பெண்கள் சார்ந்த கதைக்களத்தைக் கொண்ட ஒற்றைச் சரடில் இணையும் மூன்று மலையாளப் படங்கள் சமீபத்தில் ஓ.டி.டி தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஸ்பாய்லர்கள் கொண்ட அலசல் என்பதால் படம் பார்க்காதவர்கள், பார்க்க நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையைத் தவிர்த்துவிடவும்.
படம் ஒன்று: Ariyippu | Declaration
நொய்டாவில் ரப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தம்பதிகள் அரபு நாட்டில் வேலைக்குச் செல்வதை லட்சியமாகக் கொண்டு அதற்கான முயற்சிகள் செய்கின்றனர். அதன் ஒரு அங்கமாக நாயகியிடம் வேலை செய்யும் திறனை வெளிப்படுத்தும் 'Skill Video' ஒன்றை ஏஜென்ட் கேட்கிறார். செல்போன் பயன்படுத்தத் தடை உள்ள தொழிற்சாலையில் யாருக்கும் தெரியாமல் வேலைநேரம் முடிந்தபிறகு நாயகன் தன் மனைவி வேலை செய்வதைப் படமாக்குகிறான். சில நாள்களுக்குப் பிறகு அந்த காணொலியின் இறுதியில் அதே தொழிற்சாலை சீருடையில் இருக்கும் ஒரு பெண்ணும் ஆணும் பாலியல் செயலில் ஈடுபட்டிருக்கும் காட்சியும் இணைக்கப்பட்டு தொழிற்சாலை முழுவதும் வாட்ஸ்அப்பில் பரவுகிறது.
காணொலியில் இருப்பது தன் மனைவி அல்ல என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த காணொலி பரவாமல் தடுக்குமாறும் கணவன் காவல்துறையில் புகார் அளிக்கிறான். ஆனால் காவல்துறை அதிகார வர்க்கத்தின் கையாளாகச் செயல்பட்டு பிரச்னையை அவன்மீதே திருப்புகிறது. அவமானத்தால் முடங்கிப்போகும் மனைவி இந்தப் பிரச்னையை விட்டுவிட்டு ஊருக்கே சென்றுவிடலாம் எனக் கணவனிடம் சொல்ல, அவன் போராடி நீதி கிடைக்கச் செய்வேன் என்கிறான்.
பிறகொரு நாள் வேறு சில ஆதாரங்களை வைத்து காணொலியில் இருப்பது தன் மனைவிதான் எனச் சந்தேகப்பட்டு அவளை வீட்டைவிட்டுத் துரத்துகிறான். இதற்கிடையில் புகாரைத் திரும்பப் பெற்றால் அவர்கள் விரும்பியதுபோல வெளிநாட்டில் இருக்கும் தங்களுடைய தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்புவதாக நிர்வாகம் சமரசம் பேசுகிறது. அதேசமயம் அந்த காணொலியில் இருக்கும் இளம்பெண் வீடியோ வெளியாவதற்கு முன்பே தற்கொலை செய்துகொண்ட உண்மை நாயகிக்குத் தெரிய வருகிறது. உடனே அவர் நிர்வாகத்திடம் காணொலியில் இருப்பது தான் அல்ல என்று நிர்வாகம் தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிடவேண்டும் (Declaration) மற்றும் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிற பெண்ணின் குடும்பத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என இரண்டு நிபந்தனைகள் வைக்கிறாள். இறந்த பெண்ணின் தாயாரை நேரில் சென்று பார்க்கும் நாயகி தன் முடிவை மாற்றிக்கொள்கிறாள். இறந்தவளின் உயிருக்கான விலைதான் வெளிநாடு செல்லும் வாய்ப்பு என்பதை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். ஆனால் அவள் கணவன் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தான் மட்டும் வெளிநாடு செல்கிறான். நாயகி கேட்டதுபோல் தகவல் பலகையில் அறிவிப்பு #Declaration வெளியிடப்படுகிறது என்பதாகப் படம் முடிகிறது.
தன் மனைவி சம்பந்தப்பட்ட ஒரு தவறான காணொலி வெளிவந்தால் அது மானப்பிரச்சினை என்று அவசரமாக மனைவியைப் பிரிகிறவர்களுக்கு மத்தியில் தன் மனைவிக்கு நியாயம் கிடைக்கக் காவல்நிலையம் செல்லும் 'அறியிப்பு' படத்தின் நாயகன் நம்பிக்கை அளிக்கிறான். ஆனால் அவ்வளவு உறுதியாக இருந்தவன் ஒரு சிறு ஆதாரத்தைக் கண்டவுடன் விசாரிக்காமலேயே குற்றவாளி என முடிவு செய்து அவளை வீட்டைவிட்டுத் துரத்துகிறான். இந்தத் தடுமாற்றம் தவறு என்றாலும் இதுதான் இங்கு யதார்த்தம்.
சமூகத்தை எதிர்கொள்ள அச்சப்பட்டு முதலில் தனக்காகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுக்கும் நாயகி, அதுவே இன்னொரு பெண்ணின் மரணத்தை மறைப்பதற்குப் பரிசாக தனக்கு வெளிநாட்டு வேலை வரும்போது அதை ஏற்க மறுக்கிறாள். தனக்கு முன் அறிமுகமில்லாத பெண்ணின் மரணத்திற்காக தன்னுடைய கனவை அடையும் நல்வாய்ப்பைத் தவறவிடுவது என்பதும்கூட நீதியின் பக்கம் நிற்பதுதான்.
ஆண்கள் பெண்களைவிட ’ப்ராக்டிகலானவர்கள்’ என்று சொல்லிக்கொள்வார்கள். அதற்கு எல்லாவற்றையும் ‘கன்வின்ஸ்’ செய்துகொண்டு நிர்வாகம் கொடுக்கும் ‘ஆஃபரை’ ஏற்று வெளிநாடு செல்லும் நாயகனே சாட்சி.
படம் இரண்டு: The Teacher
கொல்லத்தில் ஒரு தனியார்ப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும் நாயகி. அவளுடைய கணவன் பொது மருத்துவமனையில் வேலை பார்க்கிறான். முதல் நாள் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளை முன்னின்று நடத்திய களைப்பால் அசந்து தூங்கி எழும் நாயகி, உடலில் அதீத களைப்பு, வலி, ஏதோ மாற்றம் இருப்பதாக உணர்கிறாள். எவ்வளவு யோசித்தும் முதல்நாள் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என நினைவில்லை. மனதில் இந்தக் குழப்பத்துடனே அவளது அன்றாட வேலைகளைத் தொடர்ந்தாலும் உள்ளுக்குள் தன்னுடைய மாற்றத்திற்கான காரணத்தை ஆராய்ந்துகொண்டே இருக்கிறாள். இதனிடையே நான்கு ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத நாயகி கர்ப்பமாகிறாள். அந்த கர்ப்பம் அவளை அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது. தன்னை யாரோ மயக்கமருந்து கொடுத்து வன்புணர்வு செய்திருக்கலாம் என சந்தேகமுற்று கருவைக் கலைக்க நினைக்கிறாள்.
கணவரிடம் உண்மையைச் சொல்ல, அவன் அவள்மீதே குற்றம் சுமத்துகிறான் (Victim Blaming). சந்தேகத்தின் நுனியைப் பற்றிக்கொண்டே போனவள், போட்டியில் கலந்துகொள்ள வந்த வேறு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்தான் தன்னை வன்புணர்வு செய்தவர்கள் எனும் உண்மை தெரிந்து உடைந்துபோகிறாள். கணவன் எதிர்த்தாலும் தன் மாமியாரிடம் தனக்கு நேர்ந்த பாதிப்பைக் கூறுகிறாள். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த களப்போராளியான மாமியாரின் உதவியுடன் மாணவர்களைப் பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை.
பொதுவாக பாலியல் குற்றங்கள் நிகழும்போதெல்லாம் சமூகம் அவசரமாகக் குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்ல வேண்டும் எனக் கொதித்தெழும். அதன் பின்னணியில் போலி என்கவுன்ட்டர்களும் சிறை மரணங்களும் நிகழும். பொதுமக்களின் இந்தக் கும்பல் மனநிலையும், அரசு மற்றும் காவல்துறையின் அவசர எதிர்வினையும் மிகவும் தவறானவை என சமூகத்தில் பல உண்மைச் சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன.
ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் யார் வேண்டுமானாலும் சட்டத்தைக் கையில் எடுக்கலாம் என்கிற தவறான போதனையை முன்வைக்கின்றன. மாணவர்களுக்கு சமூகத்தையும் சட்டத்தையும் மதிக்கச் சொல்லித் தரும் மாபெரும் பொறுப்பு பள்ளிகளுக்கு உள்ளது. சாலை விதிகள் முதல் வாக்குரிமை வரை சட்ட விதிகளைச் சொல்லித்தந்தவர்கள் எங்கள் பள்ளி ஆசிரியர்கள். ஆனால் ஒரு ஆசிரியர் தனக்குத் தீங்கிழைத்த மாணவர்களைக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் தனிப்பட்ட உதவியுடன் தானே பழிவாங்குகிறார் என்பதைப் பார்க்க மனம் பதைபதைக்கிறது. எமோஷனல் மோடிலிருந்து வெளியே வந்து இதன் அறத்தை ஆராய்ந்தால்தான் இதிலிருக்கும் சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும்.
மாணவர்கள் ஆசிரியரை வன்புணர்வு செய்யும் சம்பவங்கள் எங்காவது ஒன்றிரண்டு நடந்திருக்கலாம். சமூகத்தில் நடப்பதைத்தான் திரைப்படமாக எடுக்கிறோம் எனச் சொல்லி பதின்பருவ மாணவர்கள் மீது ஒட்டு மொத்தமாக அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் திரைப்படம் ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது. அதேபோல் மாணவர்களைப் பழிவாங்கத் தனியாக விடுதிக்கு வரவைப்பதற்காக ஆசிரியரான நாயகி மாணவனை ஆசை வார்த்தைகள் கூறி மயக்குவது, இறுதிக்காட்சியில் மாணவர்கள் ஆசிரியரிடம் தவறாகப் பேசுவது, நெருக்கமாக நடந்துகொள்வது போன்ற காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை.
’எனது முதல் காதல் என்னுடைய ஆசிரியர்தான்’ என்பதில் தொடங்கி, ஆசிரியர்களை நேரடியாக ’க்ரஷ்’ எனச் சொல்வதுவரை எல்லாவற்றையும் விளையாட்டாக “நார்மலைஸ்” ஆக்கி வைத்திருப்பதன் நீட்சிதான் மாணவர்கள் ஆசிரியர்மீது மோகம் கொண்டு வல்லுறவுக்கு உட்படுத்துவதாகத் திரைப்படங்கள் எடுப்பது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் நிகழும்போது முதலில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். படம் இந்த இரண்டு அடிப்படை விஷயங்களுக்கும் எதிராக இருக்கிறது.
படம் மூன்று: Jaya Jaya Jaya Jaya Hey
ஏற்பாட்டுத் திருமணத்தில் இணையும் சராசரி ஆண் - பெண் வாழ்வில் உள்ள புரிதலின்மைதான் கதைக்களம். தனக்கும் தன் அண்ணனுக்கும் இடையில் பெற்றோர்கள் பெண், ஆண் பாகுபாடு பார்ப்பது குறித்த புகாரை நாயகி தன் தோழியிடம் சொல்லும்போது, இது சாதாரணம்தானே, ஏன் பெரிதுபடுத்துகிறாய் எனத் தோழி கேட்பதில் படம் தொடங்குகிறது. இந்த ஆண் - பெண் பாரபட்சம் நாயகிக்குக் கணவன் வீட்டிலும் தொடர்கிறது.
மனைவி வீட்டில் ’சும்மா’ இருப்பதாகவும், தான் குடும்பத்திற்காகக் கஷ்டப்பட்டுச் சம்பாதிப்பதாகவும் எண்ணிக்கொண்டு அவளைத் தனது அடிமையாக நடத்தும் சராசரி கணவன்தான் நாயகன். அவனுக்குக் கோபம் வரும்போதெல்லாம் தன் இருப்பையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மனைவியை அறைந்துவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டு வெளியே அழைத்துச் சென்று சமாதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். அதேசமயம் சமாதானத்திற்காக உணவகம் செல்லும்போதுகூட அவளுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்ய அனுமதிக்கமாட்டான்.
“நான்தான் சாரி கேட்டுவிட்டேனே, இன்னும் ஏன் கோபமாய் இருக்கிறாய்?” எனக் கணவன் கேட்கும் மன்னிப்பு என்பது குற்றத்தை ஒப்புக்கொண்ட புரிதலினால் வெளிப்படுவது அல்ல. மனைவி ’உம்மென்று’ இருப்பது தன்மேலுள்ள கோபத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து, அந்தக் குற்றவுணர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தனது ஈகோவை விட்டுக்கொடுக்க முடியாமலும் ஆதங்கத்தில் சொல்லும் “சாரி”. இந்த கணவன்தான் பெரும்பான்மை சராசரி இந்திய ஆண்களின் பிரதிநிதி.
நாயகி அவனது அடியைத் தாங்க முடியாமல் மாமியார் மற்றும் பெற்றோரிடம் சொல்கிறாள். ஆனால் அவர்களோ ”குடும்ப வாழ்க்கையில் இது சகஜம், பொறுத்துப் போ” என அறிவுரை சொல்கிறார்கள். எவ்வளவு பொறுத்துக்கொண்டாலும் தன்னுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றானபின் ஒருநாள் தைரியமாக அவனைத் திருப்பி அடிக்கிறாள். அதற்கான தற்காப்புக் கலை பயிற்சியை யூடியூப்பில் பார்த்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் பயிற்சி எடுக்கிறாள். அவள் தன் கணவனைத் திருப்பி அடிக்கிற காட்சியின் பின்னணியில் ஒலிபரப்பாகும் கமென்ட்ரி யதார்த்த வாழ்விலிருந்து சினிமாவாக ஃபேன்டஸிக்குள் விரிகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் தன்னை நாயகி ஜெயாவின் உருவத்தில் பொருந்திப் பார்க்கும் இடம் அது. படத்தின் இந்தக் காட்சிகள் நகைச்சுவையாகப் படமாக்கப்பட்டிருப்பதுகூட ஆண்கள் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்கோ எனச் சந்தேகமும் வருகிறது.
மனைவியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவளைக் கர்ப்பமாக்கினால் போதும் என நாயகனின் நண்பன் திட்டம் வகுத்துத்தர, அதன்படி நாயகி கர்ப்பமாகிறாள். நாயகியின் படிப்பைப் பாதியில் நிறுத்தி திருமணம் செய்துவைத்த பெற்றோரே அவளுக்குக் கல்வியும் வருமானமும் இல்லாத காரணத்தைச் சொல்லி அச்சமூட்டி அவளைக் கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இறுதியில் அவள் தாலியைக் கழட்டிக் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.
மனைவி தன்னை அடிப்பதைக் காரணமாக வைத்து கணவன் விவாகரத்து கோருகிறான். தனக்குத் திருமணமானதிலிருந்து கணவன் ஒருமுறைகூட தன்னிடம் சரியாக உரையாடவில்லை, தன்மீது அன்பில்லை, மொத்தத்தில் சகமனுசியாக பார்க்காமல் சமைக்கவும் வீட்டு வேலை செய்யவும் வாங்கி வந்த அடிமையாக நடத்துகிறான் என நாயகி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கிறாள். தான் தன்னுடைய மனைவிக்குச் சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் ஆனால் அவள் தனக்கு அடங்கி நடப்பதில்லை என்றும் நாயகன் நீதிமன்றத்தில் பதில் சொல்கிறான். இந்தக் காட்சி நமக்குச் சிரிப்பு வரும்படி படமாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் 99.% இந்திய ஆண்கள் திருமண வாழ்க்கையை இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளார்கள்.
`தி க்ரேட் இண்டியன் கிச்சன்' திரைப்படம் வந்தபோது சொன்னதைப் போலவே இந்தப் படத்தைப் பார்க்கும் ஆண்கள், `இப்படியெல்லாம் இப்போது நடப்பதில்லை, இது 1980களின் கதை’ என்று பதற்றத்தில் புலம்புகிறார்கள். நம் சமூகத்தில் கணவன் மனைவியை அடிப்பது இன்றும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆனால் நாளிதழ், திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் மனைவி கணவரை அடிப்பதுபோல் நகைச்சுவையாகச் சித்திரிக்கின்றன. அதுவும் சில குடும்பங்களில் நடக்கலாம். ஆனால் இந்தக் குறைந்த சதவிகித சம்பவங்களை வைத்து பெரும்பான்மையாக நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நீர்த்துப்போகச் செய்கின்றனர்.
பெரும் நகரங்களில் பெண்கள் ஓரளவு தைரியமாக மாறியிருக்கலாம். சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில் கல்வி, சுயவருமானம் இல்லாமல், தங்கள் பிறந்த வீட்டினராலும் கைவிடப்பட்டு குடும்ப வன்முறைகளைப் பொறுத்துக்கொண்டு வாழும் பெண்களே இங்கு ஏராளம். அதுபோக சுயமாகச் சம்பாதிக்கும் பெண்களைக்கூட குடும்ப அமைப்பிலிருந்து வெளியேற விடாமல் குழந்தைகள் மற்றும் கௌரவத்தைக் காரணம் காட்டி பெற்றோர்களே குடும்ப வன்முறைகளுக்குள் உழலச் செய்கின்றனர்.
ஆணை கைநீட்டி அடிப்பது தவறில்லையா, பெண்கள் திருப்பி அடிப்பது சாத்தியமா, இப்படிச் செய்வதனால் குடும்ப அமைப்பு உடைந்துவிடாதா என்றெல்லாம் கேட்கின்றனர். யார் யாரை அடித்தாலும் தவறுதான் என்றாலும் ஒரு பெண் தன் வலியைக் காலங்காலமாகப் புரிந்துகொள்ளாத சமூகத்துக்கு உணர்த்தத் திருப்பி அடிப்பதைவிட வேறு என்ன வழி இருந்துவிட முடியும்?
`அறியிப்பு' படத்தில் முதலாளியாக வரும் பெண் தன் வீட்டு ஆண்களின் தவற்றை மறைக்க, ஒரு பெண் தொழிலாளியின் உயிரைப் பலி கொடுக்கிறாள்.
`தி டீச்சர்' படத்தில் நாயகியின் தோழி நாயகியை பிரச்னையில் இருந்து ஒதுங்கி வாழ அறிவுறுத்துகிறாள். குற்றம் செய்த ஒரு மாணவனின் சகோதரியும் தன் வீட்டு ஆண்களின் தவற்றை மறைத்துப் பாதிக்கப்பட்ட பெண்மீதே குற்றம் சுமத்துகிறாள்.
`ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் அம்மா, மாமியார், நாத்தனார் என அனைவரும் ஆண் அடிப்பதை “நார்மலைஸ்” செய்து அவனுக்கு அடங்கிப்போகச் சொல்கின்றனர்.
வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள் முதல் குடும்பத்தில் நடக்கும் கணவன் மனைவி பிரச்னைவரை பெண்கள் பெண்களையே அடங்கிப்போகச் சொல்வதற்குக் காரணம் நாம் இன்னமும் ஆண்-மைய சமூக அமைப்பில் இருப்பதும் அதைப் பெண்களே தயக்கமில்லாமல் ஏற்றுக்கொள்வதும்தான் (Patriarchy). பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கிடைக்கவிடாமல் தடுக்கும் முதல் காரணி பெண்கள் அவர்களுக்குள் அணியாய், அமைப்பாய் திரளாமல் இருப்பது. ஓர் ஆணின் புரட்சியில் பாலின பேதமில்லாமல் எல்லோரும் சட்டென ஒன்றுகூடுவது போலப் பெண்கள் போராட்டங்களுக்கு அழைக்கும்போது சகபெண்களே முழு நம்பிக்கையுடன் ஒன்று கூடுவதில்லை.
காரணம் ஆண்களின் உலகில் அங்கீகாரம் வேண்டி பெண்கள் நிற்கிறார்களே தவிர தாங்கள் தங்களுடைய உலகை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள் அல்லது காலங்காலமாக இந்த சமூக அமைப்பு அதை மறக்கும்படி செய்திருக்கிறது.
பெண்களை ஒன்று சேராமல் தடுக்கும் சிறு ஆயுதம், “நீ அவளைப்போல் இல்லை” என்றும் குடும்பப் பெண்கள் வேறு, போராளிகள் வேறு என்றும் மிகத் தெளிவாகப் பிரித்து வைக்கும் சூழ்ச்சி. ஆண்கள் கொடுக்கும் 'குடும்பப்பெண்' அங்கிகாரம் இல்லை என்றால் இந்தச் சமூகத்தில் வாழமுடியாது என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மிக அடிப்படையான கல்வி, சுயவருமானம் முதலான விஷயங்களுக்கே பெண்கள் இன்னமும் குடும்பங்களில் போராட வேண்டிய சூழலுள்ள நாட்டில் தங்களுக்குப் புதிது புதிதாக உருவாகும் பிரச்னைகளை, குறிப்பாகப் பெண்கள் வேலை செய்யும் இடங்களில், இணையத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தனித்து எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் படித்து, வேலை பார்க்கும் வாய்ப்பிருந்தும் பல பெண்கள் மீண்டும் வீட்டுக்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
சமூகம் மீண்டும் மீண்டும் பொதுவெளியை ஆண்களுக்கானதாக கட்டமைப்பதில் உறுதியாக இருக்கிறது. சாதாரண நாள்கூலி வேலையிலிருந்து அரசியல்வரை பெண்களைப் பொதுவெளியிலிருந்து அப்புறப்படுத்தத் தொடர்ந்து பாலியல் ரீதியான பிரச்னைகளையே ஆண்-மைய சமூகம் கையில் எடுக்கிறது என்பதற்குச் சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் விஷயங்களே சாட்சி.
டெல்லி நிர்பயா வழக்கில் முதன்மை குற்றவாளி முகேஷ் வன்கொலை செய்தது பற்றித் துளியும் குற்றவுணர்வு இன்றி, ”பெண்களின் இடம் அடுப்படிதான், அதைக் கடந்து வெளியே வரும் பெண்களை வன்புணர்வு செய்வது தவறில்லை" என்று தண்டனை பெற்றபின்னும் கூறியிருப்பான். பத்தாண்டுகள் கடந்தும், இன்றும் ஆண்கள் சமூகவலைதளங்களிலும் மற்ற ஊடகங்களிலும் இதே மனநிலையில்தான் இயங்குகின்றனர்.
கிராமங்களில் சாதிய வன்கொடுமைகள் நடக்கும்போது தவறு செய்த ஆண்களை சட்டப்படி தண்டனையிலிருந்து காப்பாற்ற அவர்கள் குடும்பம் நீதிமன்றங்களில் போராடுவதைப் பார்த்திருக்கிறோம். கொலை செய்யும் ஆண்களை வாரிசு என்கிற காரணத்தால் சொத்தை விற்றுக் காப்பாற்றும் சமூகம் தங்கள் வீட்டுப் பெண்களின் போலியாகச் சித்திரிக்கப்பட்ட (Morphing) படங்கள் வெளியானால்கூட முதல் வேளையாக அந்தப் பெண்களைத்தான் குற்றம் சாட்டுகிறது. வீட்டுக்குள் முடக்கி, ஒதுக்கி வைக்கிறது.
இதிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டுமானால், முதலில் தங்கள் உடல் புனிதமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய படத்தையோ அல்லது நம்முடைய படத்தை வைத்துச் சித்திரிக்கப்பட்ட படங்களையோ ஒருவர் இணையத்தில் நமது அனுமதியில்லாமல் பகிர்வது சட்டப்படி குற்றம் என்கிற விழிப்புணர்வைப் பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இந்த மூன்று படங்களும் உணர்த்தும் பொதுவான விஷயங்கள் நான்கு.
- பெண்கள் தங்கள் பிரச்னைகளை முதலில் வெளிப்படையாகக் குடும்பத்தில் பேசவேண்டும் (Transparency).
- குடும்பம் உடன் நிற்காவிட்டாலும் தீர்வு அல்லது நீதியை நோக்கி தனியாகப் போராடும் மனதைரியம் கொள்ள வேண்டும் (Courage).
- குடும்பம், நட்பு வட்டம் மட்டுமல்லாமல் அறிமுகமில்லாத பெண்களுக்குப் பிரச்னை என வரும்போதும் துணிச்சலுடன் உடன் நிற்க வேண்டும் (Solidarity).
- கல்வி, சுயவருமானம் இவற்றோடு தற்காப்புக் கலையும் பெண்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் (Self Defense). இது ஒருவகை வற்புறுத்தல்தான் என்றாலும், ஆண்-மைய உலகம் சுழலும்வரை இது காலத்தின் கட்டாயமாகிப் போகிறது.
from விகடன்
Comments