Shah Rukh khan: நீண்ட நாள்களுக்குப் பிறகு வெற்றி; 2 நாளில் வசூலில் ரூ.120 கோடியை தாண்டியதா பதான்?

பாலிவுட்டில் தொடர்ச்சியாக படங்கள் தோல்வியைச் சந்தித்து வந்த நிலையில் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஷாருக் கானின் பதான் படம் திரைக்கு வந்திருக்கிறது.

வழக்கம் போல் இந்தப் படத்தை புறக்கணிக்க இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பிரதமர் நரேந்திர மோடியே இவ்விவகாரத்தில் தலையிட்டு படங்களுக்கு எதிராக தேவையில்லாமல் எதையும் தெரிவிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இந்து அமைப்புகள் அமைதியாகிவிட்டன. மிகவும் எதிர்ப்புக்கு இடையில் எதிர்பார்ப்புகளுடன் விடுமுறை இல்லாத தினமான புதன் கிழமை பதான் உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

ஷாருக் கான்

ரசிகர்கள் வடமாநிலங்களில் நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை காட்சிக்கே படத்திற்கு வந்தனர். முதல் நாளில் 8000 திரைகளில் 20 ஆயிரம் ஷோ காட்டப்பட்டது. இதில் ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.57 கோடி வசூலானதாகவும், உலக அளவில் ரூ.100 கோடி வரை வசூலித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டே நாட்களில் ரூ120 கோடியைத் தாண்டி இருக்கிறது என்கின்றனர். பாலிவுட்டில் இதற்கு முன்பு வேறு எந்த படமும் இந்த அளவுக்கு சாதனை படைத்ததில்லை.

ஷாருக் கான்

வரும் நாட்களில் மேலும் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் பதான் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளிலும் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. பதான் ஒரே நாளில் உலக அளவில் வசூலில் ரூ.100 கோடியை தாண்டி இருப்பது குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சதத்தை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. ஒரே நாளில் 100 கோடி தாண்டி இருக்கிறது. அன்பு எப்போதும் வெறுப்பை வெல்லும். இந்த நாளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் சல்மான் கான் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இது தவிர ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் நடிகர் ஆமீர் கானின் சகோதரி நிகத் ஹெக்டேயும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும் பதான் படத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என்ன ஒரு பயணம். இதுவரை காணாத காட்சிகள், வலுவான திரைக்கதை, அற்புதமான இசை, ஆச்சரியங்கள், திருப்பங்கள் அனைத்தும் சிறப்பு. சித்தார்த் இதை மீண்டும் உங்களால் செய்ய முடியும். ஆதி உங்கள் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. ஷாருக்கான், தீபிகா, ஜான் மற்றும் மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை கங்கனா ரணாவத்தும் ஆரம்பத்தில் பதான் படத்தை மறைமுகமாக சாடினார்.

பதான்

ஆனால் அதன் பிறகு படத்தை வெகுவாக பாராட்டினார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பதான் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இது போன்ற படங்கள் சிறப்பாக வசூல் செய்யவேண்டும். தற்போது பாலிவுட் படங்கள் வசூலில் பின் தங்கி இருக்கிறது. மீண்டும் நாம் பழைய நிலைக்கு வர முயற்சிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போன்று விக்கி கெளஷல், ஆலியா பட் உட்பட பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் படத்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர். ஷாருக் கான் தனது படம் வெளியான தினத்தன்று தனது நெருங்கிய நண்பர்களுக்கு சிறப்பு விருந்து கொடுத்தார்.

இந்த விருந்தில் ஷாருக்கான் மனைவி கவுரிகான் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். படம் தொடர்பாக வந்த நல்ல செய்திகளை கேட்டு கவுரிகான் ஆனந்தக்கண்ணீர் வடித்ததாக பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். தனது படம் திரைக்கு வந்தாலும், வராவிட்டாலும் நான் தான் பாலிவுட் பாட்ஷா என்பதை பதான் படத்தின் மூலம் ஷாருக்கான் நிரூபித்திருக்கிறார்.



from விகடன்

Comments