பிக் பாஸ் 6 நாள் 82: `கூடவே வரக்கூடிய ஃபைனலிஸ்ட் யார்?' பாயின்ட் இல்லாமல் ஒரு மணி நேரம் பேசிய அசிம்!
‘மற்றவர்களை விட நான் எப்படிச் சிறந்தவன்’ மற்றும் ‘என்னுடன் இறுதிப்போட்டி வரை வரக்கூடிய தகுதியுள்ள இன்னொருவர் யார்?’ என்கிற இரண்டு கேள்விகளை முன்வைத்து ஒவ்வொருவரும் பேச வேண்டும். அனல் பறக்க நடந்த இந்த விவாதத்தில், ‘கூட வரக்கூடிய ஃபைனலிஸ்ட்’ என்கிற தேர்வில் விக்ரமனின் பெயர் அதிகமுறை வந்தது. அடுத்தபடியாக ஷிவின்.
வெளியில் உள்ள மக்களின் பிரியத்தையும் வாக்குகளையும் பெறுவது ஒருபக்கம். முதலில் வீட்டின் உள்ளே இருக்கிற சக போட்டியாளர்களின் நன்மதிப்பைப் பெறுவது முக்கியம். அந்த வகையில் இந்தத் தேர்வு முக்கியமானது. போட்டியாளர்களின் வெளியுலக வாழ்க்கை, அவர்களின் செயல்பாடுகள் வெளியே எப்படி இருந்தன என்று ஆராய்ச்சி செய்வதை விடவும் வீட்டிற்குள் அவர்கள் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதுதான் முக்கியம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்’ என்கிற பாடலுடன் நாள் 82 விடிந்தது. ‘கவலைப்படாதே சகோதரி... எங்கம்மா காத்திருப்பா. காதலைத்தான் சேர்த்து வைப்பா” என்று ஷிவினை இன்னமும் உசுப்பேற்றிக் கொண்டிருந்தார் அமுதவாணன். (இன்னுமா மாம்ஸூ நிறுத்தலை?!)
‘நான் யார் என்று தெரிகிறதா?’ என்கிற டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘ஏறத்தாழ பத்து மணி நேரம் மூச்சுத் திணற திணற நடந்த இந்த டாஸ்க்கின் இறுதியில் ‘ஓ... நீங்க அப்படிச் சொன்னீங்களா பிக் பாஸ்? நாங்க வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டோம்’ என்று விக்ரமனும் ஷிவினும் தலையைச் சொறிந்தது அநியாயம். ‘யார் அதிக அளவு மண்ணைப் பெறுகிறார்களோ, அவரே வெற்றியாளர்!” என்று ரூல் புக்கில் தெளிவாகவே முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
‘மண்ணைப் போட்டா வெற்றி கிடைக்கும்’
‘மற்றவர்களை விட நான் எப்படிச் சிறந்தவன்’ மற்றும் ‘இறுதிப் போட்டி வரை என்னுடன் பயணிக்கக்கூடிய தகுதியுள்ள இன்னொவருவர் யார்?’ என்று இரண்டு கேள்விகளை வைத்து ஒவ்வொருவரும் பேச வேண்டும். இவர்கள் சொல்லும் பாயின்ட்டில் மற்றவர்களுக்கு உடன்பாடு இருந்தால், அவர்களின் குடுவையில் ஒரு கிளாஸ் மண்ணைப் போடலாம். உடன்பாடு இல்லையென்றால் விளக்கத்தைக் கோரலாம். இறுதியில், எவருடைய குடுவையில் மண்ணின் அளவு அதிகமாக இருக்கிறதோ, அவரே சிறந்த மண்ணாங்கட்டியாளர்... ச்சே. மன்னிக்கவும். வெற்றியாளர்.
முதலில் எழுந்த அமுதவாணன், “நான் பெரும்பாலான டாஸ்க்ல ஜெயிச்சிருக்கேன். நாடகம் போன்ற விஷயங்களில் நல்லாப் பண்ணியிருக்கேன். நிறையச் சிரிக்க வெச்சிருக்கேன். என்னுடன் இறுதி வரை வரக்கூடியவராக ‘ஷிவினை’ பார்க்கிறேன்” என்று சொல்லி சபையின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு அமர்ந்தார். (நடிகன்டா... நீ நடிகன்டா!). ஷிவினின் பெயரைச் சொன்னதில் ஏடிகேவிற்கு உடன்பாடில்லை. எனவே மறுப்பு தெரிவித்தார்.
அடுத்து வந்த ஏடிகே, “நான் வெளில பெற்ற விருதுகள், பெருமைகள் போன்றவற்றை வீட்டுக்குள் எப்பவும் சொல்லியதில்லை. மத்தவங்களை பேச விட்டிருக்கேன். கமல் கிட்ட கண்டிப்பு வாங்கியதில்லை. கோபம் வரும்தான். ஆனா அது கொஞ்சம்தான். நிறைய நல்ல குணங்கள் என்கிட்ட இருக்கு. எல்லா விதிகளையும் சரியா பின்பற்றியிருக்கேன். என் கூட இறுதி வரைக்கும் வரக்கூடிய நபரா ‘விக்ரமனை’ பார்க்கறேன். ரொம்ப நேர்மையா இருக்கார்” என்று சொல்லி முடிக்க “உங்க கோபத்தால என் ஆட்டம் பாதிச்சிருக்கு” என்று ரச்சிதா மறுப்பு தெரிவித்தார். “நான் ஹைபர் ஆக்டிவ். அதனால டாஸ்க்ல அப்படித் தெரிஞ்சிருக்கும்” என்று ஏடிகே அளித்த விளக்கத்தை ரச்சிதா ஒருமாதிரியாக ஏற்றுக் கொண்டார். விக்ரமனின் பெயர் வந்த பிறகு அசிம் சும்மா இருப்பாரா? எனவே அதைப் பற்றி அவர் கேள்வி எழுப்ப “விக்ரமனோட வெளியுலக வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகள் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. வீட்டைப் பொறுத்த வரைக்கும்தான் சொல்றேன்” என்று ஏடிகே விளக்கம் சொன்னதை அசிம் ஏற்றுக் கொண்டார்.
அடுத்ததாக வந்த மைனா, “ரச்சிதாவை விட நான் பெட்டர். விக்ரமன் கருத்து மட்டுமே சொல்றாரு. அசிம் மத்தவங்களைத் தவறா சித்திரிக்கறாரு. இறுதி வரை என் கூட வரக்கூடிய நபர் விக்ரமன்” என்று சொல்லி முடிக்க “நீங்க மத்தவங்களுக்காகப் பேசி நான் பார்த்ததில்லை” என்று ஆட்சேபம் எழுப்பினார் விக்ரமன். “ஒரு விஷயத்துல மூணாவது நபர் உள்ளே வருவதை விடவும் சம்பந்தப்பட்டவங்க இரண்டு போ் மட்டும் பேசி தீர்த்துக்கலாம்” என்று மைனா அளித்த விளக்கத்தை "சேஃப் பதில்” என்று கமென்ட் செய்தார் மணிகண்டன்.
‘நான் நல்லாப் பாடுவேன். தாளம் போடுவேன்’ - கதிரவன்
அடுத்து வந்த கதிரவன், “ரச்சிதாவை விடவும் டாஸ்க்ல நான் நிறைய பண்ணியிருக்கேன். விக்ரமன் கிட்ட என்டர்டெயின்மென்ட் குறைவு. நான் நல்லாப் பாடுவேன். பீட் போடுவேன்... கூட வரும் ஃபைனலிஸ்ட் ‘விக்ரமன்’" என்று சொல்லி முடிக்க “ஒருத்தருக்குப் பாட வரலைன்றதையெல்லாம் காரணமா ஏத்துக்க முடியாது” என்று மறுப்பு சொன்னார் ஏடிகே. அடுத்ததாக எழுந்த ரச்சிதா “ஏடிகேவோட முன்கோபம்...” என்று சொல்லி முடிக்கும் முன்னரே “என் கோபத்தால நீங்க எப்பவாவது பாதிப்பு அடைஞ்சிருக்கீங்களா?” என்று ஆவேசமாக மறுத்தார் ஏடிகே. (இதுதான் சார் முன்கோபம்!) “அசிம் மத்தவங்களைத் தாழ்த்திப் பேசறார்” என்று ரச்சிதா அடுத்த வரியைச் சொன்னதும் அசிமிடமிருந்து பீரங்கிக் குண்டுகள் ஆவேசமாகக் கிளம்பின.
“நான் யாரையும் பிடிச்சு அமுக்கலை. (Taunting என்கிற வார்த்தையை ரச்சிதா பயன்படுத்தினார்). சனிக்கிழமை மட்டும்தான் ரச்சிதாவுக்கு புது உத்வேகம் வந்துடுது. கமல் சார் முன்னாடி மட்டும்தான் உற்சாகமா கம்ப்ளெயின்ட் பண்றாங்க. மத்த நாள்ல எல்லாம் இந்த வேகம் எங்க போச்சு? வீக்கெண்ட் நாள்களை மட்டுமா கணக்கில எடுத்துக்க முடியும்? இது ரொம்ப ஃபேக்கா தெரியுது” என்று அசிம் சரமாரியாக அடித்து முடிக்க அதற்கு விளக்கம் அளித்தார் ரச்சிதா. பிறகு இறுதிவரை கூட வரும் போட்டியாளராக ‘ஷிவினின்’ பெயரைச் சொல்லி அமர்ந்தார் ரச்சிதா.
அடுத்து வந்தவர் மணிகண்டன். “ரச்சிதா மத்தவங்களுக்காகப் பேசி நான் பார்த்ததில்லை. நான் டாஸ்க் நிறைய பண்ணியிருக்கேன். விக்ரமன் வேலை செஞ்சதில்லை. பசங்களுக்காகப் பேசினதில்லை. ஷிவின் மத்தவங்க ஃபீலிங்ஸை மதிக்கறதில்ல. ஃபேவரிட்டஸம் இருக்கு. ஆனா என்னையும் மைனாவையும் சொல்றாங்க. நிச்சயம் கிடையாது. அதனாலயே இப்பல்லாம் அவ கிட்ட நான் பேசறதில்ல” என்ற மணிகண்டன், கூட வரும் ஃபைனலிஸ்ட்டாக ‘அசிம்’ பெயரைச் சொன்னதில் ஆச்சரியமில்லை. மைனஸையும் பிளஸ்ஸாக அசிம் மாற்றி விடுவாராம். ‘பசங்களுக்காக விக்ரமன் பேசினதில்லை’ என்று மணி குத்தலாகச் சொன்ன பாயின்ட்டை மறுத்த விக்ரமன் “அசிம் – அமுதவாணன் பிரச்னைல நான்தான் பேசினேன்” என்று விளக்கம் அளித்தார்.
‘நீங்க லெஃப்ட்ல பார்த்து பேசினீங்க... அதனால ரைட் இல்லை’ – அசிமின் வித்தியாசமான லாஜிக்
அடுத்து வந்த ஷிவின், “டாஸ்க், வீட்டு வேலை, கேம் எல்லாமே நல்லாப் பண்ணியிருக்கேன். முழு முயற்சி போட்டிருக்கேன். மத்தவங்க பிரச்னையைப் பத்தி பேசியிருக்கேன். தனிப்பட்ட விஷயம் வேற. கேம் வேறன்ற புரிதலோடு விளையாடியிருக்கேன். எனக்கு நான் உண்மையா இருந்திருக்கேன்” என்று சொல்லி முடிக்க, “நீங்க முழுக்க லெஃப்ட் சைட்லதான் பார்த்து பேசினீங்க... அதனால நீங்க பேசினது ரைட் இல்லை” என்று அசிம் மறுப்பு தெரிவித்தார். (அய்யகோ! இதெல்லாம் ஒரு காரணமா பாஸ்?!) “இந்த எண்பது நாட்கள்ல நடந்த விஷயங்களை நான் சொல்லிட்டு இருக்கேன். இந்த கொஞ்ச நேரத்துல இந்தப் பக்கம் பார்த்ததா பிரச்னை?!” என்று பதிலடி தந்த ஷிவின், கூட வரும் ஃபைனலிஸ்ட்டாக ‘விக்ரமன்’ பெயரைச் சொல்வார் என்பது எதிர்பார்த்ததுதான்.
அடுத்ததாக வந்தவர் விக்ரமன். எனவே இவருக்கும் அசிமிற்கும் நிச்சயம் ஒரு ஃபைட் நடக்கும் என்று பட்சி கூறியது. அது பிறகு உண்மையாகவும் ஆனது. விக்ரமன் சொன்னதாவது, “அசிமோட கோபம் மத்தவங்களைக் காயப்படுத்துது... இது அவரோட உத்தியா வெச்சிருக்காரு. ஏடிகே கிட்ட தனியா விமர்சனத்தைச் சொன்னா ஏத்துக்கறாரு. அதையே சபைல சொன்னா கோபப்படறாரு (சரியான பாயின்ட்!)" என்று தொடர “நான் மத்தவங்க பிரச்னையைப் பத்திப் பேசியிருக்கேன்” என்று ஆவேசமாக மறுப்பு தெரிவித்தார் அமுதவாணன். (எடிட்டிங் கேப். நாமாகத்தான் இந்த இடைவெளியைப் புரிந்து கொள்ள வேண்டும்).
“நாமினேஷன் பத்தி ஜனனி உங்க கிட்ட பேசினது உங்களுக்குத் தவறாப்படலையா?” என்று விக்ரமன் கேள்வியைக் கேட்க “நான் அதை ஃபாலோ பண்ணலை” என்று மழுப்பினார் அமுதவாணன். “அது சரிங்க. ஆனா நீங்க அதை கண்டிச்சீங்களா?” என்று விக்ரமன் மடக்க, அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் “நீங்க கூடத்தான் அசிமை ‘ஏய்...’ ன்னு சொன்னீங்க... அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்” என்று அமுதவாணன் சொன்னது நிச்சயம் எஸ்கேப்பிஸம். “ஆமாங்க சொன்னேன். 'தட்டுல காறித் துப்பி தரேன். சாப்பிடு’ன்னு ‘அந்த நபர்’ சொன்னதால கோபத்துல ‘ஏய்...’ன்னு சொல்லிட்டேன்” என்றார் விக்ரமன்.
பாயின்ட் இல்லாமல் ஒருமணி நேரம் பேசும் அசிம்
தன்னுடைய பெயர் விக்ரமனின் வாயால் மறைமுகமாக உச்சரிக்கப்பட்டது, அசிமிற்கு வசதியாகப் போய்விட்டது. மெஷின் கன் போல் வார்த்தைகளைத் தொடுக்க ஆரம்பித்தார். அசிமிடம் உள்ள ஒரு பழக்கம் என்னவெனில், சண்டையின் போது வார்த்தைகளைக் கோத்துக் கோத்து ஒரு மணி நேரத்துக்கு கூட மூச்சு விடாமல் பேசக்கூடிய திறமை இருக்கிறது. ஆனால் அதில் உருப்படியான பாயின்ட் ஏதாவது இருக்கிறதா என்பதைப் பூதக்கண்ணாடி வைத்துத் தேடித்தான் பார்க்க வேண்டும். இப்போதும் அசிமின் பேச்சு அப்படித்தான் இருந்தது.
“நீங்க ஆடியன்ஸ் கிட்ட தவறான விஷயத்தைப் பதிவு செய்ய முயற்சி செய்றீங்க விக்ரமன்... பழைய விஷயத்தை அநாவசியமா திருப்பிக் கிளர்றீங்க... ‘சாப்பிடுவீங்களா?’ன்னு கேள்விக்குறியோடதான் நான் பேசினேன். முற்றுப்புள்ளி வைக்கலை” என்று அசிம் வாதிட்டார். ஒருவரை நோக்கி மிக ஆபாசமான வார்த்தைகளைப் பேசிவிட்டு அதன் இறுதியில் கேள்விக்குறியை வைத்து விட்டால் அது வசையில்லை என்று ஆகிவிடுமா?! அவமதிப்பு இல்லை என்றாகி விடுமா? அசிமின் ஆட்சேபத்தில் லாஜிக் இல்லை.
“இது சர்ச்சையாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் பெயர் சொல்லவில்லை. நீங்க கேள்வியா சொல்லலை. சாப்பிடுன்னு சொன்னீங்க. வெளில போய் வீடியோவைப் போட்டுப் பாருங்க. அதனாலதான் நான் ‘ஏய்’ன்னு சொல்ல வேண்டியதாயிடுச்சு” என்று விளக்கம் சொல்லி முடித்தார் விக்ரமன். உண்மையில் இது அமுதவாணன் எழுப்பிய கேள்வி. ஆனால் விக்ரமன் விளக்கம் சொல்லியதோ அசிமிற்கு. இதன் இடையில் ஜனனி குறித்த கேள்விக்கு அமுதவாணன் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது. அசிமின் இடையீடு அமுதவாணனுக்கு செளகரியமாகப் போய்விட்டது என்று கூட சொல்லலாம். ‘தன்னுடன் இறுதி வரை பயணிக்கக்கூடிய போட்டியாளராக ஷிவினின் பெயரை’ விக்ரமன் சொன்னது எதிர்பார்த்ததுதான்.
ஷிவினின் பெயர் சொல்லப்படும் போதெல்லாம் ஏடிகே ஆட்சேபிப்பது ஒரு வழக்கம். “சண்டை முடிஞ்சவுடனே கைகுலுக்கிட்டு போறாங்க. அப்படில்லாம் ஒருத்தர் இருக்கவே முடியாது” என்று ஆட்சேபித்தார். அடுத்து வந்தாரய்யா அசிம். “நாள் ஒன்றுல இருந்து டாஸ்க்லாம் நல்லாப் பண்ணியிருக்கேன். நான் என்னதான் நல்லா பண்ணாலும் ‘பெஸ்ட்... வொர்ஸ் பர்பாமன்ஸ்' வரும் போது நான் கோபத்துல விடற வார்த்தைகளைத்தான் சொல்லி குத்திக் காண்பிப்பாங்க. நீங்க சொல்ற கருத்து கரெக்ட்டு. ஆனா சொல்ற வார்த்தைகள் சரியில்லைன்னு சிலர் சொல்லியிருக்காங்க. விக்ரமன் கூட கருத்து வேறுபாடு இருந்திருக்கு. அவர் தன்னோட கருத்துல பிடிமானமா இருக்கறதை நானே பாராட்டியிருக்கேன்.
‘வெளில மக்கள் பார்ப்பாங்க. கமல் சார் கேட்பாரு’ன்றதை நாம கொஞ்சம்தான் யோசிப்போம். ஆனா அவர் இதையே முழு நேரமும் திங்க் பண்றார். ஏத்துக்கற மனப்பான்மை அவர்கிட்ட இல்ல. அவர் கருத்து திணிப்பு செய்யற மாதிரி தோணுது. எனது குடுவையில் நிறங்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் பலர் இல்லங்களில் அவர்களின் உள்ளங்களில் நான் இருப்பேன் என்கிற நம்பிக்கையுண்டு” என்று ரைமிங்காக அசிம் பேசி முடித்தவுடன் பலத்த பாராட்டு கிடைத்தது. (விஷயமே இல்லாமல் அடுக்குமொழியில் பேசினால் நாம் மயங்கி விடுவோம் என்பது ‘பட்டிமன்ற’ டெக்னிக்) ‘அசிமின் கூட வரும் நபர்?...’ வேறு யார்? ‘மணிகண்டன்தான்!’
குடுவை டாஸ்க்கில் ஏடிகே, அசிம் வெற்றி!
‘கருத்து வேறுபாடு...’ என்கிற வார்த்தைகளை ‘கருத்தியல் ரீதியாக...’ என்று அசிம் தவறாகச் சொன்னதை விக்ரமன் திருத்தினார். ‘நமக்குள்ள என்ன கருத்தியல் ரீதியா இருக்கு?’ என்கிற கிண்டல் வேறு. "யாருடைய குடுவையில் மண் அதிகமோ அவரே வெற்றியாளர். யாருதுன்னு பார்த்து சொல்லுங்க” என்று பிக் பாஸ் அறிவிக்க, மக்களிடம் குழப்பம் ஏற்பட்டது. விக்ரமனும் ஷிவினும் ‘நாங்க வேற மாறி புரிஞ்சிக்கிட்டோம்’ என்று குட்டையைக் குழப்பினார்கள். ‘மண்ணு கீழே சிந்திக்கிடக்கு’ என்றார் மைனா. தன்னுடைய தவறான ஆட்சேபத்திற்குப் பிறகு மன்னிப்பு தெரிவித்தார் விக்ரமன்.
மூன்று குடுவைகளின் அளவுகள் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும் ஏடிகேவின் குடுவையில் நூலிழை அளவு அதிகமாக இருப்பதாக அமுதவாணன் சொல்ல, இந்த டாஸ்க்கில் ஏடிகே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. ‘கேள்வி கேட்ட விதம், விளக்கம் சொன்ன பாணி’ ஆகியவற்றை வைத்து இரண்டாவது வெற்றியாளரை பிக் பாஸ் அறிவிக்கச் சொன்னதில் ‘அசிம்’ தேர்வானார்.
பிறகு அதிர்ஷ்ட சக்கரத்தைச் சுற்றி பரிசுகளை வென்றார்கள். கேப்டன் அமுதவாணனுக்கு மட்டும் சாக்லேட் பரிசாக வழங்கப்பட “ஆஹா... தேவாமிர்தமா இருக்கு” என்று மற்றவர்களை வெறுப்பேற்றிச் சாப்பிட்டார்.
வேறென்ன? இந்த வாரம் ‘குடும்பத்தினரைச் சந்தித்த டாஸ்க்’ என்பதால், கமலின் பஞ்சாயத்து நாளில் ‘சென்டிமென்ட்’ பொங்கி வழியலாம். மண் குடுவை டாஸ்க் சர்ச்சை நிச்சயம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வார எவிக்ஷனிலும் ஓர் அதிரடி திருப்பம் இருப்பதாகத் தெரிகிறது. போதாக்குறைக்கு ‘தனலஷ்மியை சீக்ரெட் ரூமில் வைத்திருக்கிறார்கள்’ என்கிற வதந்தியும் உலவுகிறது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
from விகடன்
Comments