் இரண்டு நபர்கள் கேமராவை வைத்துக்கொண்டு என்னைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதுபோன்ற செயல்கள் ஒருவரின் தனியுரிமையை ஆக்கிரமிக்கின்றன. எப்போதுமே உங்களால் கடக்க முடியாத லிமிட் என்ற ஒன்று உள்ளது. ஆனால் இன்று எல்லா லிமிட்டுகளும் எளிதாகக் கடக்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இந்நிலையில் ஆலியா பட்டிற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அர்ஜுன் கபூர் வெளியிட்ட பதிவில். “இது போன்ற செயல் முற்றிலும் வெட்கக்கேடானது. அவர் ஒரு பிரபலம் என்பதை மறந்து விடுங்கள். ஒரு பெண் தன் சொந்த வீட்டில் பாதுகாப்பாக உணரவில்லை என்றால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவரின் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பவர்கள் அது தவறான செயல் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஆலியா பட், அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள பதிவில், "இது போன்ற செயல்கள் நடப்பது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கும் இதுபோன்று நடந்திருக்கிறது. எங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று பலமுறை கேட்டுக்கொண்டபோதும் அப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கரண் ஜோஹர், ஜான்வி கபூர் போன்றவர்களும் ஆலியா பட்டிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.  



from விகடன்

Comments