The Kashmir Files: `மோசமான பிரசார தன்மை கொண்ட படம்' - விழா மேடையில் ஆதங்கப்பட்ட இஸ்ரேல் இயக்குநர்

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், 'தி காஷ்மீர் பைல்ஸ்'  திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி வெளியானது. இப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது. 
தி காஷ்மீர் பைல்ஸ்

இந்நிலையில், கோவாவில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நிறைவு விழாவில் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) ஜூரி மற்றும் விழா தலைவருமான நடவ் லாபிட், 'தி காஷ்மீர் பைல்ஸ்' போட்டிப் பிரிவில் அனுமதித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் இந்திய பனோரமா பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நவம்பர் 22 அன்று திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் படத்தில் நடித்துள்ள அனுபம் கேர் கலந்து கொண்டார்.

நிறைவு விழாவில் பேசிய நடவ் லாபிட், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை  போட்டிப் பிரிவுக்கு, இப்படம் பொருத்தமற்றது. இது ஒரு மோசமான பிரசார தன்மை கொண்ட திரைப்படமாகும்.  இந்த திரைப்பட விழா, இந்த உண்மையான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும். மேலும், இந்த மேடையில் உங்களுடன் இந்த உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறேன்.' என்று கூறியுள்ளார்.



from விகடன்

Comments