``இறந்தது யானை; நான் நலமாக இருக்கேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்!" - நடிகை லட்சுமி

நடிகை லட்சுமி, இன்று காலை இறந்துவிட்டதாக செய்திகள் பரவின. கோடம்பாக்கதில் உள்ள பலரும் அதிர்ச்சியானார்கள்.

தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆரின் படங்களில் கதாநாயகியாக கோலோச்சியவர் லட்சுமி. பின்னர் குணசித்திர நடிகையாகவும் திகழ்கிறார். தெலுங்கில் நாகார்ஜூனா, நானி இவர்களின் படங்களில் அம்மாவாகவும் நடித்துள்ளார். இப்போதும் வெப்சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலை முதல் லட்சுமி உடல்நிலை பற்றி வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. விசாரித்ததில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் யானையின் பெயர் லட்சுமி. அந்த யானை இன்று இறந்துவிட்டது. அந்த லட்சுமி இறந்த செய்திதான், நடிகை லட்சுமியாக நினைத்து வதந்தியாகிவிட்டது.

இதுகுறித்து திரையுலகினர், மீடியா என பலரும் லட்சுமியை தொடர்புகொண்டு விசாரித்தனர். பலரும் அவருக்கு போன் செய்ததில் லட்சுமியே ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது,

லட்சுமி

''இன்னிக்கு காலையில இருந்து எனக்கு எல்லாரும் போன் பண்ணிட்டு இருக்காங்க. இன்னிக்கு எனக்கு பிறந்த நாள் கூட இல்லியே அப்புறம் ஏன் இத்தனை பேர் கூப்பிடுறாங்னு விசாரிச்சா, 'நடிகை லட்சுமி இறந்துட்டதாக' ஒரு செய்தி போயிட்டிருக்காம். பொறந்தால் இறந்துதானே ஆகணும். இதுக்கெல்லாம் பயப்படப்போறதில்ல. கவலைப்படவும் போறதில்ல. ஆனா, இவ்ளோ வேலை வெட்டி இல்லாதவங்க, இதை பரப்பிட்டு இருக்காங்களேனு நினைக்கறப்ப நாம திருந்தவே மாட்டோமான்னு நினைக்கத் தோணுது.

இந்த செய்தி கேள்விப்பட்டதும் பல பேர் கவலைப்பட்டு அக்கறையா விசாரிக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். எனக்கு ஒரு கவலையும் இல்லை. கிறிஸ்துமஸ், புது வருஷத்துக்காக இப்ப ஷாப்பிங் வந்திருக்கேன். சந்தோஷமாகத்தான் இருக்கேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள், வணக்கங்கள்'' என்று அதில் பேசியிருக்கிறார்.



from விகடன்

Comments