ஆட்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், வீட்டில் குரூப்பிஸம் குறையும் என்று பார்த்தால், இல்லை. கமல் அத்தனை கிண்டலடித்தும், அசிமிற்கு கண்மூடித்தனமான ஆதரவு தருவதை மணிகண்டன் நிறுத்தவில்லை என்பது ‘நாமினேஷன் கார்ட் கேமில்’ நன்கு தெரிந்தது.
இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தவர் ரச்சிதா மட்டுமே. ஆனால் இவர் மீது சொல்லப்பட்ட நியாயமான குறைகள் காரணமாக, முகத்தை தூக்கிக் கொண்டிருந்தது ஓவர். இவரை காந்தியோடு ஒப்பிட்டு கமல் வேறு புகழ்ந்து விட்டதால், சத்தியாகிரகப் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் போல.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘கோவா’ படத்திலிருந்து ஒரு ரகளையான பாடலுடன் நாள் 78 விடிந்தது. ‘சட்னில கல்லு இருந்தா கூட பரவாயில்லை. கிட்னில கல்லு இருக்கறது டேஞ்சர்.. பார்த்துக்க’.. என்று மைனாவும் மணிகண்டனும் ஏடிகேவிற்கு ‘மருத்துவ எச்சரிக்கை’ தந்து கொண்டிருக்க, ‘அடேய்.. இதையே காரணம் காட்டி என்னை நாமினேட் பண்ணிடாதீங்கடா. ஹெல்த்தை ஒரு காரணமா சொன்னா நான் ரொம்ப டென்ஷன் ஆயிடுவேன்’ என்று ஜாலியாக எச்சரித்தார் ஏடிகே.
தனது கொள்கை பரப்புச் செயலாளர் பணியை காலையிலேயே ஆரம்பித்து விட்டார் மணிகண்டன். “அசிம் எத்தனையோ தடவை விக்ரமனை பாராட்டியிருக்கார். ஆனா விக்ரமன் ஒருமுறை கூட அசிமை பாராட்டியதில்லை’ என்று அவர் சொல்ல, “இல்லையே.. நான் பார்த்திருக்கிறேனே.. ரெண்டு மூணு டாஸ்க்ல விக்ரமன் பாராட்டியிருக்கார்" என்று நேர்மையாக சாட்சி சொன்னார் மைனா. “நான் பார்த்தவரைக்கும் இல்லை” என்று சுருதி இறங்கினார் மணி.
மனோபலத்தால் அசிமை வென்ற அமுதவாணன்
வீட்டின் தலைவருக்கான போட்டி ஆரம்பித்தது. ரேங்கிங் டாஸ்க்கில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த அசிமும் அமுதவாணனும் களத்தில் இறங்கினார்கள். ‘தலைவர் போட்டியில் தசை வலு முக்கியமாக இருக்கக் கூடாது’ என்று கமல் சொல்லியும் வழக்கம் போல் போட்டி அப்படியாகவே அமைந்தது. இருவரும் கயிற்றால் பிணைக்கப்படுவார்கள். ஒருவரையொருவர் எதிர்திசையில் இழுத்துக் கொண்டு பரிசுப் பொருட்களை பெட்டியில் சேகரிக்க வேண்டும். யார் அதிகம் சேர்க்கிறார்களோ, அவரே தலைவர்.
‘உடல் வலிமையை விடவும் மனவலிமைதான் எப்போதும் ஜெயிக்கும்’ என்கிற நிதர்சனம் இந்தப் போட்டியில் நிரூபணமானது. கடந்து போன தலைவர் போட்டிகளில் எல்லாம் தோற்றுப் போன அமுதவாணன், ‘வீட்டின் தலைவர் ஆகாததுதான் என்னுடைய ஒரே ஏக்கம்’ என்று சனிக்கிழமை எபிசோடில் கமல் முன்பாக சொல்லியிருந்தார். எனவே அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இது. ஆனால் அவரை விடவும் உடல் பலம் அதிகமுள்ள அசிமை வெல்ல முடியுமா?
ஆட்டம் ஆரம்பித்த போது அசிமின் ஆக்கிரமிப்பே நிறைய இருந்தது. புயல் காற்றில் சிக்கிய செடி மாதிரி, அசிம் இழுத்த இழுப்பிற்கே சென்று விடுபட முடியாமல் போராடினார் அமுது. ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை மாறியது. ‘தலைவர் ஆகியே தீருவது’ என்று அமுதவாணனுக்குள் மனஉறுதி தோன்றியிருக்க வேண்டும். விட்டுத் தராமல் போராடினார். ஆரம்பத்திலேயே தன் சக்தியையெல்லாம் செலவழித்து விட்ட அசிம், ஒரு கட்டத்தில் சோர்வடைந்து ‘பொதோ்’ என்று கீழே சாய்ந்து விட, மிக எளிதாக அதிக எண்ணிக்கையிலான பரிசுப் பொருட்களை சேர்த்து வெற்றி பெற்றார் அமுதவாணன். (ஆனால் அவருக்கு பிறகு ஆப்பு காத்திருந்ததுதான் சோகம்!)
தலைவர் ஆகி விட்டாலும் அடக்கமான தொனியில் பேசிய அமுது, “ரொம்ப நாள் ஆசை இது. அசிம் மாதிரி ஸ்டிராங் பிளேயர் கிட்ட மோதி ஜெயிச்சது மகிழ்ச்சி’ என்று சொல்லி ‘அமுதவாணனாகிய நான்..’ என்று பாகுபலி ரேஞ்சிற்கு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவியேற்றார். எவ்விதப் பிரச்சினையுமில்லாமல் அணிகள் பிரிக்கப்பட்டன.
‘ஷிவினை விக்ரமன் இழுத்துட்டு போறாரு’ – மக்கள் கிண்டல்
‘ஸ்கிராட்ச் கார்டு’ போட்டியில் பெரும்பாலும் தண்டனைகள்தான் கிடைக்கிறது. என்றாலும் மனிதர்களுக்கு ஆர்வம் போகவில்லை. ஒருவேளை பரிசு கிடைத்து விட்டால்?! விக்ரமனும் ஷிவினும் ‘வெற்றியாளர்கள்’ என்று பொறிக்கப்பட்ட போர்டை பரபரவென்று கொலைவெறியுடன் தேய்க்க, விக்ரமன் வென்றார். ‘எங்கே.. பரிசு.. எங்கே பரிசு..’ என்று ஆவலாக காத்திருந்தவருக்கு கிடைத்ததோ சோதனை. ஷிவினுடன் சேர்த்து கைவிலங்கு மாட்டப்பட வேண்டுமாம். ‘ரெஸ்ட் ரூம் போகும் போது கூட’ என்று குறும்பாக லெட்டரை வாசித்து பிறகு திருத்தினார் கதிரவன்.
“பிக் பாஸ்.. தண்டனை அவருக்குத்தானே.. என்னை ஏன் அதுல கோத்து விடறீங்க. அவரை எங்கேயாவது கட்டிப் போடுங்களேன்” என்று சிணுங்கினார் ஷிவின். இருவரும் கைவிலங்கால் பிணைக்கப்பட்டவுடன் ஒட்டுமொத்த வீடே இவர்களை வேடிக்கை பார்த்து சிரித்தது. ‘வேகமா நடங்க விக்ரமன். இப்படி ஸ்லோவா நடந்தா எப்படி?’ என்று ஷிவின் வேடிக்கை காட்ட முயன்றது, அவருக்கே வினையாகப் போனது. ‘அப்படியா.. இருங்க வரேன்’ என்று அவரை தரதரவென இழுத்துக் கொண்டு வீடு முழுவதும் விக்ரமன் வேகமாக உலாத்தியது ஜாலியான குறும்பு. ‘நல்ல வேளை.. நான் பிழைத்துக் கொண்டேன்’ என்று பாட்டுப்பாடி சிரித்தார் கதிரவன்.
மக்கள் சற்று சந்தோஷமாக இருந்து விட்டால் பிக் பாஸிற்குப் பொறுக்காதே?! எனவே நாமினேஷன் ஆப்ரேஷனை கொலைவெறியுடன் ஆரம்பித்தார். ‘போட்டி இறுதிக் கட்டத்தை நோக்கி செல்லுவதால் யோசித்து நாமினேட் செய்யுங்கள்’ என்கிற எச்சரிக்கை வேறு. இந்த நாமினேஷன் பிராசஸ் ‘சீட்டுக்கட்டு விளையாட்டு’ போல, வித்தியாசமாக அமைந்தது. ஆனால் தலைவரான அமுதவாணனும் இதில் இருப்பார் என்பதுதான் அவருக்கான சோகம். (இதுக்காய்யா.. அத்தனை மல்லுக்கட்டினோம்?!)
வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் சீட்டுக்களில் சிவப்பு நிற அட்டை வந்தால், அதை வைத்து ஒருவரை நாமினேட் செய்யலாம். பச்சை அட்டை வந்தால் அதை வைத்து ஒருவரைக் காப்பாற்றலாம். மஞ்சள் அட்டை வந்தால் அதில் போடப்பட்டிருக்கும் ஸ்டேட்மெண்ட்டிற்குப் பொருத்தமான நபர் யார் என்பதை சொல்ல வேண்டும். சுவாரசியமாகவும் வில்லங்கமாகவும் அமைந்த இந்த நாமினேஷன் ஆட்டம்தான், இன்றைய நாளின் ஹைலைட்.
ரணகளமான நடந்த நாமினேஷன் ‘சீட்டுக்கட்டு’ விளையாட்டு
தனக்கு கிடைத்த ரெட் கார்டை வைத்து ஷிவினை நாமினேட் செய்து ஆட்டத்தை ரணகளமாக துவக்கினார் அசிம். “நீதிடா.. நியாயம்டா..ன்ற மாதிரியே பேசறாங்க. ஆனா அவங்க நியாயமா நடந்துக்கலை” என்பது அவர் சொன்ன காரணம். அடுத்த ரெட் கார்டை எடுத்த மணிகண்டன், அசிம் செய்ததையே தானும் செய்து ‘சிறந்த விசுவாசி’ என்பதை நிரூபித்தார். அவரும் ஷிவினையே நாமினேட் செய்தார்.
மைனாவிற்கு அடுத்தடுத்து மஞ்சள் அட்டைகள் வந்தன. சங்கடத்துடன் கேள்விகளை வீசினார். ‘என்னைப் பார்த்தா உங்களுக்குப் பயம்’ என்கிற கார்டை அமுதவாணனுக்கும், ‘பொய்யா நடிக்கற நபர்’ கார்டை ரச்சிதாவிற்கும் (இங்கதாங்க ஆரம்பிச்சது அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் விதை!). ‘நீங்க டாப் 5-ல இல்லை’ என்கிற கார்டை மணிகண்டனுக்கும் வழங்கினார் மைனா. இதற்கு அவர்கள் பதில் சொல்லத் தேவையில்லை என்பது விதி. அடுத்த வந்த ரெட் கார்டை அசிமிற்கு தந்தார் மைனா. ‘அசிமோட கேம் மாறிட்டே இருக்கு. புரிஞ்சுக்க முடியல’ என்பது அவர் சொன்ன சாதாரண காரணம்.
சீரியஸான முகத்துடன் இருந்த ஏடிகேவிற்கு அடுத்தடுத்து மஞ்சள் அட்டைகள் வந்தன. ‘எப்படி இத்தனை நாள் தாக்குப் பிடிச்சே?’ கார்டை ஷிவினுக்கும் ‘தனியா முடிவெடுக்கத் தெரியாது’ கார்டை அசிமிற்கும் தந்த ஏடிகே, அடுத்து வந்த ரெட் கார்டை ஷிவினுக்குத் தந்து விட்டு ‘எதிரே இருக்கறவங்களையும் பேச அனுமதிக்கணும். டாஸ்க் முடிஞ்சப்புறம் எப்படி சட்டுன்னு மாற முடியும்?!” என்று காரணம் சொன்னார். அடுத்ததாக அமுதவாணனுக்கு ரெட் கார்ட் வந்தது. அவர் அதை அசிமிற்கு சமர்ப்பணம் செய்து விட்டு ‘தொடர்ந்து முறையற்ற வார்த்தைகளை என்னிடம் பயன்படுத்துகிறார்’ என்று வேதனையான முகபாவத்துடன் சொன்னார்.
தனக்கு வந்த மஞ்சள் அட்டையை ரச்சிதாவிற்கு தந்த ஷிவின் “பின்னாடிதான் நிறைய பேசறாங்க” என்று சொன்ன காரணம், ரச்சிதாவின் முகத்தில் மாறுதலை ஏற்படுத்தியது. (உண்ணாவிரத காரணம் எண்.2). அடுத்து வந்த ரெட் கார்டை அசிமிற்கு தந்த ஷிவின் “இத்தனை வாரங்கள் கடந்தும் ஆசாமி மாறலை” என்கிற காரணத்தைச் சொன்னார். விக்ரமன் ரெட் கார்டை மணிகண்டனுக்கு தந்தார். அடுத்து நடந்தது ஒரு மினி ஆச்சரியம். தனக்கு வந்த பச்சை அட்டையை ஷிவினுக்குத் தந்து காப்பாற்றி பெருந்தன்மை காட்டினார் ரச்சிதா. “நீ டாப் 5-ல வரணும் மச்சான்” என்று சொல்லி மணிக்கு பச்சை அட்டையை தந்தார் அசிம். (நீங்க ஊதவே வேணாம் மோமெண்ட்!).
ஓகே.. மாறி மாறி இவர்கள் குத்திக் கொண்டதை இப்படியே விவரித்துக் கொண்டு போனால் சலிப்பாகி விடும். எனவே காரணங்கள் சொல்லப்பட்டதில் இருந்த சுவாரசிய சம்பவங்களை மட்டும் பார்க்கலாம்.
'விக்ரமன் கமல் மாதிரியே பண்றாரு’ – மணிகண்டன் குற்றச்சாட்டு
‘இந்த ஷோவில் போட்டியாளராக இருக்கத் தகுதியில்லை’ என்கிற காரணத்தை விக்ரமன் மீது போட்டார் மணிகண்டன். இதற்காக கார்டை அவர் தூக்கியெறிந்த காட்சி நெருடலை ஏற்படுத்தியது. ‘விக்ரமன் பப்ளிசிட்டி ஸ்டண்ட் பண்றாரு.. இதுவே அவருக்கு செட் ஆயிடுச்சு. போல் கமல் மாதிரியே பண்றாரு... ‘மக்கள் பார்க்கறாங்க.’ன்றதையே தொடர்ந்து சொல்றாரு’ என்று சொல்லி ரெட் கார்டை விக்ரமனுக்கு தந்தார் மணிகண்டன். ஒருவர் அவமதிக்கும் போது, எதிரில் இருப்பவர் அதை கடுமையாக மறுத்தும் கூட அவமதிப்பு தொடர்ந்தால், ‘மக்கள் பார்க்கறாங்க’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? ஒருவருக்கு, எதிராளியால் நிறைய கஷ்டம் வரும் போது ஏற்படும் மனஉளைச்சலில் ‘எல்லாம் கடவுள் பார்த்துட்டு இருக்கான்’ என்று சொல்லி ஆறுதல் அடைவதில்லையா? மணி தன்னுடைய ஆட்டத்தை ஆடாமல், அசிமிற்கு ஆதரவு தருவதையே செய்து கொண்டிருந்தால் மக்களின் கூடுதல் அதிருப்தியைச் சம்பாதிப்பார்.
‘உங்களுக்கு கிடைக்கிற வாக்கு எல்லாம் வெளியில் ஏற்கெனவே இருக்கற புகழினால்தான்’ என்கிற காரணம் அமுதவாணனுக்கு வர, அதை ரச்சிதாவிற்கு தந்து மகிழ்ந்தார். (உண்ணாவிரத காரணம் எண்.3). “முன்னாள் சீசன் போட்டியாளர் மாதிரி தன்னை காண்பிச்சுக்கறார்’ என்கிற காரணம் ஷிவினுக்கு வந்த போது அதை அசிமிற்குத் தந்தார். ‘யாரை மாதிரின்னு சொல்லுங்க’ குறுக்கிட்டார் பிக் பாஸ். (பய புள்ள!.. எப்படி கோத்து விடுது பாரு!). ‘பாலா மாதிரி’ என்று ஷிவின் சொன்னவுடன் அசிமின் முகம் இஞ்சி கசாயம் குடித்தது மாதிரி ஆகி விட்டது. ‘Seriously?’ என்று முகத்தைச் சுளித்தார் அசிம். ஆனால் ஷிவின் வைத்தது ஒரு நல்ல செக்மேட் என்பது பின்னணி காரணங்கள் புரிந்தவர்களுக்குத் தெரியும். (பாலா – ஷிவானி – அசிம்).
‘ஏமாத்தி ஜெயிக்கறது உங்களுக்குப் புதுசா என்ன?’ என்கிற காரணத்தை அசிமிற்கு தந்த விக்ரமன், அடுத்தடுத்தாக ரெட் கார்டையும் தந்து அதிரடி தாக்குதல் நடத்தினார். ‘மற்றவர்களை அவமானப்படுத்தி கீழே இறக்கறாரு’ என்பது அவர் சொன்ன காரணம். ‘இந்த மாதிரி விளையாடறதுக்கு ஆடாமலேயே இருக்கலாம்’ என்கிற காரணம் ரச்சிதாவிற்கு வர அதை அவர் அசிமிற்குத் தந்தார். அடுத்ததாக ரெட் கார்டையும் தந்து ‘அசிம் கிட்ட பேசவே பயமா இருக்கு. எங்கே அவமானப்படுத்திவாரோன்னு’ என்பது ரச்சிதா சொன்ன காரணம். தொடர்ந்து அடிவாங்கியதால் அசிமின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது.
‘பொட்டிக்காக காத்திருக்கும் ஆசாமி யாரு?’ என்கிற காரணம் கதிரவனுக்கு வர, அவர் அதை மணிகண்டனிடம் குறும்பாகத் தள்ளியதால் இறுக்கம் குறைந்து அனைவரும் சிரித்தார்கள். ‘பிஸிக்கல் ஸ்ரெட்ங்க்த்தால் மட்டுமே போட்டியில் நீடிக்கறீங்க” என்கிற காரணத்தை அமுதவாணனுக்கு கதிரவன் தந்தது அப்பட்டமான போங்காட்டம். அசிம் மற்றும் மணிகண்டனோடு ஒப்பிடும் போது அமுதவாணன் பலவீனமானவர். ‘தேவையில்லாத ஆணி’ என்கிற காரணத்தை அசிமிற்கு கதிரவன் தந்தார்.
கதிரவனை கோபித்துக் கொண்ட ஏடிகே
இதற்கு இடையில் ஏடிகேவிற்கு ஏற்பட்ட அவஸ்தை காரணமாக அவர் கழிப்பறைக்கு ஓட, பின்னாடியே அமுதவாணனும் சென்றார். ஏடிகே திரும்பி வந்த போது ‘அமுதண்ணாவிற்கும் ஸ்டோனா?’ என்று கதிரவன் சிரித்துக் கொண்டே கேட்டதால் ஏடிகேவிற்கு கோபம் வந்து விட்டது. ‘என் நோயை வெச்சு கிண்டல் பண்ணாதீங்க’ என்று சீரியஸான முகத்துடன் ஆட்சேபித்தார். கதிரவன் செய்தது அப்படியொன்றும் புண்படுத்தும் கிண்டல் அல்ல. “ஓகே.. நீங்களும் அப்ப ‘பாடி ஷேமிங்’ பண்ணாதீங்க” என்று கதிரவன் சொல்ல இருவருக்கும் மௌனமான சண்டை நடந்தது. இதை கதிரவன் கையாண்ட விதம் கூலாக இருந்தது.
வளர்த்துவானேன்..! இந்த நாமினேஷன் கார்டு விளையாட்டில் அதிக பட்ச சிவப்பு அட்டை வாங்கிய சாதனையை அசிம் பெற்றார். அவர் பெற்ற அட்டைகளின் எண்ணிக்கை ஆறு. மற்றவர்கள், 3, 2,1 என்கிற ரீதியில் பெற்றார்கள். என்றாலும் “உங்க எல்லாரையும் ஒட்டுமொத்தமா ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன்” என்கிற நாட்டாமையின் தீர்ப்பு மாதிரி, ரெட் கார்ட் பெற்ற அனைவரையும் நாமினேஷன் லிஸ்ட்டில் சேர்த்து மகிழ்ந்தார் பிக் பாஸ். இதிலிருந்து தப்பித்தவர் ரச்சிதா மட்டுமே. அவருக்கு ஒரு ரெட் கார்ட் கூட வரவில்லை. 'ஹே.. எப்புட்ரா’ என்று மற்றவர்கள் ஆச்சரியப்பட “ஆமாம். என்னை கழுவி கழுவி ஊத்தினீங்க.. ரெட் கார்ட் வராதததுக்கு சந்தோஷமா பட முடியும்?!’ என்று சிணுங்கினார் ரச்சிதா.
நாமினேஷன் ஆட்டம் முடிந்ததும் விக்ரமனை தனியாக ஓரங்கட்டிய மைனா, ‘டாஸ்க் முடிஞ்சதும் விஷின் கூடத்தான் சண்டையை மறந்துட்டு உடனே பேசினாங்க. ஆனா என் மேல மட்டும் ஏன் காரணம் சொன்னீங்க?” என்று காரணம் கேட்க “அவங்க முதன்முறையா பண்ணாங்க. நான் உங்க Fan boy-ங்க..” என்றெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆனார் விக்ரமன். (‘மத்தபடி ஐ லவ் யூங்க மோமெண்ட்’). இந்தச் சமயத்தில் ஷிவின் வந்து விளக்கம் சொல்லியும் மைனா அதை ஏற்கவில்லை
ரச்சிதா போட்ட ஓவர் சீன்
‘முகத்துக்கு நேரா பேசாம பின்னாடி பேசறாங்க’ என்கிற காரணத்தை ரச்சிதாவின் மீது ஷிவின் சொன்னதால், ‘உம்’மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலைந்தார் ரச்சிதா. ‘காரணத்தை விளக்கட்டுமா” என்று ஷிவின் வந்து கேட்டாலும் மௌனம்தான். மற்றவர்கள் துக்கம் விசாரிக்க வந்தாலும் மௌனத்தையே பதிலாகத் தந்தார். பிரியாணி வந்தாலும் மௌனம்தான். அமுதவாணன் தன் தரப்பை விளக்க வந்தாலும் பேசவில்லை. எபிசோடின் இறுதியில் அசோகவனத்து சீதை மாதிரி ரச்சிதா சோகத்துடன் அமர்ந்திருந்தது நிச்சயம் ஓவர். ஆக்சிடெண்ட்ல கை,கால் அடிபட்டவன் எல்லாம் வலியை மறந்துட்டு ஜாலியாக வார்டில் உலவிக் கொண்டிருக்க, நகச்சுத்தி வந்தவன் “என்னை ICUல அட்மிட் பண்ணுங்க’ என்று வலியால் துடிப்பதைப் போல் இருந்தது, ரச்சிதாவின் செய்கை.
இந்த வார வீக்லி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். போன சீசன்களில் வந்த கடிகார டாஸ்க். இனி மக்களுக்கு தூக்கம் என்பதே கிடையாது. தூக்கம் இல்லாத எரிச்சலில் அவர்கள் கூடுதல் கொலைவெறியை அடைவார்கள். பிக் பாஸிற்கு ஜாலிதான்.
from விகடன்
Comments