"எஸ்.ஜே.சூர்யா, ஒரு நல்ல இயக்குநரை இழந்துட்டோம்ன்னு சொன்னார்"- இயக்குநர் தாய் செல்வம் மனைவி மலர்விழி

சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த பல தொடர்களை இயக்கியவர் இயக்குநர் தாய் செல்வம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை', `பாவம் கணேசன்', `மெளனராகம்', `நாம் இருவர் நமக்கு இருவர்' போன்ற மக்கள் மத்தியில் பிரபலமான தொடர்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. `ஈரமான ரோஜாவே சீசன் 2' தொடரை இயக்கி வந்த இவர், உடல்நிலை சரியில்லாமல் சமீபத்தில் இயற்கை எய்தினார். அவருடைய மனைவி மலர்விழியை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
தாய் செல்வத்தின் மனைவி மலர்விழி

"இப்பதான் அடுத்து மூவ் ஆன் பண்றதுக்குப் பேசிட்டு இருக்கோம். திடீர்னு நடந்ததால பசங்களால ஏத்துக்கவே முடியல. அம்மா உடைஞ்சிடுவாங்கன்னு என் முன்னாடி காட்டிக்காம இருக்காங்க. ஐந்து நாள்கள்தான் ஹாஸ்பிட்டலில் இருந்தாங்க. ஒவ்வொரு முறையும் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டுத் திரும்பி வந்துடுவாங்க. இந்த முறை திரும்பி வரலைங்கிறதை எங்களால ஏத்துக்க முடியல. திடீர்னு நடந்ததால இன்னும் எங்க மனசு அதை ஏத்துக்கவே இல்ல.

மாதத்தின் 30 நாளில் ரெண்டு, மூணு நாள் லீவு இருக்கும். எல்லாரும் இருக்கும்போது வெளியில் போயிட்டு வருவோம். சாருக்குக் கோயிலுக்குப் போறது ரொம்பப் பிடிக்கும். நாங்க அடிக்கடி வெளியில் போனாலே கோயிலுக்குத்தான் போவோம். எங்களுக்கு ட்வின்ஸ் குழந்தைங்க. அவருக்குக் குழந்தைங்களுக்கு சாப்பாடு ஊட்டுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அவங்க பிறந்த சமயம் `காத்துக்கருப்பு' நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தார். அதனால நிறைய டைம் அவருக்குக் கிடைச்சது. பசங்களை வளர்த்ததில் பெரும்பங்கு அவருக்கும் உண்டு. எங்க பசங்கன்னு இல்லைங்க குழந்தைங்கன்னாலே அவருக்குப் பிடிக்கும். 

தாய் செல்வம்

அடுத்தவங்க பர்சனல் பற்றிப் பேசுறது அவருக்குச் சுத்தமா பிடிக்காது. ஊருக்குப் போனா பார்க்கிறவங்க எல்லாரும் ஆர்ட்டிஸ்ட் பற்றியும், அவங்களுடைய பர்சனல் பற்றியும் கேட்பாங்கன்னு ஊருக்கு வருவதையே அவாய்டு பண்ணிடுவார். 

அவருக்கு என்ன பிரச்னைன்னா, சில சமயங்கள்ல உடம்புல கிரியாட்டினைன் கூடிடும். அப்ப என்னாகும்னா காலையில் நம்ம கால் மாதிரி நார்மலா இருக்கும் நைட் ரொம்ப வீங்கிடும். ஷூட்டிங் ஸ்பார்ட்ல ஒண்ணுமே காட்டிக்க மாட்டார். ஷூட் முடிச்சிட்டு வீட்டுக்குப் போகும் போது, 'கால் ரொம்ப வலிக்குது மலர்'னு சொல்லுவார். அப்பவும் விளையாட்ட இவ்ளோ நேரம் தெரியலையான்னு கேட்டா, 'இவ்ளோ நேரம் நான் நானாக இல்லை... அதனால எனக்கு தோணவே இல்ல... இப்ப தான் என்னைப் பற்றி யோசிக்கிறேன்னு' சொல்லுவார். வேலையில் அவ்வளவு கவனமா இருப்பார்" என்றவரிடம் 'நியூட்டனின் மூன்றாம் விதி' படம் குறித்துக் கேட்டோம். 

தாய் செல்வம்

நியூட்டனின் மூன்றாம் விதி படத்துக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா சார் இப்ப வரைக்கும் கதாநாயகனா எந்தப் படமும் பெருசா நடிக்கலை! இப்பக்கூட என்கிட்ட சூர்யா சார் பேசினாங்க. நல்ல டைரக்டரை இழந்துட்டேன்னு வருத்தப்பட்டாங்க. அவருக்குப் படம்னு இல்லை எந்த விஷயம்னாலும் அதை ரசிச்சுத்தான் பண்ணுவார்" என்றார்.

முழு பேட்டியைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 



from விகடன்

Comments