"ஒண்ணுமே பண்ணாத ரித்விகா டைட்டில் வாங்கினாங்க அசிம் வாங்கினதுல என்ன தப்பு?"- பாஜகவில் இணையும் நித்யா

வீட்டுக்காரருடன் சண்டை, எதிர் வீட்டுக்காரருடன் தகராறு என அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி மீடியாவின் கவனம் ஈர்க்கும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வது குறித்துப் பேசியிருக்கிறார்.

'திடீர்னு தேசியக் கட்சிப் பக்கம் போயிடீங்களே, என்ன காரணம்' என அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

''மத்திய அரசு மூலமா மக்களுக்கு எவ்வளவோ திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனா, அது குறித்து நம் மக்கள்கிட்ட  விழிப்புணர்வு இல்லை. தேசியக் கட்சியில இருந்தா அந்தத் திட்டங்கள் எல்லாருக்கும் கிடைக்கறதுக்கு உதவலாம்னு தோணுச்சு.

தவிர, நான் மக்கள் நீதி மய்யத்துல சேர்ந்து செயல்படலாம்னு போனேன். ஆனா அந்தக் கட்சியில வெளியில பேசறது ஒண்ணாகவும் கட்சிக்குள் நடக்கறது வேறொண்ணாவும் இருக்கு. அதனால அங்க என்னால இருக்க முடியலை.

பிக் பாஸ் கமல்

எல்லாத்துக்கும் மேல தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் எனக்கு பிடிச்சிருக்கு. அதனால அவரது தலைமையின் கீழ் அந்தக் கட்சியில சேர்ந்து செயல்படலாமேன்னு நினைச்சுதான் அவரைப் போய் சந்திச்சேன். ஆர்வமாக வரவேற்றார். சில தினங்களில் முறைப்படி என்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டு தீவிரமா கட்சிப் பணிகள்ல ஈடுபடலாம்னு இருக்கேன்'' என்றவரிடம்,

``நீங்க ஒரு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர். இந்த சீசன் பார்த்தீங்களா, அசிம் டைட்டில் வென்றது குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தபடி இருக்கே" என்றோம்.

``முதன் முதலா தமிழுக்கு பிக் பாஸ் வந்த போது எனக்குமே அந்த நிகழ்ச்சி பிடிச்சிருந்தது. ஆனா அந்த நிகழ்ச்சிக்குள் நான் போய் வந்த பிறகுதான் அந்த ஷோ பத்தி முழுமையாத் தெரிஞ்சுகிட்டேன். நல்லா ஸ்கிரிப்ட் பண்ணி ஒர்க் பண்ணுவாங்க. அதனால மக்கள்தான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஏமாளியாகவே இருக்காங்கனு தோணுது.

ரித்விகா

அதனால நான் கலந்துகிட்ட சீசனுக்குப் பிறகு ஒளிபரப்பான எந்த சீசனையும் நான் பார்க்கவே இல்லை. ஆனாலும் அது தொடர்பா ஏதாவது பரபரப்பான நியூஸ் கேள்விப்பட்டா கவனிப்பேன். அசிம் டைட்டில் வென்றது குறித்த சில விமர்சனங்களை நானும் பார்த்தேன். அசிம் அந்த வீட்டுக்குள் முரட்டுத்தனமா நடந்துகிட்டதாச் சொல்றாங்க. இப்படிப்பட்டவருக்கு எப்படி டைட்டில் தரலாம்கிறதுதான உங்க கேள்வி.

நான் கலந்துகிட்ட சீசன்ல ரித்விகாவுக்கு டைட்டில் கொடுத்ததையே அன்ஃபேர்னுதான் நான் சொல்வேன். ஏன்னா அவங்க அந்த நிகழ்ச்சி முழுக்க அந்த வீட்டுக்குள் சும்மாவேதான் நடமாடிட்டிருந்தாங்க. அவங்களுக்கே டைட்டிலைத் தூக்கி கொடுத்தாங்க.

அசிம் தொடர்ந்து கன்டென்ட் கொடுத்திருப்பார். அதனால அவருக்கு டைட்டில் கிடைச்சிருக்கும். இதுல மத்தவங்க ஆதங்கப்படறதுல என்ன அர்த்தம் இருக்குனு தெரியலை'' என்றார் நித்யா.



from விகடன்

Comments