பரபரப்பு இல்லாத ஞாயிறு காலை. வித்யா நிதானமாக வேலைகளைத் தொடங்கினாள். தேங்காயைத் துருவும்போது லேசாக அந்தப் படபடப்பு எட்டிப்பார்த்தது. மூச்சை நன்றாக உள்ளிழுத்து மெதுவாக வெளியேவிட்டாள்.
``அம்...மா..."
அண்டசராசரம் கிடுகிடுக்க ஆடி வந்த காளி போல் தரை அதிர நடந்து வந்து சமையலறை வாசலில் நின்றாள் ஹரிணி. வேலுக்கும் சூலத்துக்கும் பதிலாக, கைக்கு ஒன்றாக இரு புத்தகங்கள். வித்யா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
``தாரிணி என் புத்தகங்களை எடுக்க வேண்டாம், எடுத்தா ஒழுங்கா ஹாண்டில் பண்ணணும்னு எத்தனை தரம் சொல்றது?" - ஹரிணி கோபமாகக் கத்தினாள்.
வித்யாவின் கையில் இருந்த தேங்காய் மூடி கீழே விழுந்தது. படபடப்பு சற்று அதிகமானது போலிருந்தது. இரு கைகளாலும் சமையல் மேடையைப் பிடித்துக்கொண்டாள்.
அம்மா நிற்கும் நிலையைப் பார்த்ததும், சார்ஜ் இறங்கிய அலைபேசி பேட்டரி சேவர் மோடுக்கு மாறுவது போல் ஹரிணி கோபம் குறைந்து பதற்றமானாள். புத்தகங்களை வைத்துவிட்டு ஓடி வந்து அம்மாவைப் பிடித்துக் கொண்டாள்.
``அம்மா, என்ன ஆச்சு? ஆர் யூ ஆல்ரைட்? அப்பாவை கூப்பிடட்டுமா ?" என்று அருகில் இருந்த ஸ்டூலை இழுத்து அதில் அம்மாவை உட்கார வைத்தாள்.
``லேசா படபடப்பா இருக்கு. இப்போவெல்லாம் சத்தம் கேட்டாலே கஷ்டமா இருக்கு ஹரிணி" என்றாள் வித்யா.
ஹரிணிக்கு சட்டென்று குற்றவுணர்வு சூழ்ந்துகொண்டது. ``அம்மா, ஐ ஆம் சாரி, சாரி" என்று மெள்ள அவளை எழுப்பி டைனிங் அறையிலிருந்த நாற்காலியில் உட்கார வைத்தாள். அதற்குள் ஒரு பத்து முறையாவது மன்னிப்புக் கேட்டிருப்பாள்.
வித்யாவிற்கு மனம் நெகிழ்ந்தது. இப்படி இருக்கிறாளே இவள்! கோபம் வந்தால் இடிமழை, குழைந்து போனால் இழைகிற இசை. கோபத்திலும் நியாயம் இருக்கும், குழைவிலும் உண்மை இருக்கும். உணர்வுகளில் மட்டும் வாழுகிற இந்தக் குழந்தை, வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்று நினைத்து, மூச்சை இழுத்துவிட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
``சொல்லுடா, என்ன ஆச்சு?"
ஹரிணி புத்தகங்களைத் திறந்து முனையில் மடித்து விடப்பட்ட இரண்டு பக்கங்களைக் காட்டினாள். ஒன்று அசோகமித்திரன். மற்றொன்று தி அல்கெமிஸ்ட்.
``இது புஸ்தகம்மா, பொம்மை இல்ல. காதைத் திருகற மாதிரி பக்கத்தை மடிச்சு விடறது, மூச்சு முட்டற மாதிரி பக்கத்தை வேகவேகமாகப் புரட்டறது , அலங்கோலம் பண்ற மாதிரி அங்கங்க எழுதறது, அதுக்கு உயிர் போற மாதிரி தொப்புன்னு தூக்கிப் போடறது... அப்படியெல்லாம் பண்ணலாமாம்மா? ஒரு புத்தகத்தை எழுதற ஒவ்வொருத்தரும் எவ்வளவு சிந்தனையை கொடுத்து எழுதி இருப்பாங்க, அவங்க உயிரோட ஒரு சொட்டு அந்தப் புத்தகத்தில இருக்காதாம்மா?" என்றாள் ஹரிணி.
வித்யா மிரண்டு போனாள். 13 வயசுக் குழந்தை பேசுகிற பேச்சா இது? கடவுளே, இவளுக்கு சாதாரணமான புத்தியை கொடுத்திருக்கக் கூடாதா? ஏன் இந்த அபரிமிதமான அறிவு, புத்திக்கூர்மை? அந்தக் கூர்மையால் தன்னைத் தானே குத்திக் கிழித்து வேதனைப்பட்டுக் கொள்கிறாளே! வயதுக்கு மீறிய வாசிப்பு, சிந்தனை, பேச்சு, தேடல்கள் என்று தன்னை வருத்திக் கொள்ளுகிறாள். எல்லா குழந்தைகளையும் போல், வயதுக்கு ஏற்ற மாதிரி உடையிலும் நடையிலும் ஆர்வத்துடன், தோழிகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்கக்கூடாதா என்று மனதுக்குள் மருகினாள் வித்யா. மேசை மேல் கவிழ்ந்து கொண்டு இருந்தவளின் முதுகை மெல்லத் தடவிக் கொடுத்தாள்.
ஹரிணியை பார்த்தால் பத்து வயதுதான் சொல்லலாம். முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் நிறைய மிச்சம் இருக்கிறது. எல்.கே.ஜி முடித்து நேராக முதல் வகுப்பு. பின் மூன்றாம் வகுப்பு. அவள் நான்காம் வகுப்பு வந்த ஒரு மாத காலத்திலேயே ஐந்தாம் வகுப்புக்கு அனுப்பலாம் என்று சிபாரிசு செய்த போது, வித்யாவும் ராகவனும் பயந்து போனார்கள்.
என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் உடலளவில், உணர்வளவில், மனதளவில் முதிர்ச்சி அடையாத ஒரு குழந்தையை அவளோடு மூன்று, நான்கு வயது மூத்த பிள்ளைகளோடு படிக்கவைப்பது சரியாக இருக்காது என்று மறுத்து விட்டார்கள். மேலும், அவளுக்குப் புத்தகங்களும் புதிர் விளையாட்டுகளும் வாங்கிக் கட்டுப்படி ஆகவில்லை. சிந்தனை அளவில் மிக சவாலான ஒரு சூழலை எப்போதும் ஏற்படுத்திக் கொடுப்பது எளிதாக இல்லை.
``ஏய் ஹரிணி, ஒரு பக்கத்தை ஓரத்துல மடிச்சதுக்கு என்ன பெரிய டிராமா பண்ற?"
ஒவ்வொரு வார்த்தையையும் கோபத்தில் முக்கி எடுத்து வீசினாள் தாரிணி. ஹரிணியை விட நான்கு வயது மூத்தவள்.
ஹரிணி நிமிர்ந்தாள்.
``நோ. நீ எதுவும் படிக்கல. என்னை இரிட்டெட் பண்ணதான் இப்படி பண்ற".
வித்யா இருவரையும் சமாதானம் செய்ய முயன்றாள்.
``அம்மா, இவளுக்கு மனசுல மேதாவின்னு நினைப்பு. என் ஃபிரெண்ட்ஸ் கூட இவளை சினிமா பார்க்கக் கூட்டிட்டு போனேன்ல? படம் பார்த்துட்டு அந்த ஹீரோ, அதுல வந்த காமெடி எல்லாம் பத்தி பேசிட்டு இருந்தோம். இவகிட்ட படத்த பத்தி கேட்டா என்ன சொல்லணும்..? பிடிச்சது, பிடிக்கல... அவ்வளவுதான..?"
தாரிணி சற்று நிறுத்தினாள். அவளது முகத்தில் எரிச்சல், கோபம், வெறுப்பு என்று மாறி மாறி வெளிப்பட்டன. தொடர்ந்தாள் தாரிணி...
``ஒரு வார்த்தை சொல்ல வேண்டிய பதிலுக்கு ஒரு பக்கம் பேசறா. அந்தப் படம் எந்த ஃப்ரெஞ்ச் படத்தோட காப்பி, அதோட டைரக்டர், எந்த நாவல் வச்சு எடுத்தது, அதோட அனாலிசிஸ்... எனக்கு அவமானமா இருக்கு. இஸ் ஷி ட்ரையிங் டு ஷோ ஆஃப்?"
ராகவன் கடைக்குப் போய்விட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்தான். எதோ குருஷேத்ரம் உருவாகிக் கொண்டு இருக்கிறது என்று புரிந்தது. ஹரிணி சற்று குழப்பமும் இயலாமையும் சேர பதில் சொன்னாள்.
``அம்மா, சோ வாட்..? எனக்கு தோணினதை, தெரிஞ்சதை சொன்னேன். எவ்வளவு நேரம் ஹீரோவோட லுக்ஸ் பத்தி பேசுவாங்க... போரிங்".
``தெரியாமத்தான் கேக்கறேன்... இவளால நார்மலா இருக்க முடியாதா..? எவ்வளவு நாள்தான் இவளை பொறுத்துக்கறது? என் பாடத்தை படிக்கிறது, பரிட்சையை பாதி நேரத்துல முடிச்சுட்டு வேடிக்கை பார்க்கிறது, உலகத்துல எந்த டாபிக் கொடுத்தாலும் விடாம பேசறது, நாலு மணி நேரமா ஒரு படம் வரைஞ்சுட்டு அதுல கண்ணுக்கே தெரியாத ஒரு சின்ன தப்பு இருக்குன்னு மொத்த படத்தையும் கசக்கிப் போடறது... காமெடி சீன்ஸுக்குக் கூட சிரிக்கத் தெரியாம.. லூசாடி நீ..?" - தாரிணி வெடிக்க, ராகவன் அவள் அருகே வந்து போதும் என்பது போல மெள்ள அவள் முதுகைத் தட்டினான். கண்களாலேயே அமைதியாக இரு என்பது போல் ஜாடை காட்டினான்.
``இன்னிக்கு நான் எல்லாருக்கும் பிரேக்ஃபாஸ்ட் செய்யப்போறேன். யாரு ஹெல்ப் பண்ண போறா ?" என்று ராகவன் கேட்க, சற்று நேரம் அமைதி நிலவ, தாரிணி, ``நான் பண்றேன்ப்பா" என்றாள்.
ஹரிணி முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு எழுந்தாள். ``எனக்கு எதுவும் வேண்டாம்" என்றவள் தாரிணியிடம், ``நீ பாக்கற காமெடி எல்லாம் எனக்கு சிரிப்பு வரல ஓ.கே. நான் வரையுற படத்துல சின்ன தப்பு இருந்தா உங்க கண்ணுக்கு வேணா அது சாதாரணமா தெரியலாம், தெரியாம கூட இருக்கலாம். ஆனா எனக்கு அதுல இம்பெர்ஃபெக்ஷன் இருக்கிறது தெரியும். அதை என்னால ஒத்துக்க முடியாது" என்று சொல்லிவிட்டு போக, வித்யா அவளைத் தொடர்ந்தாள்.
சமையலறையில் தாரிணி மிக அமைதியாக இருந்தாள். பின் மெள்ள, ``அப்பா நான் ஹரிணி கிட்ட ரொம்ப கத்திட்டேன். எனக்கு அவ இந்த மாதிரி இருக்கிறது புரியவே மாட்டேங்குது. ஏன் அவ சாதாரணமா இருக்கக் கூடாது ?" என்றாள்.
``உனக்கு முரளி சித்தப்பா பையன் அனிருத் தெரியும்தானே?"
``ஆமாம்பா. பாவம்."
``ஏன் அவனை பாவம்னு சொல்ற?"
``அவன் ஸ்பெஷல் சைல்ட். அவனுக்கு மூளை வளர்ச்சி இல்லை... எல்லாத்துக்கும் சித்திதானே ஹெல்ப் பண்றாங்க".
``கரெக்ட், அவனோட கஷ்டம் நமக்கு புரிகிறதனால நாம அவன் மேல கோபப்படறது இல்லதானே?"
``ஆமாம்பா."
``நம்ம ஹரிணியும் ஒரு சிறப்புக் குழந்தை மாதிரிதான் தாரிணி. என்ன வித்தியாசம் அவ கிஃப்டட் சைல்ட் (Gifted Child). அவளுக்கு இயல்பாவே எல்லாத்தையும் கிரகிச்சு புரிஞ்சிக்கற ஆற்றலும் ஆராயுற தன்மையும் வயதுக்கு அதிகமா இருக்கு. அதை சமன்படுத்த மூளைக்கு சவாலான வேலை ஏதாவது தொடர்ந்து வேண்டியிருக்கு. எப்படி உனக்கு ஒரு விஷயம் பழகினா போரடிக்குதுன்னு அடுத்த விஷயத்துக்குப் போறியோ, அதே மாதிரி அவளுக்கும். ஆனா, அடுத்தடுத்த விஷயம் போற வேகம் அவளுக்கு ரொம்ப அதிகமா இருக்கு. அவ கிஃப்டட் சைல்டுன்னு புரிஞ்சுக்க எங்களுக்கு இவ்வளவு நாள் ஆச்சு. அம்மாவும் நானும் உன் கிட்ட அவளைப் பத்தி பேசணும்னு இருந்தோம்".
தாரணி ஆச்சர்யமாகவும், நம்ப முடியாமலும், அப்பா சொல்வதால் நம்பித்தான் ஆகவேண்டும் என்பது போலவும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
``எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சில விஷயங்கள்ல அவ தன்னோட வயதுக்கு ஏற்ற மாதிரி குழந்தையாவும் இருக்கா. அந்த முரண்பாடு அவளுக்குள்ள இருந்துட்டே இருக்கு. அதனாலதான் சட்டுன்னு உணர்ச்சிவசப்படறதும், சில சமயம் பெரியவங்க மாதிரி யோசிக்கிறதும், பேசறதும்னு நடந்துக்கிறா. அதான் உனக்குப் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கு".
இப்போது தாரிணி நிஜமான அக்கறையுடன் கேட்டாள்.
``சாரிப்பா, ஹரிணியை என்னப்பா பண்றது?"
``வெளிநாடுகளில் இந்த மாதிரி குழந்தைகளை சீக்கிரமே கண்டுபிடித்து அவங்களுக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கித் தருவது சீக்கிரம் நடந்துடுது. இப்போதான் அம்மாவும் நானும் அவளுக்காக நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கோம். அவ மாதிரி உள்ள குழந்தைகளுக்கான குழுக்கள், கிளப்ஸ் எல்லாவற்றையும் தேடி, அவளை அதுல சேர்த்து, வளர்ந்து வரும் இந்தப் பருவத்தை அவளுக்குக் கொஞ்சம் சுலபமா, சாதகமா செய்து தரணும். அவளை ஒத்த நண்பர்கள் கூட அறிமுகப்படுத்தி வைக்கணும். இதெல்லாம் எங்களுக்கு இந்த அளவுக்கு சமீபமாதான் புரிஞ்சிருக்கு தாரிணி."
``அப்பா, எனக்கு ஹரிணியை பார்த்து சந்தோஷப்படறதா துக்கப்படறதான்னு தெரியல..." - தாரிணி குரல் கம்மி இருந்தது. ராகவன் தோசைக் கரண்டியை கீழே வைத்து விட்டு அவளை மெள்ள அணைத்துக் கொண்டான்.
``ரெண்டுமே வேண்டாம். உன் தங்கையை அப்படியே அவ இருக்கிற மாதிரி ஏத்துக்கோ தாரிணி. அது போதும்!"
தோசைமாவை எடுத்து தோசைக்கல்லில் ``ஐ யூ ஹரிணி" என்று வரையத் தொடங்கினாள்.
- அனுராதா ஜெய்ஷங்கர்
from விகடன்
Comments