அவள் விருதுகள்: `திருமணத்துக்குப் பின் நடிக்க கணவர் அனுமதிக்கணும்' - பிரியங்கா மோகன்|#Visual story

பத்மா சுப்ரமண்யம் - தமிழிசை செளந்தரராஜன்.

அவள் விருதுகளின் தொடர்ச்சி...

நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர், ஆசிரியர், எழுத்தாளர் எனப் பன்முகங்கள்கொண்ட, பத்மஸ்ரீ பத்மா சுப்ரமண்யத்துக்கு `தமிழன்னை விருது’ வழங்கினார், தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். 

நடனம்

``எங்கள் நடனப் பள்ளியில் மீனவர் மகள், கொத்தனார் மகள், நாடோடி இனத்தைச் சேர்ந்தவரின் மகள் என, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும், நடனம் பயிலுகிறார்கள். நடனம் எலைட் மக்களுக்கானது மட்டுமே அல்ல’’ என்றார் பத்மா சுப்ரமண்யம். 

கன்யா பாபு - இயக்குநர் ஞானவேல்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக, வெளிநாடுகளில் வீட்டு வேலை பார்ப்பதற்காக கடத்தப்பட்ட, விற்பனை செய்யப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் மீட்டுக்கொண்டிருக்கும் கன்யா பாபுவுக்கு `செயல் புயல்’ விருது வழங்கினார், `ஜெய் பீம்’ பட இயக்குநர் ஞானவேல்.

விருதைப் பெற்றுக்கொண்ட கன்யா, ``குழந்தைகளுக்குப் பிச்சையிடாதீர்கள். சாப்பிடக் கொடுங்கள் போதும். நீங்கள் அக்குழந்தைகளுக்குப் பிச்சையிட்டால், அவர்களுக்குப் பின்னால் இருக்கிற கறுப்பு உலகம்தான் கொழுத்து வளரும்’’ என்று எச்சரித்தார்.

பிரியங்கா மோகன் - விஷ்ணு விஷால்.

வெள்ளித்திரையில் மிளிர்ந்து கொண்டிருக்கும் பிரியங்கா மோகனுக்கு `யூத் ஸ்டார்’ விருது வழங்கினர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் `கட்டா குஸ்தி’ திரைப்பட இயக்குநர் செல்லா அய்யாவு ஆகியோர். 

ப்ரியங்கா மோகன்

வருங்கால கணவர் பற்றிய கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, ``என்னோட வருங்கால கணவர் நம்பிக்கைக்குரியவராக, பெண்களுக்கு மரியாதை அளிப்பவராக, என் புரொஃபஷனின் வேல்யூ தெரிந்து திருமணத்துக்குப் பின், என்னை நடிக்க அனுமதிப்பவராக இருக்க வேண்டும்’’ என்றார்.

ரேவதி - சுபா - ஷைனி வில்சன்

மதுரையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் ஒலிம்பிக் கனவுகளுடன் தடகளத்தில் தடதடத்துக் கொண்டிருக்கும் ரேவதிக்கும் சுபாவுக்கும் `சிங்கப் பெண்’ விருது வழங்கினார் ஓய்வுபெற்ற இந்திய விளையாட்டு வீராங்கனை ஷைனி வில்சன்.

ரேவதி - சுபா

அவர் பேசுகையில், ``நான் கல்யாணமான ஒரு வாரத்துல தடகளத்துல தங்கம் வாங்கினேன். குழந்தை பிறந்து 3 மாசத்துக்குப் பிறகுதான் ஏஷியன் சாம்பியன் ஆனேன்’’ என்றவர், ரேவதி மற்றும் சுபாவிடம், ``அடுத்த ஒலிம்பிக்ல ஃபைனலுக்காவது வரணும்’’ என்று உற்சாகப்படுத்தினார். 

சாந்தலா ரமேஷ் - ஷைனி வில்சன்.

தொடர்ந்து சுற்றுச்சூழல் போராளி சாந்தலா ரமேஷுக்கும் `இளம் நம்பிக்கை’ விருது வழங்கி வாழ்த்தினார் ஷைனி வில்சன். 

சாந்தலா

சாந்தலா பேசுகையில், ``இந்த ஆற்றில் ஏன் இப்போ தண்ணியில்லங்கிற கேள்வியில்தான் என்னோட இந்தப் பயணம் ஆரம்பிச்சது. வெப்பமயமாதல் காரணமா உலகம் அழியுது; அதைத் தடுக்க உலகத் தலைவர்கள் எந்த முயற்சியும் எடுக்கலனு அவர்களைத் திட்டுறதை விட்டுட்டு, பொறுப்பை இளைஞர்கள் கையில எடுக்கணும்’’ என்றார் அழுத்தமாக.  



from விகடன்

Comments