கொள்ளிடம்: இயந்திரம் பற்றாக்குறையால் நெல் அறுவடை மந்தம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் இந்த ஆண்டு சுமார் 18000 எக்டேர் நிலப்பரப்பில் சம்பா, தாளடி மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டது.

இந்த வருடம் பருவமழை ஓரிரு நாட்களில் அதிகம் பெய்ததாலும், கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து ஏழாவது முறையாக தண்ணீர் அதிகம் திறந்து விடப்பட்டதாலும், கொள்ளிடம் பகுதியில் உள்ள சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் பல நாட்களாக தண்ணீரில் மூழ்கி கிடந்தன.

இயந்திரம் பற்றாக்குறையால் நெல் அறுவடை மந்தம்

தொடர்ந்து தண்ணீர் அதிகரிப்பதும் பின்னர் வடிவதுமாக இருந்ததால் சம்பா நெற்பயிர் சுமார் 60% மழை நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்தது. மழைநீர் வடிந்த பிறகு மீதமுள்ள நெற்பயிரை விவசாயிகள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனால், மீண்டும் செலவு செய்து உரமிட்டும், பூச்சி மருந்துகளை தெளித்தும் பயிர்களை வளர்த்து வந்தனர். நெற்பயிர் வளர்ந்து விவசாயிகளின் நஷ்டங்களை ஓரளவு ஈடுசெய்யும் வகையில் அறுவடைக்கு தயாராகியது.

தற்போது அறுவடை துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள தொழிலாளர்களைக் கொண்டு அறுவடை பணியில் ஈடுபட்டால் அதிக கால தாமதம் ஆகும். இதனால் பண இழப்பும் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு இயந்திரங்களை வைத்து விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்

கொள்ளிடம் பகுதியில் ஒரே நேரத்தில் அறுவடை நடைபெற்று வருவதால், தேவையான அறுவடை இயந்திரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

விவசாயிகள் தனியாரிடமிருந்து அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு வாங்கி அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும், தனியாரிடமும் போதிய அளவு இயந்திரங்கள் கிடைக்கவில்லை. இதனால் தற்போது இருக்கும் இயந்திரங்களைக் கொண்டே படிப்படியாக அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ``தற்போது கொள்ளிடம் பகுதியில் ஒரே நேரத்தில் பரவலாக அறுவடைப்பணி நடைபெற்று வருவதால் இயந்திரங்கள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் பொறியியல்துறை, தேவையான அறுவடை இயந்திரங்களை உடனடியாக வாடகைக்கு அனுப்பி அறுவடையை துரிதப்படுத்த வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வேளாண் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.



from விகடன்

Comments